இதழ் - 110 இதழ் - ௧௧0
நாள் : 02-06-2024 நாள் : 0௨-0௬-௨௦௨௪
ஆத்திசூடி (ஔவை)
" ஒன்னாரைத் தேறேல் "
பகைவர்களை நம்பாதே.
'ஒன்னாரைச் சேரேல்’ என்றும் பாடமுண்டு என்பார் ந.மு. வேங்கடசாமி நாட்டாராவர்கள்.
ஆத்திசூடிவெண்பா (இராமபாரதி)
பாடல் – 107
தொழுதகை யுள்ளும் படையொடுங்கு மொன்னார்
அழுதகண் ணீரு மனைத்தென் – றெழுசொல்லைப்பார்
தூயபுகழ்ப் புன்னைவனத் தோன்றலே சொப்பனத்தி
லேயுமொன் னாரைத்தே றேல்.
உரை
தூயபுகழ் வாய்ந்த புன்னைவனத் தோன்றலே! பகைவர்கள் தொழுதவதற்காகக் குவித்த கைகளுக்குள்ளும் நம்மைக் கொல்லும் ஆயுதம் மறைந்திருக்கும். அவர்கள் அழுகின்ற கண்ணீரும் அத்தன்மையுடையதே என்று முன்னோர் கூறிய சொற்களை நினைத்துப் பார்க்கவும். ஆதலால் கனவிலேயும் கூட பகைவர்களை நம்பிவிடாதே.
விளக்கம்
“தொழுதகை யுள்ளும் படையொடுங்கும் ஒன்னார் அழுதகண்ணீரும் அனைத்தென்” என்பது திருக்குறள். கூடா நட்பு அதிகாரத்துள் வருகின்ற குறள். தொழதகை – வணங்கும் கரம். படை – ஆயுதம். ஒன்னார் – பகைவர். மறைத்து வைத்து கொலை செய்யும் ஆயுதமும் ஏமாற்றுவதற்காக வடிக்கும் கண்ணீரும் ஒரே தன்மையில் வைத்து எண்ணப்படுகிறது. இதனை ’அழுதகண்ணீரும் அனைத்தென்’ என்றார். சொப்பனம் – கனவு. தேறேல் – நம்பாதே. பெரியபுராணத்துள் வரும் மெய்ப்பொருள் நாயனார் வரலாறு ’தொழுதகை யுள்ளும் படையொடுங்கும்’ என்பதற்குத் தக்க சான்று.
கருத்து
பகைவர்களை எக்காலத்திலும் நம்ப வேண்டாம் என்பது பாடலின் மையக்கருத்தாகும்.
தொடர்ந்து சிந்திப்போம் . . .
முனைவர் இரா. கோகுல்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 641020
No comments:
Post a Comment