இதழ் - 153 இதழ் - ௧௫௩
நாள் : 13 - 04 - 2025 நாள் : ௧௩ - ௦௪ - ௨௦௨௫
அரங்கேற்றம் ஆமாத்தூர் அழகன் திருக்கோயிலில் செவ்வனே நடைபெற்றுவந்தது. அரசர் அச்சுததேவர் நாள்தோறும் வந்திருந்து கலம்பகப் பாடல்களைச் சுவைத்து இன்புற்றார். புலவர்களும் மலர்கண்ட வண்டுபோல ஆமாத்தூர்க் கலம்பத்தால் ஈர்க்கப்பட்டனர். இலக்கிய இன்பம் மட்டுமல்ல பக்தியும் பம்பையாற்றுக்கு இணையாகப் பாய்ந்தோடியது. ஆமாத்தூர் இறைவன் மீது பக்திகொண்டோர் அவ்வூரில் மிகுதி. தங்கள் இறைவன் மீது ஒரு தமிழ்நூல் பாடப்பட்டு அரங்கேற்றப்படும் நிகழ்ச்சியில் தாங்கள் இல்லாது போகக் கூடாது என்று திரண்டுவந்து அரங்கேற்றத்தில் கலந்துகொண்டனர். இரட்டையர்களின் புகழ் ஊரெங்கும் பரவியது. மேகம் சூல்கொண்டதைப் போல கல்லார் உள்ளத்திலும் ஆமாத்தூர்க் கலம்பகம் சென்று தங்கியது.
“மீளார் பிறப்பினில் வீழார் நரகினில் வேறொருநூல்
கேளார் உயிர்க்கொரு கேடுசெய் யார்கிளர் தீவினையின்
மூளார் திருநுதல் நீறிகழார் பின்னை முத்தியல்லது
ஆளார்தென் மாதை அழகிய நாதர் அடியவரே”
என்ற பாடல் பலரது நாவிலும் தங்கிவிட்டது. அந்த அளவிற்கு கலம்பகம் ஆமாத்தூர் மக்கள் வாழ்வில் இடம்பெற்றுவிட்டது. ஒளிவழங்கும் விளக்கின் அடியிலும் இருள் இருப்பது போல அறிவியக்கத்தை வழிநடத்தும் புலவர்களிடையில் ஒன்றிரண்டு கார்நெஞ்சகரும் இருந்தனர். தன்னையே காட்டாத ஆணவமலம் போல அவர்கள் புலவர் கூட்டத்தில் உலவினர்.
இரட்டையருக்கு ஆமாத்தூரில் கொடுக்கப்படும் மரியாதையும் சிறப்பும் அவர்களை சலனப்படுத்தின. தங்கள் புலமை இரண்டாம் இடத்திற்குச் செல்வதாக அவர்கள் உணர்ந்தனர். இரும்புத் துகள்களைக் காந்தக்கட்டி இழுத்து ஒன்றாக்குவது போல காரெண்ணம் அவர்களைக் கூட்டி வைத்தது. இரட்டையர் புகழுக்கு சிறுமைசெய்ய காலம் பார்த்துக் காத்திருந்தனர். அதற்கான சூழலும் உருவாகி வந்தது.
மாலை நேர சூரியனின் ஒளியை மேகத்திரள் மழுங்கச் செய்துகொண்டிருந்தது. “இருள் கவிந்து வருவதால் இன்றைய அரங்கேற்றத்தை சற்று முன்னரே நிறைவுசெய்து கொள்ளலாம் என்று நினைக்றேன்” என்று அரசரிடம் கோரிக்கை வைத்தார் முதுசூரியர்.
“தங்கள் பாடல்களின் சுவையில் மயங்கிக் கிடக்கும் எங்களுக்கு மழை பெரும் தடையல்ல முதுசூரியரே. தாங்கள் எப்பொழுதும் போலவே அரங்கேற்றத்தைத் தொடருங்கள். ஆமாத்தூர் அழகனைப் பற்றிய சொற்களைக் கேளாமல் நாங்கள் சென்றால் தவறு. எங்கள் பொருட்டு தங்கள் அரங்கேற்றத்திற்குத் தடைவரக் கூடாது” என்று உறுதியும் அகக்குழைவும் கொண்டு பேசினார் அரசர்.
