பக்கங்கள்

அரங்கேற்று காதை - 10

இதழ் - 150                                                                                    இதழ் - ௧0
நாள் : 23 - 03 - 2025                                                                 நாள் :  -  - ௨௦௨



அரங்கேற்று காதை - 10

திருவாமாத்தூர்க் கலம்பகம்

     மாத்தூர் சிவவழிபாட்டுக்கு வந்து ஊர் மாளிகையில் தங்கியருந்த அரசர் அச்சுததேவரிடம் ஊர்ப் பெரியவர்கள் சென்று இரட்டையர்களைப் பற்றியும் அவர்களது கவித்துவத்தைப் பற்றியும் அவர்கள் திருவாமாத்தூர் அம்மான் மீது பாடியுள்ள கலம்பகம் குறித்தும் சொல்லி அதனை அரங்கேற்றுவதற்குரிய அனுமதியையும் பெற்றனர். அரசரும் அரங்கேற்றத்தில் கலந்துகொள்வதாகத் தெரிவித்தார். மகிழ்ச்சியுடன் திரும்பிய பெரியவர்கள் மண்டபத்தில் தங்கியிருந்த இரட்டையர்களிடம் செய்தி அறிவித்தனர்.

     அரங்கேற்றத்திற்கு நல்ல நாள் குறிக்கப்பட்டது. கோயில் மண்டபத்தில் அரங்கேற்றத்திற்கான ஏற்பாடுகள் ஆயின. கல்யாணசுந்தரம் பிள்ளை நெஞ்சுநிறைந்த மகிழ்ச்சியுடன் இரட்டையர்களைக் கோயில் மண்டபத்திற்கு அழைத்துச் சென்றார். 

     கலம்பக சுவடிக்கட்டை வெள்ளித்தட்டில் பட்டுபோர்த்து தாங்கி கோயில் திருநிலையறை முன் நின்றிருந்தார் கல்யாண சுந்தரம்பிள்ளை. இரட்டையரும் அங்கு விழிமூடி நின்றிருந்தனர். அரசரும் அதிகாரிகளும் ஊர்ப்பெரியவர்களும் அங்கு குழுமியிருந்தனர். ஆமாத்தூர் அண்ணலுக்கு சிறப்பு வழிபாடுகள் நிகழ்த்தப்பட்டன. மலர் தூவி அர்ச்சனை செய்த சிவாச்சாரியார் இறைவன் திருமேனி மீதிருந்த மலர்க்குவியலை எடுத்துவந்து பட்டுபோர்த்திருந்த சுவடிக்கட்டின்மீது தூவி ‘நமசிவாய’ என்றார். கூட்டம் அதனை எதிரொலித்தது.

     வழிபாடுகள் நிறைவுபெற்று அனைவரும் மண்டபத்திற்கு வந்தனர். அரசர் இரட்டையர்களுக்குத் தனித்தனியாகப் பல்லக்கு ஏற்பாடு செய்தும் இளஞ்சூரியன் தன் தமையனைத் தானே மண்டபத்திற்குச் சுமந்து வருவதாகச் சொல்லி அவரைத் தன் தோள் தாங்கினார். நமசிவாய முழக்கத்துடன் அனைவரும் மண்டபத்தை அடைந்தனர். அரசருக்கும் ஊர்ப்பெரியவர்களுக்கும் இரட்டையர்களுக்கும் மண்டபத்தில் தனி இருக்கைகள் அமைக்கப்பட்டிருந்தன. அவற்றில் அவர்கள் இருக்கை கொண்டனர். புலவர்களும் பக்தர்களும் மண்டபத்தில் நிறைந்து அமர்ந்திருந்தனர். மலர்மணமும் அகிற்புகை மணமும் எங்கும் நிறைந்திருந்தது. 

     கோயில் மணியோசை எழுந்ததும் தண்டபாணிக் கவிராயர் அரசரைப் பார்த்தார். அரசர் அரங்கேற்றத்தைத் தொடங்கலாம் என்று கண்களால் குறிப்பு காட்டவே அவர் தனது இருக்கையிலிருந்து எழுந்து அவைமுன் வந்தார். 

