பக்கங்கள்

அரங்கேற்று காதை - 10

இதழ் - 151                                                                                 இதழ் - ௧
நாள் : 30 - 03 - 2025                                                            நாள் :  -  - ௨௦௨



அரங்கேற்று காதை - 10

திருவாமாத்தூர்க் கலம்பகம்

     “அன்பர்களே! கலம்பகம் இலக்கணம் குறித்தும் திருவாமாத்தூர்க் கலம்பகம் குறித்தும் எனது தம்பி எடுத்துரைத்தார். இனி நாம் நூல் தரும் செய்திகளைச் சிந்திக்கலாம். மரபுப் படி முதலில் காப்புச் செய்யுள் பாடப்பட்டுள்ளது. அதைச் சொல்லித் தொடங்கலாம்.”

“தஞ்சமென்று அமரர் கெஞ்சத் தானவர் அதனின் விஞ்ச
வஞ்சவே வருநஞ் சுண்ட வழகரா மாதை யார்க்கு
மஞ்சுசேர் பொழில்சூழ் பம்பை மாறுய ரந்தீர்த் தானைக்
கஞ்சநாண் மலர்கொண் டேத்திக் கலம்பகஞ் செய்வொம் யாமே”

என்று முதுசூரியர் சொல்லி நிறுத்தியதும் கோயில் மணி முழங்கியது. ஆமாத்தூர் அழகரின் அருள் இந்நூலுக்கு உரியதை அனைவரும் உணர்ந்தனர். முதுசூரியர் விழிமூடி கை தலைவைத்து வணங்கினார். 

     “இனி நூலுக்குள் செல்வோம். முதற்பாடல் மயங்கிசைக் கொச்சகக் கலிப்பாவால் ஆனது. தரவு, தாழிசை, அராகம், அம்போதரங்கம், சுரிதகம் என்று கலிப்பாவின் இலக்கணத்துடன் அமைந்துள்ளது. முதலில் தரவுப் பகுதி” என்று சொல்லிப் பாடலைப் பண்ணமைதியுடன் பாடினார்.

“பூமேவு சதுர்முகத்துப் பொலிமறையோன் சடங்கியற்ற
மாமேவு பசுந்துளவ மாயனுத கம்பொழிய
வீராறு விளக்கெறிப்ப விமையவர்பல் லாண்டிசைப்பப்
பாரேழு பாலிகையுட் பல்லுயிரு மங்குரிப்பக்
குலகிரிகாற் பகிரண்ட கூடநெடுங் காவணத்தே
யுலகனைத்து மீன்றாளை யுயர்மனஞ்செய் தருளினையே”

முதுசூரியரின்   குரலிலும்  பாடலின்  சொல்லிலும்   பொருளிலும்  புலவர்குழு  மயங்கியது. பாட்டிற்குப் பொருள் விரித்தார் மூத்தவர்.

     “தாமரையில் வீற்றிருக்கும் பிரம்மன் சடங்குகளைச் செய்ய, துளசியணிந்த மாயவன் மழைத்துளி பொழிய, இமையவர்கள் பல்லாண்டு பாட, ஏழுலகங்களிலும் வாழும் உயிரிகள் கூடிநிற்க, குலகிரியில் போடப்பட்ட நெடிய பந்தலில் உலகனைத்தையு ஈன்றெடுத்தவளை நீ திருமணம் செய்தாயே” என்று நிறுத்திவிட்டு அவையைப் பார்த்து “இறைவனுக்கும் இறைவிக்கும் நடந்த அந்த மணவிழாவின் அழகைக் கண்ட தேவர்கள் வழியிமைக்க மறந்து போயினர். அவர்கள் இப்பொழுதுவரை இமைக்காமல் இருந்து இமையவர் என்று பெயர் பெற்றுவிட்டனர்” என்றார்.

     தேவர்கள் இமைக்காமல் இருப்பதற்கு இப்படியொரு காரணத்தை இதுகாறும் அவர்கள் யாரும் கேட்டறியததனால் பொம்மை பெற்ற சிறுமிபோல பெரும் பரவசமுற்றனர். 

     “அஹா! ஆஹா!” என்றார் அரசர்.

     முதற்பாடலிலேயே அரசரின் நன்மதிப்பை அவர்கள் பெற்றனர். பக்தர்கள் “போற்றி போற்றி” என்று ஆரவாரித்தனர். முதுசூரியர் அடுத்தடுத்த பகுதிகளை விளக்கிவிட்டு சுரிகப்பகுதிக்கு வந்தார். 

