பக்கங்கள்

அரங்கேற்று காதை - 10

இதழ் - 149                                                                                        இதழ் - ௧
நாள் : 16 - 03 - 2025                                                                      நாள் : ௬  - ௨௦௨



அரங்கேற்று காதை - 10

திருவாமாத்தூர்க் கலம்பகம்

   நண்பகல் உணவை மண்டபத்திலேயே பெரியவர் தயார் செய்து இரட்டையர் இருவரையும் விருந்தோம்பினார். தமிழ்ப்புலவர்கள் என்பதானால் கூடுதல் உபசரிப்பும். சிறிதுநேர உறக்கத்திற்குப் பின்னர் மூவரும் அருகிலுள்ள பம்பையாற்றங்கரைக்குச் சென்று நீராடி வந்தனர். சாலையில் மக்கட்செலவு தொடங்கியிருந்தது. மாலை சூரியன் மறையும் வேளையில் ஊர்ப் பெரியவர்கள் மண்டபத்திற்கு வந்தனர். பெரியவர் மண்டபத்தை விளக்குகளால் அணிசெய்து கொண்டிருந்தார். நெற்றியில் திருநீறு பூசிய முதுசூரியன் விழிமூடி ஊழ்கத்தில் ஆழ்ந்திருந்தார். இளையவர் வெளிப்புறத்தூணில் சாய்ந்து அமர்ந்திருந்தார். 

    ஊர்ப் பெரியவர்கள் வருவதைக் கவனித்த கல்யாணசுந்தரம் பிள்ளை மண்டப முகப்பிற்குச் சென்று வரவேற்றார். அவர்கள் அமர்வதற்கான விரிப்பை முன்னரே எடுத்து விரித்துவைத்திருந்தார். வந்தவர்கள் மண்டபத்தில் அமர்ந்தனர். அவர்களுடன் வந்த சில இளைஞர்கள் வெளியில் புன்னை மரத்தடியிலேயே நின்று கொண்டனர். சிலர் அங்கிருந்த கல்லிருக்கைகளில் அமர்ந்து சாலையில் செல்வோரிடம் ஏதோ உரையாடிக் கொண்டிருந்தனர்.

    நரைத்த தலைமுடியை உச்சியில் கொண்டையிட்டிருந்த தண்டபாணிக் கவிராயர் கல்யாணசுந்தரம் பிள்ளையைப் பார்த்து, “புதிதாக இருக்கிறார்களே, யார்?” என்று கேட்டார். 

    “உங்கள் அனைவருக்கும் அறிமுகப்படுத்துவதற்காகத்தான் இவர்களை இங்கேயே தங்கச் செய்திருக்கிறேன். இவர்கள் தமிழ்ப் புலவர்கள். முதுசூரியன், இளஞ்சூரியன்.”

    “தமிழ்ப் புலவர்களா! நல்லது. ஆமாத்தூர் தமிழ்ப் புலவர்களுக்கான ஊராயிற்றே” என்றார் சிவசிதம்பரம்.

    இவர்களின் பேச்சரவம் கேட்டு இளஞ்சூரியன் தனது தமையனாரைத் தொட்டு எழுப்பினார். விழிதிறந்த மூத்தவர் பெரியவர்களைக் கண்டு கரங்கூப்பி “வணக்கம்” என்றார்.

“தங்களைக் கண்டதில் மகழ்ச்சியடைகிறோம். ஆமாத்தூர் உங்கள் இருவரையும் வரவேற்கிறது. என்ன விஷயமாக இங்கு வந்திருக்கிறீர்கள்?” புலவர் குணசேகரன் கேட்டார். அங்கிருந்தவர்களில் இளையவராயினும் அவரது தாடியும் நரைதொட்டே இருந்தது.

    “சிவத்தலப் பயணமாக ஆமாத்தூர் இறைவனை வழிபட வந்தோம்” என்றார் மூத்தவர்.

    “என்னென்ன தலங்களை வழிபட்டு வருகிறீர்கள்?”

    “நான் நடக்க இயலாதவன். என் தம்பி இவனோ காண இயலாதவன். நான் வழிகாட்ட என்னை சுமந்து செல்கிறான். இயன்ற அளவு நாங்கள் செல்லும் வழிகளிலுள்ள சிவத்தலங்களை வழிபட்டு வருகிறோம். தில்லை, காஞ்சி, சீர்காழி, ஆவடுதுறை, மதுரை போன்ற சில தலங்களை முக்கியமாகக் குறிப்பிடலாம்.”

    “நல்லது. எங்கள் ஆமாத்தூர் சிவபெருமான் உங்கள் இருவருக்கும் அனைத்து நன்மைகளையும் அருள்வார்.”