     “மெய்யன்பர்களே! வணக்கம். இறைவனின் கருணையாலும் அரசர் பெருமானின் ஆதரவாலும் திருவாமாத்தூர் அனைத்து நலங்களையும் பெற்று விளங்கிவருகிறது. நெல்லும் கரும்பும் விளைந்து சிறப்பதைப்போலவே சொல்லும் பொருளும் இந்நிலத்தில் சிறந்திருப்பதை நாம் அறிவோம். அப்படியான ஒரு நிகழ்ச்சிதான் இன்று நிகழவுள்ளது.”

     “தில்லையில் இறைவனின் அனுமதியுடன் தில்லைக்கலம்பகம் பாடிய இரட்டையர்கள் நமது ஆமாத்தூர் அழகன் மீதும் ஒரு கலம்பகம் பாடியுள்ளனர். அதனை நமது அரசர் பெருமான் முன்னிலையில் அரங்கேற்ற திருவருள் கூட்டுவித்துள்ளது. இவ்வற்புத நிகழ்ச்சியில் நாமும் கலந்துகொள்ளும் பேறு பெற்றிருக்கிறோம். அரசர் அனுமதியுடன் இப்பொழுது ஆமாத்தூர் கலம்பகத்தை அரங்கேற்ற முதுசூரியன், இளஞ்சூரியன் இருவரையும் கேட்டுக்கொள்கிறோம்.”

     சொல்லிவிட்டு கவிராயர் தனது இருக்கையில் அமர்ந்தார். இளஞ்சூரியன் மூத்தவர் தோளைத் தொட்டார். முதுசூரியன் பேசினார். “அரசருக்கும் அவையோருக்கும் வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஆமாத்தூர் இறைவன் எங்களைக் கொண்டு ஒரு கலம்பகத்தை இயற்றச் செய்திருக்கிறார். அதனை அரசர் முன்னிலையில் அரங்கேற்ற ஏற்பாடாகியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. முதலில் எனது இளவல் இளஞ்சூரியன் ஆமாத்தூர்க் கலம்பக நூலை அறிமுகம் செய்து வைப்பார். அதன் பின்னர் நூல் அரங்கேற்றப்படும்.”

     இளஞ்சூரியன் தனது இருக்கையிலிருந்து எழுந்து நின்றார். தொண்டையைச் செறுமிக் கொண்டார். திருஞானசம்பந்தரின் ஆமாத்தூர் தேவாரப் பாடல் அவரது வாயினின்று வெளிப்பட்டது.

“பாம்பரைச் சாத்தியோர் பண்டரங்கன் விண்டதோர்
 தேம்ப லிளமதியஞ் சூடிய சென்னியான்
 ஆம்பலம்பூம் பொய்கை யாமாத்தூ ரம்மான்றன்
 சாம்ப லகலத்தார் சார்பல்லாற் சார்பிலமே”

தொடர்ந்து திருநாவுக்கரசரின் தேவாரத்தைப் பாடினார்.

“காமாத் தம்மெனுங் கார்வலைப் பட்டுநான்
 போமாத் தையறி யாது புலம்புவேன்
 ஆமாத் தூரர னேயென் றழைத்தலும்
 தேமாத் தீங்கனி போலத்தித் திக்குமே”

அடுத்ததாக சுந்தரரின் சொற்களைப் பாடினார்.

“பாடுவன் பாடுவன் பார்ப்பதி தன்னடி பற்றிநான்
 தேடுவன் தேடுவன் திண்ணெனப் பற்றிச் செறிதர
 ஆடுவன் ஆடுவன் ஆமாத் தூர்எம் மடிகளைக்
 கூடுவன் கூடுவன் குற்றம தற்றென் குறிப்பொடே”