“தங்கள் சொல் எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது அரசே. தங்கள் பக்திக்கும் தமிழ்ஈடுபாட்டிற்கும் இணையில்லை” என்று கூறிவிட்டு அரங்கேற்றத்தைத் தொடர்ந்தார் முதுசூரியர்.
அரசரின் பேச்சும் அதற்கு முதுசூரியர் அளித்த பதிலும் கார்நெஞ்சகர்களுக்கு மேலும் வெம்மையளித்தன. எதாவது தடையேற்படுத்தி அரங்கேற்றத்தை நிறுத்திவிட வேண்டும் என்று அவர்கள் உள்ளம் தவித்தது. ஏதும் செய்ய இயலாத தங்கள் நிலையை எண்ணி தங்களைத் தாங்களே நொந்துகொள்வதைத் தவிர அவர்களுக்கு வேறு எதுவும் வாய்க்கவில்லை.
இளையவர் அடுத்த பாடலைப் பாடினார்.
“காலத்தில் உயிர்கொள்ள எதிர்கொள்ளும் யமதூதர் கரசூலமும்
ஆலித்து வீசுங்கொடும் பாசமும் என்னை யமராடுமோ
மாலத்தி மெய்க்கொண்டு மகனத்தி கைக்கொண்ட மாமா தையார்
சூலத்தை மாறாத பாசத்தி னூடே எதிர்த்தாலுமே”
கடல், பேரொலிகொண்டு பொங்குவதும் அலையிழுத்து அமைதிகொள்வதும் போல அரங்கேற்றம் நடந்துகொண்டிருந்தது. முதுசூரியர் சில உவமைகளைச் சொல்லும்பொழுது புலவர்கள் “ஆஹா! ஆஹா!” என்றனர். ஆமாத்தூர் இறைவனின் பெருமை பேசும் இடங்களில் இறையன்பர்கள் “சிவ சிவ” என்று கையுயர்த்திக் கூவினர். சிலபோழ்து தமிழ்த்தேன் உண்டு அரசர் உட்பட அனைவரும் மயங்கி வாளாயிருந்தனர். இந்த இன்பக் கடலுக்கு நடுவுள்தான் நஞ்சு திரண்டு கொண்டிருந்தது. “திருவாமாத்தூர் இறைவனிடம் பக்தி கொண்டவர்களுக்கு யமதூதர்களின் சூலத்தாலும் பாசக்கயிற்றாலும் எந்த தீங்கும் நேராது” என்று இளஞ்சூரியர் சொன்ன பாடலுக்குப் பொருள் விரித்த முதுசூரியர் தம்பியிடம் அடுத்த பாடலைப் பாடுமாறு கூறினார்.
மூத்தவரின் சொற்கேட்டவர்,
“ஆட்குழையோ அரவோ ஆயர்பாடி அருமனையோ
பாற்கடலோ திங்களோ தங்குமாவம் பலபலவாம்
மார்க்கமும் ஆகிநின்றார் மாதை நாதர் வலங்கொள்பம்பை
மேற்கரை கோயில் கண்டார் புரஞ்சீறிய வெங்கணைக்கே”
என்று பண்ணமைதியோடு பாடினார்.
அவர் பாடி நிறுத்தியதும் முதுசூரியர் “திருவாமாத்தூர் இறைவனை வலங்கொள்கின்ற பம்பையாற்றின் மேற்குக் கரையில் கோயில் கொண்டுள்ள சிவபெருமான், முப்புரத்தின் மீது தொடுக்க வைத்திருந்த திருமாலாகிய அம்புக்குக் கூடானது ஆல்குழையோ திங்களோ யாது?” என்று பொருள் விளக்கினார்.
முதுசூரியர் பாடலுக்குப் பொருள் விரித்தபொழுது கூட்டத்தின் நடுவே நஞ்சு திரண்டிருந்தது. அதிலொருதுளி மனிதவுருகொண்டு எழுந்தது. ஆமாத்தூர்ப் புலவர்களுள் ஒருவர் அவர். தண்டபாணிக் கவிராயர் காரியார் ஏன் எழுந்து நிற்கிறார் என்று எண்ணிக் கொண்டிருந்த சமயத்தில் காரியார் சொல்லுதிர்த்தார். “அரசர்பெருமான் அவர்களுக்கு வணக்கம். இடைமறித்துப் பேசுவதற்குப் பொறுத்துக்கொள்ள வேண்டும். இப்பொழுது சொல்லப்பட்ட பாடலில் பிழையொன்றுளது. அதை அரசர்பெருமான் கவனத்திற்குக் கொண்டு வர அனுமதி அருளவேண்டும்”
“பிழையா? இரட்டையர்கள் பாடலிலா?” என்று வியப்புடன் கேட்டார் அரசர். தண்டபாணிக் கவிராயருக்கும் மீனாட்சிசுந்தரம்பிள்ளைக்கும் ஏதோ தவறு நடப்பதுபோல் உணர்ந்தனர்.
