பக்கங்கள்

அரங்கேற்று காதை - 10

இதழ் - 154                                                                                            இதழ் - ௧
நாள் : 20 - 04 - 2025                                                                        நாள் : ௨௦ -  - ௨௦௨



அரங்கேற்று காதை - 10

திருவாமாத்தூர்க் கலம்பகம்

     யானைகள் ஒன்றுடன் ஒன்று தாக்கிக் கொள்வது போல இரவு முழுவதும் திருவாமாத்தூரைச் சூழ்ந்து கொண்டு மேகங்கள் இடித்துக் கொண்டிருந்தன. அவை உண்டாக்கிய பேரொலி மக்களை நடுங்கச் செய்தது. வெளியில் சோவென்று பெய்து கொண்டிருந்த மழை அவர்களை வீட்டுக்குள்ளேயே கட்டி வைத்தது. குழந்தைகள் தாயின் மார்புக்குள் முகம் புதைத்துக் கிடந்தன.  கொட்டகையில் ஆநிரைகள் கண்களை விரித்துக்கொண்டு உறங்காமல் அசைபோட்டுக்கொண்டிருந்தன. தெருநாய்கள் சில திண்ணைகளில் அடைக்கலமாயிருந்தன. தென்னந்தோப்பில் இடிவிழுந்து தென்னையொன்று வீரபத்திரர் சிகை போல உச்சியில் தழல் தாங்கியது.  

     அரசர் அச்சுததேவர் தன் மாளிகையின் மேல்தளத்தில் நின்றுகொண்டு மழையைப் பார்த்துக் கொண்டிருந்தார். ஊரே இருளைப் போர்த்தியிருந்தது. மின்னல்தரும் ஒளியில் ஊர் தெரியுமா என்று பார்த்தார். கண்களை எத்தனை சுருக்கிப் பார்த்தாலும் மின்னொளியில் மழையின் பெருக்கம் தெரிந்ததேயொழிய ஊர் தெரியவில்லை. யாரையும் அனுப்பிப் பார்த்துவரச் சொல்வதும் இயலாது. வெள்ளம் பெருகி ஊருக்குள் வந்துவிடுமோ என்ற கலக்கமும் அவரைப் பற்றியிருந்தது. ஆமாத்தூர் அழகனை நினைத்து கைகூப்பினார்.

     இரட்டையர்களும் கல்யாணசுந்தரம் பிள்ளையும் இல்லத்தின் உள்ளறையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். 

  “இத்தனை பெரிய மழையை என் நீண்ட வாழ்நாளில் நான் கண்டதில்லை.” கல்யாணசுந்தரம்பிள்ளை பெருமூச்செறிந்தார். “இது நல்லதுக்கா அல்லவா என்று தெரியவில்லை முதுசூரியரே” என்று சொல்லும் பொழுதே அவர் கண்கள் சாளரத்தின் வழியாக வெளியில் பெய்யும் மழையைக் கண்டு கலங்கியது. 

     “அச்சப்பட வேண்டாம் ஐயா. ஆமாத்தூர் இறைவன் அருளால் எந்தத் தீங்கும் ஏற்படாது. கலங்காதீர்கள்.” அரங்கேற்றம் தந்த உளச்சோர்வு நீங்கியிருந்த முதுசூரியர் ஆறுதல் சொன்னார். 

     “ஆம் முதுசூரியரே, ஆமாத்தூர் அழகன்தான் துணை.”

     இளஞ்சூரியர் இடி, மழையின் பேரொலியைக் கொண்டு நிலைமையின் தீவிரத்தை உய்த்தறிந்தார். அவர்கள் தங்கியிருந்த இல்லத்தின் அருகில் பம்பை வடக்காகப் பாய்ந்தோடிக் கொண்டிருந்தது. மழையின் ஒலியையும் தாண்டி பம்பையின் ஒலி பெருகியொலித்தது. பம்பை கரையுடைத்து ஊருக்குள் பாய்ந்துவிடுமோ என்று கல்யாணசுந்தரம் பிள்ளை அச்சப்பட்டார். அதற்கான வாய்ப்பும் இருக்கவே செய்தது. கோயிலை ஒட்டியும் பம்பை ஓடுவதால் கோயிலுக்கும் ஏதேனும் பாதிப்பு வருமோ என்றும் அவருக்கு ஓர் எண்ணம். சிவபக்தியில் தோய்ந்து போயிருக்கும் அவரது உள்ளம் ஒருமுறை கோயிலுக்குப் போய்ப் பார்த்து வருவதற்குத் துடித்தது. மழை சற்று குறைந்தாலும் இரை கண்ட காட்டுவிலங்கு போல கோயிலுக்குப் பாய்ந்துவிடுவதற்குத் தயாராகவே இருந்தார். அடிக்கொருமுறை முற்றத்துக் கதவைத் திறந்து மழையின் கனத்தை விழியாலும் செவியாலும் அளந்துகொண்டிருந்தார். 

