இதழ் - 107 இதழ் - ௧0௭
நாள் : 12-05-2024 நாள் : ௧௨-0ரு-௨௦௨௪
ஆத்திசூடி (ஔவை)
” வெட்டெனப் பேசேல் ”
கத்திவெட்டினைப் போல் யாரிடமும் கடினமாகப் பேசாதே.
ஆத்திசூடிவெண்பா (இராமபாரதி)
பாடல் – 104
தருமருயர் வேள்வி தனிற்சிசுபா லன்பார்த்
தரியைநிந்தை சொல்லி யழிந்தான் – தெரிவதன்றோ
பார்புகழும் புன்னைவன பார்த்திபா மேலோரைச்
சீர்மைதப்பி வெட்டெனப்பே சேல்
உரை
உலகம் புகழும் புன்னைவன பார்த்திபனே! தருமர் செய்த மேலான வேள்வியில் கலந்துகொண்ட சிசுபாலன் ஸ்ரீகிருஷ்ணரை பலவாறு நிந்தனை சொல்லி இகழ்ந்து அவரால் அழிந்துபோனது யாவரும் அறிந்ததன்றோ. அதனால் எக்காரணம் கொண்டும் மேலோரை ஒழுக்கம் தப்பிக் கடுமையாகப் பேசாதே.
விளக்கம்
தருமர் – யுதிஷ்டிரர். வேள்வி – யாகம். உயர்வேள்வி – இராசசூய யாகம். சிசுபாலன் – மகாபாரதத்தில் வரும் கதாப்பாத்திரம். ஸ்ரீகிருஷ்ணரால் கொல்லப்பட்டவர். அரி – திருமால், ஸ்ரீகிருஷ்ணர். நிந்தை – இகழ்ச்சி. பார் – உலகம். சீர்மை – ஒழுக்கம்.
சிசுபாலன் கதை
சேதி நாட்டின் அரசனும் தமகோசன் என்பவனின் மகனுமான சிசுபாலன் என்பவன் தருமருடைய இராசசூய யாகத்தில் ஸ்ரீகிருஷ்ணருக்கு அக்கிரபூசை செய்யப்பட்டதென்று அவரை நிந்தித்தான். அதனால் அவரால் கொல்லப்பட்டான்.
கருத்து
பெரியவர்களிடம் கடுமையாகப் பேசக்கூடாது என்பது பாடலின் மையக்கருத்தாகும்.
தொடர்ந்து சிந்திப்போம் . . .
முனைவர் இரா. கோகுல்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 641020
No comments:
Post a Comment