பக்கங்கள்

ஆத்திசூடி வெண்பா – 101

இதழ் - 104                                                                                           இதழ் - 0
நாள் : 21-04-2024                                                                             நாள் : -0-௨௦௨


ஆத்திசூடி (ஔவை)

” வீடுபெற நில் ”
உரை
    முத்தியைப் பெறுவதற்கான ஞானவழியில் முனைந்து நில்.

ஆத்திசூடிவெண்பா (இராமபாரதி)

பாடல் – 101
                நிலையா வுடல்பொரு ணீரி னிறைகஞ்சம்
                மலரிலைபோ லெத்தனைநாள் வாழ்த்தும் – இலகுபொருள்
                பத்தியெனும் புன்னைவனப் பார்த்திவா சனகனைப்போல்
                நித்தியமாம் வீடுபெற நில்.
உரை
    புன்னைவனப் பார்த்திவா! உடல் பொருள் என்பன நிலையில்லாதன. நீரில் நிறைந்திருக்கும் தாமரைமலரிலைபோல் எத்தனை நாள் வாழ்ந்தும் வாழ்வை விளக்கம்பெறச் செய்யும் பொருள் பத்தி என்றுணர்ந்து வாழ்ந்த சனகனைப் போல் நிலையான பொருளான வீடுபேற்றை பெறுவதற்கான வழிகளிலே முனைந்து நில்.

விளக்கம்
    தாமரை மலரிலைபோல் – நீரில் வாழ்ந்தும் நீர் ஒட்டாத தாமரை இலை. அதுபோல உலகத்தில் அரசராகக் கோலோச்சியும் உலகப்பற்று சிறிதும் இல்லாத சனகரை இங்கு உவமையாக்கினார். இலகுதல் – விளங்குதல். நித்தியம் – நிலையான. வீடு – முத்தி, மோட்சம். 

கருத்து
    ஞான வழியில் என்றும் பயணப்பட வேண்டும் என்பது பாடலின் மையக் கருத்தாகும். 

தொடர்ந்து சிந்திப்போம் . . .

முனைவர் இரா. கோகுல்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 641020

No comments:

Post a Comment