இதழ் - 109 இதழ் - ௧0௯
நாள் : 26-05-2024 நாள் : ௨௬-0ரு-௨௦௨௪
ஆத்திசூடி (ஔவை)
" வைகறைத் துயிலெழு "
நாள்தோறும் விடியற்காலை உறக்கத்தைவிட்டு எழு.
ஆத்திசூடிவெண்பா (இராமபாரதி)
பாடல் – 106
செய்யமுகம் வாய்கைகாற் றேகசுத்தி செய்துமெய்யிற்
றுய்யவெண்ணீ றிட்டரனைத் தோத்திரஞ்செய் – துய்யும்வகை
மாவெய்தும் புன்னைவன மன்னவா மையிரவி
லேவைக றைத்துயிலெ ழு.
உரை
சிவந்த முகம், வாய், கை, கால், உடல் முழுமையும் தூய்மைசெய்து உடலில் தூய வெண்மையான திருநீறு அணிந்து சிவபெருமானை பலவாறு போற்றி செய்து உய்வடையும் வகையில் புன்னைவன மன்னவா! கரிய இருள் நிறைந்த வைகறைப் பொழுதிலே உறக்கத்திலிருந்து எழுக.
விளக்கம்
வைகறையில் உறக்கத்தைவிட்டு எழுக என்று அறிவுறுத்தியதோடு எழுந்தவுடன் செய்ய வேண்டிய செயல்களையும் சேர்த்து வலியுறுத்துகிறார். செய்ய – சிவந்த. தேக சுத்தி – உடல் தூய்மை. மெய் – உடல் துய்ய – தூய. வெண்ணீறு – திருநீறு. அரன் – சிவபெருமான். தோத்திரம் செய்து – போற்றி வணங்கி. மையிரவு – கரிய இருளான இரவு. உறங்கி எழுந்தவுடன் புறத்தூய்மை செய்க என்பதை ‘செய்யமுகம் வாய்கைகாற் றேகசுத்தி செய்து’ என்றார். அகத்தூய்மை சாதனங்களாக திருநீறு பூசி சிவபெருமானை போற்றி வணங்குதலைக் கூறுகிறார். இதனை ‘மெய்யிற் றுய்யவெண்ணீ றிட்டரனைத் தோத்திரஞ்செய்து’ என்றார் ஆசிரியர்.
கருத்து
வைகறைப் பொழுதில் துயிலெழுந்து இறை வழிபாட்டில் ஈடுபட வேண்டும் என்பது பாடலின் மையக்கருத்தாகும்.
தொடர்ந்து சிந்திப்போம் . . .
முனைவர் இரா. கோகுல்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 641020
No comments:
Post a Comment