     ஊரே இரவில் உறங்காமல் வழித்துக் கொண்டிருந்தது. முன்னிரவில் தொடங்கிய மழை பின்னிரவைக் கடந்தும் ஓய்ந்தபாடில்லை. இன்னும் சில நாழிகையில் அருணன் எழும்நேரம் வந்துவிடும். சிவாச்சாரியார்கள் கோயில் பூசனைக்குச் செல்வதில் தடைவருமோ என்று தவித்தவாறு வீட்டுக்குள் அங்கும் இங்குமாக உலாத்திக் கொண்டிருந்தனர். 

     கருமை கழிந்து வானில் சாம்பல் பூக்கும் நேரம். மழையின் வேகம் ஓய்ந்து கொண்டிருந்தது. கல்யாணசுந்தரம் பிள்ளை பதட்டத்தில் இருந்தார். 

     “ஐயா, மழையின் வேகம் குறையத் தொடங்கிவிட்டது. இனி அச்சமில்லை. ஏன் இன்னும் கலக்கமாக இருக்கிறீர்கள்.” கல்யாணசுந்தரம் பிள்ளையின் பதட்டத்தைக் கண்ட முதுசூரியர் ஆறுதல் சொன்னார்.

     “அதற்கில்லை முதுசூரியரே. மழையின் பேரொலி குறைந்துவிட்டது. ஆனால் பம்பையின் ஒலியில் மாறுபாடு தெரிகிறதே. அதுதான் பதட்டமாக இருக்கிறது.”

     இளஞ்சூரியர் செவியைக் கூர்மையாக்கிக் கேட்டார். அவருக்கும் ஏதோ ஒலிமாறுபாடு புலப்பட்டது. “ஆம் அண்ணா. பம்பையின் ஒலி மிகக் குறைந்துவிட்டது போல் தெரிகிறது.”

     “இளஞ்சூரியர் சொல்வது சரிதான். பம்பையின் ஒலி என் செவியுடன் இணைந்தது. அதன் மாறுபாட்டை என்னால் உணர முடிகிறது” என்று படபடத்தவர் “மழை ஓய்ந்துவிட்டது. நான் ஆற்றங்கரைக்குச் சென்று பார்த்துவிட்டு வருகிறேன்” என்று மேல்வேட்டியை எடுத்தார். முதுசூரியர் பொறுத்துப் போகலாம் என்று சொல்லித் தடுப்பதற்குள் பெரியவர் கதவைத் திறந்துகொண்டு வெளியில் சென்றுவிட்டார்.

     மென்காற்று சாரலை அள்ளி முகத்தில் அறைந்தது. இல்லத்தைச் சுற்றி வந்து ஆற்றங்கரைக்குச் செல்லும் தோப்புவழியில் நடந்தார். ஆங்காங்கே மரங்கள் இடிவிழுந்து பலநாள் பயன்படுத்திய ஊதுகுழலை நட்டதுபோல நின்றிருந்தன. விடியல் அவற்றின் கருமையை கூட்டிக் காட்டியது. வியர்வை வழிய ஓய்ந்துபோன கால்களுடன் ஓட்டமும் நடையுமாக ஆற்றங்கரை நோக்கிச் சென்றுகொண்டிருந்தார். தென்னந்தோப்பைக் கடந்ததும் ஆற்றங்கரை. தோப்பில் பாதியைக் கடந்ததுமே அங்கு ஏதோ மாற்றம் நிகழ்ந்திருப்பதைப் புரிந்துகொண்டார். படபடப்புடன் ஓடினார். ஆளுயரத்தில் கோரைப்புல்வெளி மறித்து நின்றது. நீச்சல் அடிப்பதுபோல கைகளால் கோரையை விலக்கிக் கொண்டு சென்றார். கோரை முடிந்ததும் கண்ட காட்சி அவரை சிலையாக நிற்கச் செய்தது. 

அரங்கேற்றம் தொடரும் . . . 

முனைவர் இரா. கோகுல்
உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 641020

No comments:

Post a Comment