பக்கங்கள்

ஆத்திசூடி வெண்பா – 100

இதழ் - 103                                                                                          இதழ் - 0
நாள் : 14-04-2024                                                                            நாள் : -0-௨௦௨


ஆத்திசூடி (ஔவை)
                                     " வித்தை விரும்பு 
 
உரை
        கல்வியெனும் நற்பொருளை விரும்பு.

ஆத்திசூடிவெண்பா (இராமபாரதி)

பாடல் – 100
       வள்ளுவரைக் கல்வியன்றோ வண்டமிழ்ச்சங் கஞ்சயிக்கத்
       தெள்ளுதமிழ் நூலுதவி செய்ததெல்லாம் – உள்ளதன்றோ
       சந்திரனே புன்னைவனத் தாளாளா பேரறிவாம்
       புந்தியினில் வித்தைவிரும்பு.

உரை
    சந்திரனே! புன்னைவனத் தாளாளா! திருவள்ளுவரை அவர்பெற்ற கல்வியே தமிழ்ச்சங்கப் புலவர்களை வாதில் வென்று திருக்குறள் என்னும் நூலை உலகத்திற்கு அளித்தது என்பதெல்லாம் வழக்கிலுள்ள செய்திகள்தானே. ஆதலால் பேரறிவுடைய நினது புத்தியினில் வித்தையினை விரும்பு.

விளக்கம்
    வண்டமிழ்ச் சங்கம் – மதுரைத் தமிழ்ச் சங்கம். வண் – வளமை, தமிழ் அங்கு வளமாக நிறைந்து வளர்ந்தமையைச் சுட்டியது. உலகத்திற்குக் குளிரொளியைத் தந்து மகிழ்விக்கும் நிலவுபோல் தனது ஈரநெஞ்சத்தினால் மக்களுக்கு நன்மைசெய்து மகழ்ச்சியை அளிப்பதனால் புன்னைவன நாதனாகிய அரசனைச் சந்திரன் என்றார். புந்தி – புத்தி, கல்வி புத்தியிற் பதிந்து செயலுக்கு வருவதனால் பேரறிவாம் புந்தி என்றார். வித்தை – கல்வி, எழுத்துக் கல்வி மட்டுமல்லாது இசை, நடனம், ஓவியம், படைக்கலங்களைக் கையாளுதல் உள்ளிட்ட அனைத்துவகை கலைகளையும் குறித்தது.

திருவள்ளுவர் கதை
 புலைத்தொடர்புடையராயிருந்தும் வள்ளுவர் தம்மிடமிருந்த கல்வி மகத்துவத்தினாலே மதுரைச் சங்கத்திலே போய்ச் சங்கப்புலவர்களையும் வென்று சங்கப்பலகையும் பெற்றுத் தமதுநூலாகிய திருக்குறளையும் அரங்கேற்றிச் சங்கப்புலவராற் பாயிரமும் பெற்றார்.

கருத்து
  கல்வியை விரும்புக என்பது பாடலின் மையக்கருத்தாகும்.

தொடர்ந்து சிந்திப்போம் . . .

முனைவர் இரா. கோகுல்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 641020

No comments:

Post a Comment