    பெரியவர் “அதைத்தான் நானும் சொன்னேன்” என்று இடைச்சொல் சொன்னார்.

    “கல்யாணசுந்தரப் பெரியவர் தங்களைப் புலவர் என்றார். தாங்கள் பாடிய நூல்கள் எவை?” தண்டபாணிக் கவிராயர் கேட்டார்.

    “நாங்கள் திட்டமிட்டுப் பாடிய நூல்கள் பெரிதாக இல்லை. இறைவனையும் வள்ளல்களையும் அங்காங்கே நிகழும் சில நிகழ்ச்சிகளையும் பாடுகிறோம். தில்லை சென்றிருந்தபொழுது கூத்தப்பெருமான் மீது ஒரு கலம்பகம் பாடினோம். திருஞானசம்பந்தர் மீதும் ஒரு கலம்பகம் பாடியுள்ளோம்.”

    “ஆகா, கலம்பகம் பாடுவதென்ன அத்தனை எளிதா? மிகச் சிக்கலான யாப்பமைதி ஆயிற்றே! அதில் தேர்ந்தவர்கள் நீங்கள் என்பது எத்தனை சிறப்புடையது.” தண்டபாணிக் கவிராயருக்கு உற்சாகம் மிகுந்தது.

    “ஐயா, நாங்கள் எங்கே பாடுகிறோம். இறைவன் அருள்கிறான்.” மூத்தவர் கரங்குவித்தவாறே சொன்னார்.

    “தங்கள் நூல்களை நாங்கள் கேட்க விரும்புகிறோம். பிறிதொரு சமயத்தில் அவற்றை எங்களுக்குச் சொல்ல வேண்டும்.”

    “அதற்கென்ன, சொல்லிவிடலாம்.”

    “இன்று பகலுணவுக்குப் பின் இவர்களுடன் பேசிக் கொண்டிருந்தேன். இவர்கள் வாழ்வில் நடந்த நிகழ்ச்சிகள் பலவற்றைச் சொன்னார்கள். எத்தனை அனுபவங்கள், எத்தனைத் தனிப்பாடல்கள். மகிழ்ச்சியும் துயரமும் நகைச்சுவையும் நிரம்பிய நிகழ்ச்சிகள்.”

    “அப்படியா!”

    “ஆம்”

 “புலவர்களே, அவற்றுள் ஏதேனும் ஒன்றை மட்டுமாவது எங்களுக்குச் சொல்லுங்களேன்.”

    “ஆங்கூர் என்னும் ஊரில் நடந்த நிகழ்ச்சியைச் சொல்லுங்கள். இவர்களுக்கும் தெரியவரட்டும்” என்று சற்று கடுங்குரலில் சொன்னார் பெரியவர். அந்த நிகழ்ச்சி தந்த ஒவ்வாமை அவரது சொற்களில் வெளிப்பட்டது. 

    மூத்தவர் வாய்விட்டு சிரித்தார். 

    “அதையே சொல்லுங்கள் அண்ணா” இளையவரும் முறுவலித்தார்.

    “நானும் தம்பியும் ஒருநாள் ஆங்கூர் என்னும் ஊரை அடைந்தோம். அங்குள்ள சிவன் கோயிலில் நண்பகல் பூசை நடந்துகொண்டிருந்தது. நாங்கள் அங்கு வழிபாட்டுக்குச் சென்றோம். வழிபாட்டுக்கு அரிசியைப் போட்டு நைவேத்தியம் ஆக்கி இறைவனுக்குப் படைக்காமல், அரிசியை மடைப்பள்ளிப் பணியாளர்களும் பூசகர்களும் தங்களுக்குள் பங்குபோட்டு எடுத்துக்கொண்டிருந்துள்ளனர்.  பதிலாக ஒன்றிரண்டு செங்கற்களை நன்கு சுடவைத்து, அவற்றின்மீது ஈரத்துணியைப் போட்டு மூடித் தூக்கிக் கொண்டு செல்வர். சூடான செங்கற்களின் மீது ஈரத்துணி பட்டதும் ஆவி பரவும். அங்குள்ள மெய்யன்பர்கள் அதனை நைவேத்திய உணவு என்று எண்ணிக் கொள்வர். நாங்கள் சென்ற பொழுதும் இதுவே நடந்துகொண்டிருந்தது. எங்களுக்கோ பசி. நைவேத்திய உணவு கிடைத்தால் பசியாறலாம் என்று தம்பி காத்திருந்தான். ஆனால் கிடைத்தபாடில்லை. பசியுடன் இருந்த தம்பி,

"தேங்குபுகழ் ஆங்கூர்ச் சிவனே! பல்லாளியப்பா
நாங்கள் பசித்திருக்கை ஞாயமோ" என்று பாடினார்.