     “அரசருக்கும் மெய்யன்பர்களுக்கும் வணக்கம். எனது தமையனார் முதுசூரியனும் நானும் சிவத்தலப் பயணமாகச் சென்று கொண்டிருப்பவர்கள். எங்களை இறைவன் திருவாமாத்தூர்க் கலம்பகத்தைப் பாட வைத்துள்ளார். இங்கு புலவர்கள் பலர் கூடியுள்ளனர். கலம்பகத்தின் இலக்கணத்தை அவர்கள் நன்கு அறிவர். மற்றவர்களுக்காக சுருங்கச் சொல்ல வேண்டுமானால் பதினெட்டு வகையான உறுப்புகளைக் கலந்து பாடுவதால் கலம்பகம் என்று இதற்குப் பெயர். இதன் இலக்கணத்தை பன்னிரு பாட்டியல் தெளிவாக எடுத்துக்காட்டுகிறது. 

‘சொல்லிய கலம்பகம் சொல்லின் ஒருபோகு
முதற்கண் வெண்பாக் கலித்துறை புயமே
அம்மனை ஊசல் யமகம் களி மறம்
சித்துக் காலம் மதங்கி வண்டே
கொண்டல் மருள் சம்பிரதம் வெண்டுறை
தவசு வஞ்சித்துறையே இன்னிசை
குறம் அகவல் விருத்தம் என வரும்
செய்யுள் கலந்து உடன் எய்தி அந்தம்
ஆதி யாக வரும் என மொழிப’
என்பது பன்னிரு பாட்டியல் கலம்பகத்திற்குத் தரும் விளக்கம்."

     “தம்பி, அதற்கு விளக்கத்தையும் சொன்னால் சிறப்பாக இருக்கும்” என்று முதுசூரியர் இடைச்சொல் பகர்ந்தார்.

     “நல்லது அண்ணா” என்றவர் பன்னிரு பாட்டியல் நூற்பாவிற்கு விளக்கம் சொல்லத் தொடங்கினார்.

     “ஒருபோகும் வெண்பாவும் முதல் கலியுறுப்பாக முற்கூறப்பெற்றுப் புயவகுப்பு, மதங்கம், அம்மானை, காலம், சம்பிரதம், கார், தவம், குறம், மறம், பாண், களி, சிந்து, இரங்கல், கைக்கிளை, தூது, வண்டு, தழை, ஊசல் என்னும் பதினெட்டுப் பொருட்கூற்று உறுப்புக்களும் இயைய, மடக்கு, மருட்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா, ஆசிரிய விருத்தம், கலி விருத்தம், கலித்தாழிசை, வஞ்சி விருத்தம், வஞ்சித்துறை, வெண்துறை என்னும் இவற்றால், இடையே வெண்பா கலித்துறை விரவ அந்தாதித் தொடையால் பாடுவது கலம்பகம்” என்று அவர் விளக்கம் தர அவை ஆகாகாரம் செய்தது.

இளஞ்சூரியன் தொடர்ந்து பேசினார்...

     “மெய்யன்பர்களே, இந்த திருவாமாத்தூர்க் கலம்பகம் மொத்தம் 102 பாடல்களைக் கொண்டது. காப்புச் செய்யுள் ஒன்று, நூல் 101 பாடல்கள். நாம் முன்னர் சொன்னது போல கலம்பகத்துக்குரிய உறுப்புகளுள் இந்நூலில் புயவகுப்பு, வலைச்சியர், சம்பிரதம், குறம், மடக்கு, இடைச்சியர், மறம், அம்மானை, கொற்றியார், சித்து, காலம், ஊசல், மதங்கியார், பாண் என்பன பயின்று வந்துள்ளன. இவை மட்டுமன்றி யோகினியார் என்ற உறுப்பும் புதிதாக இதில் இடம்பெற்றுள்ளது. இந்த அறிமுகத்தோடு எனது தமையனார் நூலை அரங்கேற்றுவார். போற்றி ஓம் நமசிவாய.”

     கண்கள் இருண்டிருந்தாலும் தமிழ் அவரகத்துக்கு ஒளி வழங்கிக் கொண்டிருப்பதை அங்கிருந்த அனைவரும் உணர்ந்தனர். 

அரங்கேற்றம் தொடரும் . . . 

முனைவர் இரா. கோகுல்
உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 641020

No comments:

Post a Comment