பக்கங்கள்

ஆத்திசூடி வெண்பா - 10

இதழ் - 12                                                  இதழ் - ௧௨

நாள் : 17-07-2022                                           நாள் : ௧௭-௦௭-௨௦௨௨

ஆத்திசூடி (ஒளவை)

ஒப்புரவு ஒழுகு


உரை:
உலக வழக்கத்தை அறிந்து அதற்கேற்றவாறு நட.

 

ஆத்திசூடி வெண்பா (இராமபாரதி)
பாடல் - 10:

    தாரணிபோ லெவ்வுயிருந் தாங்குந் தகைமையதாச்
    சீரணிந்து நாளுஞ் சிறந்தோங்க - ஆரந்
    தழைந்தபுகழ்ப் புன்னைவனத் தாளாளா யார்க்குங்
    குழைந்தொப் புரவொழு கு

உரை:
     மாலைகள் அணிந்துள்ள புன்னைவனநாததெனும் தாளாளனே! அனைத்து உயிர்களையும் தாங்கும் நிலம்போல நீயும் பெருமையுற்று நாள்தோறும் மேன்மையுற வேண்டுமெனில் யாரிடத்தும் நெருங்கி உறவாடி உலக வழக்கறிந்து நடந்துகொள்.


விளக்கம்:
     தாரணி - உலகம். நிலம் வேற்றுமை கருதாது அனைத்து உயிர்களையும் தாங்கி நிற்பதால் பெருமை பெறுகிறது என்பதை “தாரணிபோல் எவ்வுயிரும் தாங்கும் தகைமை” என்றார். தகைமை - தன்மை. “அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை இகழ்வார்ப் பொறுத்தல் தலை” (குறள், 151) என்பது வள்ளுவர் கூற்று. குழைந்து - வேறுபாடு பாராது நெருங்கி உறவாடல். ஒப்புரவு - உலக நடை. ஒற்றுமை என்றும் பொருள் கொள்க. யாரிடத்தும் வேற்றுமை பாராது உறவாடி ஒற்றுமையுணர்வுடன் நடந்துகொண்டால் நாளும் பெருமை வளர்ந்தோங்கும் எனினுமாம். இவ்வெண்பாவில் 'கதை' இடம்பெறவில்லை.


கருத்து:
     உலக வழக்கத்தை அறிந்து நடந்து கொண்டால் பெருமை வளரும். ஒற்றுமையுடன் ஒட்ட ஒழுகினால் புகழ் பெருகும் என்பது வெண்பாவின் மையக்கருத்து.



( தொடர்ந்து சிந்திப்போம் . . . )

முனைவர் இரா. கோகுல்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 641020



No comments:

Post a Comment