    இது நடந்து கொண்டிருந்த சமயத்தில் பூசகர் நைவேத்தியத்தியத்தை இறைவனுக்குப் படைப்பதுபோல செய்கை செய்தார். அவர் நைவேத்தியத்தைப் போர்த்திருந்த துணியைச் சிறிது விலக்கிக் காட்டியபொழுது நான் பார்த்துவிட்டேன். உடனே வழக்கம் போல தம்பியின் முதலிரண்டு அடிகளுக்கு நான் பதில் சொன்னேன்.

– போங்காணும்
கூறுசங்கு தோன்முரசு கொட்டோசை யல்லாமல்
சோறுகண்ட மூளியார் சொல்

    என் பதிலைக் கேட்டதும் தம்பி புரிந்து கொண்டான். நாங்கள் பசியுடனேயே திரும்பி வந்தோம். சில நாட்களில் அவர்களின் மோசடி வெளிப்பட்டு விட்டது. தண்டனையும் பெற்றனர் என்பதை அறிந்தோம்.”

    “அட பாதகமே. சிவன் சொத்து குலநாசம் என்று சொல் அறியாத மடையர்களாய் இருப்பர் போல…”  என்றார் குணசேகரன்.

    “சென்னேனில்லையா… உங்களுக்கும் கோபம் வரும் என்று தெரியும்” என்றார் பெரியவர்.

    தண்டபாணிக் கவிராயர் ஏதோ தீவிர சிந்தனையில் இருந்தார். அவரது பார்வை தும்பி பிடிக்கும் சிறுவன் போல தீவிரமாய் நிலைகுத்தி நின்றிருந்தது. “அவர்கள் தண்டிக்கப்பட்டு விட்டார்கள் கவிராயரே. தாங்கள் ஏன் இத்தனை கவலையாக இருக்கிறீர்கள்.” குணசேகரன் சொன்னார்.

    நினைவுக்கு வந்த தண்டபாணிக் கவிராயர், “அதில்லை… புலவர்களிடம் ஒரு கோரிக்கை வைக்க வேண்டும். அதுதான் எப்படிக் கேட்பது என்று தெரியவில்லை” என்று மூத்தவரைப் பார்த்தார்.

    “அதற்கென்ன… கேளுங்கள்.”

    “எங்கள் ஆமாத்தூர் தேவார மூவரால் பாடப்பெற்ற பேறுடையது. தாங்களே அறிவீர்கள். இப்பொழுது நான் கோருவதும் அதைப் போன்றதுதான். தாங்கள் இருவரும் எங்கள் இறைவன் மீது ஒரு கலம்பகம் பாடித் தரவேண்டும். தயைகூர்ந்து மறுக்கக் கூடாது.”

    “சிவனைப் பாட மறுப்பு என்ன எங்களுக்கு… மூவர் பாட்டைக் கேட்ட உங்களுக்கு எங்கள் பாடல் எப்படி உவக்கும் என்ற ஐயம்தான்.”

    “தாங்கள் அப்படிச் சொல்லக் கூடாது. சிவநேயச் செல்வர்களான தாங்கள் இருவரும் கண்டிப்பாக ஒரு பிரபந்தம் பாடித்தரத்தான் வேண்டும்.” 

    தண்டபாணிக் கவிராயரின் உறுதியைக் கண்ட இரட்டையர் கலம்பகம் பாடித்தர ஒத்துக் கொண்டனர். நாளையே நிறைவுசெய்துவிடலாம் என்றும் கூறினர்.

    “அப்படியானால் அரசரிடமும் ஒருவார்த்தை சொல்லி விரைவில் நூல் அரங்கேற்றத்திற்கான நாளையும் ஒதுக்கித்தரக் கேட்கலாம்” என்றார் சிவசிதம்பரம். அதுவும் நல்ல யோசனையாகப் படவே அனைவரும் மிகுந்த மகிழ்ச்சியுடன் அங்கிருந்து புறப்பட்டனர்.

    இரட்டையர்களும் பெரியவரும் மட்டும் மண்டபத்திலேயே தங்கியிருந்தனர். இரவு முழுவதும் ஆமாத்தூர் அம்மானுக்கு பாமாலை தொடுக்கும்பணி இடைவிடாது நடந்துகொண்டிருந்தது.

தொடரும் . . . 

முனைவர் இரா. கோகுல்
உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 641020

No comments:

Post a Comment