இதழ் - 155 இதழ் - ௧௫௫
நாள் : 27 - 04 - 2025 நாள் : ௨௭ - ௦௪ - ௨௦௨௫
பம்பை, புற்றில் பாம்பு தலைதிரும்பி நுழைவதைப் போல எதிர்த் தோப்புக்குள் நுழைந்து திசைதிரும்பிப் பாய்ந்து கொண்டிருந்தது. கல்யாணசுந்தரம் பிள்ளை ஊருக்குள் திரும்பி ஆமாத்தூர் கோயில்நோக்கி வேகமாக நடந்தார். ஊரே கோயில் நோக்கி ஓடிக் கொண்டிருந்தது. யாரிடத்திலும் நின்று என்னவாயிற்று என்று கேட்க அவருக்குத் தோன்றவில்லை. கோயில் கோபுரம் தெரிந்தவுடன் அவரது நடையில் மேலும் விரைவு கூடியது. அரசர் நின்றிருந்தார். அவருக்குக் குடைபிடித்துக் கொண்டு காவலர் இருவர் நின்றிருந்தனர். தண்டபாணிக் கவிராயர் அரசருடன் ஏதோ தீவிரமாகப் பேசிக் கொண்டிருந்தார். ஊரே கோயில் அருகில் திரண்டிருப்பதைக் கண்டார்.
வியர்வையும் மூச்சும் பெருக தண்டபாணிக் கவிராயரின் அருகில் வந்து நின்றார். அவர்களது பேச்சிலிருந்து நிலைமையை ஊகித்துக் கொண்டவர் கோயிலைச் சுற்றிக் கொண்டு ஓட்டம் போல நடந்தார். தோப்பில் திசைமாறிய பம்பையாறு கோயிலை வளைத்துக் கொண்டு திசை திரும்பியிருந்தது. பம்பையின் கிழக்குக் கரையில் இருந்த கோயில் இப்பொழுது மேற்குக் கரைக்கு மாறியிருந்தது. பம்பையின் திசைப்பெயர்ச்சி அவரை மட்டுமல்ல அரசர் உட்பட அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.
மீண்டும் அரசர் அருகில் வந்து வணங்கி நின்றார் கல்யாணசுந்தரம் பிள்ளை. இல்லத்திற்குச் சென்று இரட்டையரை அழைத்து வரவேண்டும் என்று அடிவைத்தவர், தொலைவில் இளஞ்சூரியர் முதுசூரியரைத் தோளில் சுமந்து வருவதைக் கண்டார்.
*****
மேகத்திரள் நீங்கி மாலை சூரியன் மேற்கில் பொன்னென ஒளிர்ந்து கொண்டிருந்தது. கோயில் மண்டபத்தில் அரசரும் புலவர்களும் ஆமாத்தூர் மக்களும் திரண்டிருந்தனர். இரட்டையர் எப்பொழுதும் போல தங்கள் இருக்கையில் அமர்ந்திருந்தனர். முந்தைய நாட்களைப் போலன்றி இன்று கூடியிருந்தோரின் மனநிலை பம்பையாற்றைப் போலவே மாற்றம் அடைந்திருந்தது. வியப்புகொள்ளாத ஒரு உள்ளமும் அந்த மண்டபத்தில் இல்லை. இப்படியொரு அற்புதம் நடக்கும் என்றோ அதைக் கண்களால் காண்போம் என்றோ ஒருநாளும் ஆமாத்தூர் மக்கள் நினைத்திருக்கவில்லை. அரசர் முதல் அனைவரும் பேச்சற்றிருந்தனர். தண்டபாணிக் கவிராயரும் சிவசிதம்பரமும் குணசேகரரும்தான் ஏதோ மெல்ல தங்களுக்குள் உரையாடிக் கொண்டிருந்தனர். மழைநீரால் நஞ்சுமுறிக்கப்பட்ட காரியார் உள்ளிட்டோர் தலைகவிழந்து சொல்லற்றிருந்தனர். கல்யாணசுந்தரம் பிள்ளையால் இரட்டையர் முன்னிலையில் அமரவே இயலவில்லை. மண்டபத் தூணில் சாய்ந்து நின்றிருந்தார்.
ஆமாத்தூர் அழகனுக்கான பூசனைகள் தொடங்கியிருந்தன. மணியோசை எழுந்தது. அன்று சிறப்புத் தைல முழுக்கில் அழகன் தோய்ந்திருந்தார். தேவார முழக்கம் அரங்கேற்ற மண்டபம் வரை எதிரொலித்தது. தண்டபாணிக் கவிராயர் அரசரின் விழியாணையேற்று எழுந்தார்.