“ஆம் பெருமானே! இரட்டையர்களின் தமிழ்ப்புலமையை நாம் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். ஆனால் அவர்களின் பாடல் எந்த அளவிற்கு நேர்த்தியற்றது என்பதற்கு இப்பாடல் ஒரு சான்று.”
தங்கள் பாடல்களின் என்ன பிழை என்று யோசித்தும் இரட்டையர்களுக்குப் பிடிபடவேயில்லை. குழப்பத்துடன் இளஞ்சூரியர் மூத்தவர் பக்கம் திரும்பினார். முதுசூரியன் தம்பியின் தோள்தொட்டு அமைதியாக இருக்குமாறு சொன்னார்.
“சொல்லுங்கள், என்ன பிழை” என்றார் அரசர்.
அரசர் அனுமதி கிடைத்தவுடன் காரியாருக்கு உள்ளத்தில் மகிழ்ச்சி. உற்சாகமாகப் பேசினார். உடன் திரண்டிருந்த நஞ்சுத்துளிகளும் மகிழ்ச்சியில் பொங்கிக் கொண்டிருந்தன. “நமது ஆமாத்தூர் இறைவன் பம்பையாற்றின் கிழக்குக் கரையில் அல்லவா எழுந்தருளிக் கொண்டிருக்கிறார். ஆனால் புலவர்கள் மேற்குக் கரையில் என்று பாடியுள்ளனரே” என்று ஏளனப் புன்னகை ஒன்றை உதிர்த்தார்.
அரசர் முதல் அங்குக் கூடியிருந்த புலவர்கள் சிலர் நாம் இதைக் கவனிக்காமல் போனோமே என்று மருண்டனர். இரட்டையர் இருவருக்கும் இது எவ்வாறு நிகழ்ந்தது என்று புரியவில்லை. தங்கள் கவிகள் இறைவன் அருள்பவை என்பது அவர்கள் எண்ணம். அதில் பிழைபட வாய்ப்பில்லையே. ஆயினும் இன்று இவ்வாறு நிகழ்ந்துவிட்டதே” என்று உள்ளம் குமைந்தனர். என்ன சொல்வதென்று தெரியாமல் தயங்கினர்.
இரட்டையரின் தவிப்பும் மற்றவர்களுடைய மௌனமும் காரியாருக்கு மேலும் துணிவளித்தன. அவர் அரசர் இருக்கிறார் என்றும் பாராமல் “இளையவருக்குத்தான் கண்ணில்லை, குருடர். மூத்தவருக்குக் கால்தானே இல்லை. கண்ணுமா கெட்டுவிட்டது?” என்றார்.
அரசர் கண் சிவந்தார். தண்டபாணிக் கவிராயர் எழுந்து வெகுண்டு பேசலானார். “காரியாரே! நமது ஊருக்கு வந்து நமது இறைவன் மீது இப்புலவர்கள் கலம்பகம் பாடியிருக்கிறார்கள். கலம்பகம் பாடுமாறு கேட்டதும் நாம்தான். அவர்களின் புலமையையும் பக்தியையும் இத்தனை நாட்களாக நாம் போற்றிக் கொண்டாடியிருக்கிறோம். இன்று அவர்கள் கூறிய பாடலில் சிறு தவறு நிகழ்ந்திருக்கிறது. அதைச் சுட்டிக் காட்டுவதற்கு புலவர்கள் நமக்கு உரிமையுண்டு. அதற்காகத்தானே தமிழ்ச்சூழலில் அரங்கேற்றமும் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. ஆனால் அரசர்பெருமான் இருக்கிறார் என்றும் பாராமல் நீங்கள் இங்ஙனம் பேசியது பெரும்பிழை. மாபெரும் தமிழ்ப் புலவர்கள் இவர்கள் என்பதை இவர்களின் பாடல்களைக் கேட்பவர்கள் அறிவர். ஆனால் அவர்களின் உடற்குறையைக் கொண்டு அவர்களின் தமிழ்த்திறனை ஏளனம் செய்வது கூடாது. அதனை அரசர்பெருமானும் அனுமதிக்க மாட்டார். ஆமாத்தூர் மக்களும் அனுமதிக்க மாட்டார்கள். நீங்கள் அரசரிடமும் இரட்டையரிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும்.”
