பக்கங்கள்

அரங்கேற்று காதை - 10

இதழ் - 156                                                                                           இதழ் - ௧
நாள் : 04 - 05 - 2025                                                                        நாள் :   - ௨௦௨



அரங்கேற்று காதை - 10

திருவாமாத்தூர்க் கலம்பகம்

     அரங்கேற்றம் மீண்டும் தொடங்கியது. 

     இரண்டு நாட்களில் கலம்பகத்தின் மற்ற பாடல்கள் பாடப்பட்டு பொருள் விரிக்கப்பட்டன. இறுதிப் பாடலை முதுசூரியரே பாடினார்.

“மகனுக்கு மாலுக்கு முதலான வையங்கள் பதினாலின்வாய்
 அகிலத்தெவ் வுயிருக்கு முயிரான வாமாதை யழகற்குமே
 நகமுற்று கடலுங் கடைந்தார்க ளுயர்நஞ்ச முண்டார்களோ
 முகமொக்க வமுதாக வுண்டார்கள் முப்பத்து முத்தேவரே”

     “மெய்யன்பர்களே! ஆமாத்தூர் அழகன் மீது நாங்கள் பாடிய கலம்பகம் இத்துடன் நிறைவு பெற்றது. ஆமாத்தூர் அழகன் உலகோர் அனைவருக்கும் அருள் செய்யட்டும் என்று வேண்டுக் கொள்கிறோம். போற்றி ஓம் நமசிவாய”

     தண்டபாணிக் கவிராயர் வழிநீர் பெருக “போற்றி ஓம் நமசிவாய” என்றார். அரசர் முதலானோரும் அதை ஏற்று முழங்கினர். சிறப்பு வழிபாடுகள், போற்றுதலுக்குப் பிறகு அரசர் இரட்டைப் புலவர்களுக்கு பெருஞ்சிறப்பு செய்தார். அனைவரிடமும் விடைபெற்றுக் கொண்டு தனது மாளிகை சென்றார். அனைத்து உபசாரங்களும் நிறைவுபெற்று கோயிலிலிருந்து அனைவரும் வெளியேறினர். 

     இளஞ்சூரியரின் தோளமர்ந்து பம்பையாற்றங்கரைக்குச் சென்றார் முதுசூரியர். இருவரும் நிலவொளியில் நனைந்தவாறு கரையில் தனித்திருந்தனர். திருவாமாத்தூர்க் கலம்பகச் சுவடிக்கட்டுகளைத் தாங்கியவாறுவந்த கல்யாணசுந்தரம் பிள்ளை அவர்களை இல்லத்திற்கு அழைத்துச் செல்வதற்காக வந்தார். பின்னால் நின்று “புலவர்களே” என்றழைத்தார்.

     இளஞ்சூரியர் மூத்தவரைச் சுமந்தவாறே திரும்பினார். கல்யாணசுந்தரம் பிள்ளையின் கரங்கள் குவிந்தன. வழிநீர் பெருகியது. ஏறுகந்தேறிய பெருமானன்றி அங்கு யாருமில்லை.

அரங்கேற்றம் தொடரும் . . . 

முனைவர் இரா. கோகுல்
உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 641020

No comments:

Post a Comment