“அரசர் பெருமானுக்கு வணக்கத்தை உரித்தாக்கிக் கொள்கிறேன். இரட்டையர்களையும் வணங்கிக் கொள்கிறேன். ஆமாத்தூர் மக்களுக்கு இந்த நாள் மறக்க முடியாத நாளாகும். நமது வாழ்நாளில் இப்படியொரு அற்புதத்தை நாம் கண்டதில்லை. தேவார மூவரது வரலாற்றில் நாம் வாசித்து கேட்டு மெய்சிலர்த்த நிகழ்ச்சியைப் போன்ற ஒன்று நம் கண்முன் ஓடிக் கொண்டிருக்கிறது. இதற்கு நாம் சாட்சியாய் இருக்கிறோம் என்பதே நமக்குக் கிடைத்துள்ள பெரும்பேறு.” சொல்லும்பொழுதே அவருக்கு நா குழறியது.
“நேற்றைய அரங்கேற்றத்தில் என்ன நிகழ்ந்தது என்பதை நாம் அறிவோம். இரட்டைப் புலவர்கள் திருவாமாத்தூர்க் கலம்பகம் எங்கள் சொலல்ல, ஆமாத்தூர் இறைவனே எங்கள் வழியாக இயற்றிக் கொண்டது என்றனர். நாம் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளாது போனோம். ‘மாதைநாதர் வலங்கொள்பம்பை மேற்கரை கோயில் கண்டார்’ என்று அவர்கள் பாடிய சொற்கள் நமக்குப் பிழையாகத் தெரிந்தன. ஆனால் அவர்களின் சொற்களை மெய்ப்பிக்க பம்பையாற்றையே ஆமாத்தூர் இறைவன் திசை திருப்பியிருக்கிறார் என்றால் அவர்களின் சிவபக்தியைச் சொல்ல சொற்களே இல்லை. இத்தகைய தமிழ்ப் புலவர்களும் சிவபக்தர்களுமான இரட்டையர் நமது ஊருக்கு வந்து தங்கியிருப்பதும் நமது இறைவன் மீது கலம்பகம் பாடியதும் நமக்கான அருளன்றி வேறல்ல. நாம் அவர்களைப் போற்றிக் கொண்டாடுவதன்றி வேறென்ன செய்வது.”
கூட்டத்தைப் பார்த்து பேசிக் கொண்டிருந்த தண்டபாணிக் கவிராயர் இரட்டையரைப் பார்த்தார். “முதுசூரியரே, இளஞ்சூரியரே, உங்கள் பெருமையுணராது நாங்கள் நேற்றைய அரங்கேற்றத்தில் தங்களுக்கு சங்கடத்தை விளைவித்துவிட்டோம். பொறுத்துக் கொள்ள வேண்டும் என்று ஆமாத்தூர் மக்கள் சார்பாகக் கேட்டுக் கொள்கிறேன். எப்பொழுதும் போல தாங்கள் அரங்கேற்றத்தை நடத்தி நிறைவுசெய்ய வேண்டும். எங்கள் விண்ணப்பத்தை ஏற்றுக் கொள்ளுங்கள்” என்று சிரந்தாழ்த்திக் கரங்குவித்தார்.
“அரசருக்கு எங்கள் வணக்கம்” என்று முதுசூரியர் பேச்சைத் தொடங்கினார். “நேற்று நடந்தவை நேற்றோடு சென்றுவிட்டது கவிராயரே. ஆமாத்தூர் இறைவன் தனது சொற்களை பம்பையாற்றைத் திசைமாற்றி உறுதிபடுத்தியிருக்கிறார். ஆறு திசைமாறுவதற்காகத்தான் எங்களை இங்ஙனம் பாடச் செய்திருக்கிறாரோ என்றும் நினைக்கத் தோன்றுகிறது. எங்ஙனமாயினும் சிவனடி போற்றும் தமிழ்ப் புலவர்களின் சொற்கள் பொய்த்துப் போவதில்லை என்பதை உலகம் அறிந்தது. அதற்கு நாங்களும் ஒரு கருவியாக இருந்தோம் என்பதில் உவகைகொள்கிறோம். கவிராயர் கேட்டுக் கொண்டதைப் போலவே கலம்பக அரங்கேற்றம் இறைவன் அருளால் நடைபெறும்.”
“சிவ சிவா” என்று மண்டபம் முழங்கியது.
காரியார் எழுந்தார். “எங்கள் அகந்தையை பம்பையாறு அடித்துச் சென்றுவிட்டது புலவர்களே. நீங்கள் என்னை மன்னிக்க வேண்டும்.” சொல்லும்பொழுது அவரது கண்கள் பனித்தன.
“அண்ணா, அரசர் பெருமான் அனுமதியுடன் இப்பொழுதே கலம்பக அரங்கேற்றத்தைத் தொடங்கிவிடலாமே” இளஞ்சூரியர் சொல்ல அவை ஆரவாரஞ் செய்தது.
அரங்கேற்றம் தொடரும் . . .
முனைவர் இரா. கோகுல்
உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 641020
No comments:
Post a Comment