இளஞ்சூரியர் எழுந்து நின்றார். “மன்னிப்பு எதுவும் வேண்டாம் கவிராயரே. பாடலிலுள்ள பிழையைச் சுட்டிக்காட்டிய புலவருக்கு நன்றி. ஆனால் ஆமாத்தூர்க் கலம்பகம் நாங்கள் எழுதிய நூலல்ல. எங்களுக்குள் இருந்து ஆமாத்தூர் இறைவன் அருளிய நூல். அதில் இத்தகைய பிழை இருக்கும் என்று நாங்கள் நம்பவில்லை. இதற்கு ஆமாத்தூர் இறைவன்தான் பதிலளிக்க வேண்டும். பதில் கிடைக்கும் வரை அரங்கேற்றம் நடைபெறாது. வணக்கம்” என்று கைகூப்பினார். முதுசூரியரும் “இதற்கு இறைவன் பதில் சொல்லும் வரை எங்களால் அரங்கேற்றத்தைத் தொடர இயலாது. அரசரும் ஆமாத்தூர்ப் பெருமக்களும் பொறுத்துக் கொள்ள வேண்டும்” என்றார்.
அனைவரும் கலைந்து சென்றனர். தங்குமிடம் சேர்ந்த பின்னரும் இரட்டையருக்கு உள்ளம் அமைதிகொள்ளவில்லை. தண்டபாணிக் கவிராயர் உள்ளிட்ட சிலர் வந்து ஆறுதல் சொல்லிச் சென்ற பிறகு, கல்யாணசுந்தரம் பிள்ளை இரட்டையரை அணுகி “நீங்கள் கவலை கொள்ள வேண்டாம். எங்கள் ஆமாத்தூர் இறைவனைப் பாடிய உங்களுக்கு ஒரு தீங்கும் ஏற்படாது. ‘ஆமாத்தூர் அழகனை நெஞ்சினால் நினைந்தேன் நினைவெய்தலும் வஞ்ச ஆறுகள் வற்றின காண்மினே’ என்று திருநாவுக்கரசு சுவாமிகள் பாடியுள்ளதை நான் உங்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டியதில்லை. அனைத்து வஞ்சனைகளும் நீங்கி கலம்பக அரங்கேற்றம் நல்லமுறையில் நிறைவெய்தும் நீங்கள் நிம்மதியாக உறங்குங்கள்” என்று நம்பிக்கைச் சொல் அளித்தார்.
முதுசூரியரின் உள்ளம் முழுவதும் ஆமாத்தூர் இறைவன்கண் நிலைகொண்டிருந்தது. இளஞ்சூரியன் தூணில் சாய்ந்திருந்தார். அருகில் விளக்கொண்டு அசைந்து அசைந்து ஒளியை உமிழ்ந்துகொண்டிருந்தது. மேற்கொண்டு என்ன சொல்வது என்று தெரியாமல் கல்யாணசுந்தரம்பிள்ளை திண்ணையில் அமர்ந்திருந்தார். வானில் பெரும் இடிமுழுக்கம் திடீரென்று எழுந்தது. உள்ளம் திடுக்கிட கல்யாணசுந்தரம்பிள்ளை வானை அண்ணாந்து பார்த்தார். வானில் கரிய மேகத்திரள் மைதடவிய பஞ்சுப் பொதிகளைப் போல் திரண்டு நின்றிருந்தது. கண்விரித்து வாய்பிளந்து பார்த்துக்கொண்டிருந்தார். அரங்கேற்ற அவையில் திரண்ட நஞ்சினை முறிக்கும் மருந்து விசும்பில் திரண்டு கொண்டிருந்தது.
அரங்கேற்றம் தொடரும் . . .
முனைவர் இரா. கோகுல்
உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 641020
No comments:
Post a Comment