பக்கங்கள்

ஆத்திசூடி வெண்பா – 108

இதழ் - 111                                                                                                              இதழ் - ௧
நாள் : 10-06-2024                                                                                             நாள் : 0-0௬-௨௦௨௪


ஆத்திசூடி (ஔவை)
ஓரஞ் சொல்லேல் "

உரை
     ஒருபுடைச் சார்பாக நடந்துகொள்ளாதே..

ஆத்திசூடிவெண்பா (இராமபாரதி)

பாடல் – 108
     அந்தணர்கள் வாழி யறம்வாழி கீர்த்திநிலை
     தந்தவர்கள் வாழி தவம்வாழி – சந்ததமும்
     மானஞ் செறிபுன்னை வனநாதா விவ்வகையே
     தானோ துவது தவம்.

உரை
      அந்தணர்கள் வாழ்க! அறம் வாழ்க! புகழ்நிலை எய்துவித்தவர்கள் வாழ்க! தவம் வாழ்க! எப்பொழுதிலும் மானஞ்செறிந்த புன்னைவன நாதனே! இவ்வகையில் ஓதுவது தவமாகும்.

விளக்கம்
     ஒளவையார் இயற்றிய ஆத்திசூடியில் 108ஆவது ஆத்திசூடியாக ஓரஞ்சொல்லேல் என்பது இடம்பெற்றுள்ளது. ஆனால் இராமபாரதியின் ஆத்திசூடி வெண்பாவில் 107ஆவது ஆத்திசூடியான ஒன்னாரைத் தேறேல் என்பதுடன் நிறைவடைந்துவிடுகிறது. 108ஆவது பாடலாக வாழிப் பாடலை இராமபாரதி அமைத்திருக்கிறார். அவ்வாழிப் பாடலிலும் தவத்திற்கான இலக்கணத்தைச் சுட்டிக் காட்டிச் செல்கிறார். அந்தணர் – பிராமணர்கள் என்பது பொதுவழக்கு. திருவள்ளுவர் எவ்வுயிர்க்கும் நன்மைசெய்து வாழும் அறவோர்களை அந்தணர் என்கிறார். “அந்தணர் என்போர் அறவோர் மற்றெவ்வுயிரக்கும் செந்தன்மை பூண்டொழுக லான்” (குறள், 30). கீர்த்தி – புகழ். 

கருத்து
     அறவோர்களையும் அறச்செயல்களையும் போற்ற வேண்டும் என்பது பாடலின் மையக்கருத்தாகும். 

இத்துடன் இராமபாரதி எழுதிய ஆத்திசூடி வெண்பா நிறைவு பெறுகிறது.

முனைவர் இரா. கோகுல்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 641020

No comments:

Post a Comment