“ஆமா தையினுறை யழகிய நாதநின்
 றேமா மலரடி சிந்தைவைத் திறைஞ்சுதூஉம்
 எம்பா வங்கெட விடர்கெட விராப்பகல்
 பம்பா நதிப்புனல் படிகுதும் யாமே
 ஓடினு மாடினு முறங்கினும் விழிப்பினும்
 பாடினுந் திருப்புகழ் பாடிக்
 கூடினுந் திருவடி கூட்டுங்கோ வெனவே”
என்று சொல்லிப் பாடலுக்குப் பொருள் கூறினார்.

     தங்கள் ஊர் நதியையும் அதன் புனிதத்தையும் முதுசூரியர் சொல்லக் கேட்ட அவர்கள் புளகாங்கிதம் அடைந்தனர். 

     அரசர் எழுந்து “முதுசூரியரே, இந்தப் பாடலை மற்றொரு முறை சொல்லி விளக்க வேண்டும்” என்றார்.

     “நல்லது அரசே!” என்று மீண்டும் பாடலைச் சொல்லிப் பொருள் விரித்தார்.

     அங்கிருந்த புலவர்கள் வாயில் “எம்பா வங்கெட விடர்கெட விராப்பகல் பம்பா நதிப்புனல் படிகுதும் யாமே” என்ற அடிகள் மீண்டும் மீண்டும் ஒத்தன.

     முதுசூரியரை போற்றி மகிழும் மக்கள் குரலைக் கேட்ட இளஞ்சூரியர் விழிநீர் பெருக்கி  அமர்ந்திருந்தார்.

     தொடர்ந்து பாடல்களைச் சொல்வதும் பொருள் விரிப்பதுமாக இருந்தார் முதுசூரியர். மக்கள் திரள் தென்றல்போலவும் கொண்டல் போலவும் அமைதியாகவும் ஆரவாரமாகவும் அவர்தரும் செய்திகளைக் காதால் உள்ளத்திற் பாய்ச்சிக் கொண்டிருந்தனர். பத்துப் பாடல்கள் முதல்நாளில் அரங்கேற்றப்பட்டுவிட்டன.

     தண்டபாணிக் கவிராயர் எழுந்து, “இத்துடன் இன்றைய அரங்கேற்றத்தை நிறைவுசெய்துகொள்வோம். அரசர் முன்னிலையில் நாளை அரங்கேற்றம் நடைபெறும்” என்று அறிவித்தார்.

     நெடுநாட்கள் கழித்து செவிக்கு நல்விருந்து வாய்த்த மக்கள் மகிழ்ச்சியுடன் ஆமாத்தூர் அழகனை வழிபட்டுச் சென்றனர். 

     அரசரை மாளிகைக்கு மரியாதையுடன் அனுப்பிவிட்டு தண்டபாணிக் கவிராயரும் மீனாட்சிசுந்தரம் பிள்ளையும் மற்ற புலவர்களும் இரட்டையரைச் சூழந்து நின்று வாழ்த்தினர். தங்கள் ஊருக்கு இரட்டையர் வந்தது தங்கள் நற்பேறு என்றனர். பம்பையைச் சிறப்பித்துப் பாடியதைப் போற்றினர்.

     இரட்டையருக்கு ஊருக்குள் தனியில்லம் அமர்த்தியிருந்தனர். அங்கு அழைத்துச் சென்று தங்கவைத்தனர்.

     “போய் வருகிறோம் புலவர்களே” என்று கை கூப்பினர் புலவர்கள்.

     “நன்றி போய் வருங்கள்” என்றார் முதுசூரியன்.

     மீனாட்சிசுந்தரம் பிள்ளை மட்டும் அவர்களுடனேயே அரசர் ஆணைப்படி தங்கியிருந்தார். இல்லத்தின் கதவுகள் கற்றில் படபடத்தன.

     “பெரியவரே, காற்று பலமாக வீசுகிறதே. மழைக்கு வாய்ப்புண்டா?” முதுசூரியன் கேட்டார்.

     “கோடை கழியும் காலமல்லவா, பெருமழைக்கு வாய்ப்பில்லையே. ஏனோ மேகம் திரள்கிறது.”

     “இயற்கையும் இறைவனும் ஒருபோலத்தானே. நம்மால் முழுமுற்றாக என்றும் புரிந்துகொள்ள இயலாதே” என்று புன்னகைத்தார் முதுசூரியர்.

     மேற்கே வானில் கருக்கல் கட்டிக் கொண்டிருந்தது. காரணமின்றி விசும்பின் ஒரு துளியும் பெய்வதில்லையே.

 அரங்கேற்றம் தொடரும் . . . 

முனைவர் இரா. கோகுல்
உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 641020

No comments:

Post a Comment