இதழ் - 108 இதழ் - ௧0௮
நாள் : 19-05-2024 நாள் : ௧௯-0ரு-௨௦௨௪
ஆத்திசூடி (ஔவை)
” வேண்டிவினை செயேல் ”
விரும்பி தீவினைகளில் ஈடுபடாதே.
ஆத்திசூடிவெண்பா (இராமபாரதி)
பாடல் – 105
ஆடாசாய் வேந்தாடா யாற்றூரும் வாசமதாய்த்
தேடுமிடைக் காடருரை செய்ததுபார் – நீடழகு
சார்ந்தபுகழ்ப் புன்னைவனத் தாளாளா நன்றாகத்
தேர்ந்துகொண்டு வேண்டிவினை செய்.
உரை
நெடிய அழகுக்குக் காரணமான புகழையுடைய புன்னைவனத் தாளாளா! ஆடாசாய் வேந்தாடா யாற்றூரும் வாசமதாய்த் தேடுமென்று இடைக்காடர் உரைசெய்தது காண்க. ஆதலால் நீயும் இதை நன்கு தேர்ந்துகொண்டு ஆக்கச் செயல்களில் ஈடுபடுக.
விளக்கம்
ஔவையார் இயற்றிய ஆத்திசூடியில் வேண்டிவினை செயேல் என்று உள்ளது. இராமபாரதி எழுதிய ஆத்திசூடி வெண்பாவில் வேண்டிவினை செய் என்றுள்ளது. முதலில் வருவதை தீவினை செய்யேல் என்றும், பின்னர் வருவதை நல்வினை செய்க என்றும் பொருள் கொள்ள வேண்டும்.
கருத்து
ஆக்கப்பூர்வமான செயல்களில் விரும்பி ஈடுபட வேண்டும் என்பது பாடலின் மையக்கருத்தாகும்.
தொடர்ந்து சிந்திப்போம் . . .
முனைவர் இரா. கோகுல்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 641020
No comments:
Post a Comment