இதழ் - 105 இதழ் - ௧0௫
உரை
நாள் : 28-04-2024 நாள் : ௨௮-0௪-௨௦௨௪
ஆத்திசூடி (ஔவை)
” உத்தமனாய் இரு ”
அறநெறியில் நிற்பவனாய் வாழ்.
ஆத்திசூடிவெண்பா (இராமபாரதி)
பாடல் – 102
வேத வியாசன் விதுர னுருப்பசிதன்
காதன்மைந்த னான கனவசிட்ட – னீதியைப்பார்
நேயத்தாற் புன்னைவன நீதிபா தாரணியி
லேயுத் தமனா யிரு.
உரை
புன்னைவன நீதிபா! வேதங்களைத் தொகுத்தளித்த வியாசர், விதுரன், உருப்பசியின் அன்பிற்கினிய மகனான வசிட்டன் ஆகியோர் அறநெறியில் வழுவாது நின்றதைப் பார். ஆதலால் நீயும் நேயத்தால் இவ்வுலகில் உத்தமனாய் வாழ்வாயாக.
விளக்கம்
வேத வியாசன் – வேதங்களைத் தொகுத்தளித்தவர், மகாபாரதத்தை இயற்றியவர். விதுரன் – மகாபாரதத்தில் வரும் கதாப்பாத்திரம். திருதராஷ்டிரனின் இளவல். அம்பிகா, அம்பாலிகாவின் பணிப்பெண்ணின் மகன். உருப்பசி – ஊர்வசி. வசிட்டன் – வசிஷ்டன். சப்தரிஷிகளில் ஒருவர். அருந்ததியின் கணவர். பிரம்மரிஷி. நேயம் – அன்பு. தாரணி – உலகம். உத்தமன் – அறவொழுக்கம் உடையவன்.
கருத்து
அறவழியில் வாழ்க்கை நடத்த வேண்டும் என்பது பாடலின் மையக்கருத்தாகும்.
தொடர்ந்து சிந்திப்போம் . . .
முனைவர் இரா. கோகுல்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 641020
No comments:
Post a Comment