பக்கங்கள்

ஆத்திசூடி வெண்பா - 11

இதழ் - 13                                          இதழ் - ௧௩

நாள் : 24-07-2022                                  நாள் : ௨௪-௦௭ - ௨௦௨௨
 
 

ஆத்திசூடி (ஒளவை)
 துவது ழியேல்
 
 
உரை
     அறிவுதரும் நல்ல நூல்களைப் படிப்பதை விடாமல் கடைபிடி.

ஆத்திசூடி வெண்பா (இராமபாரதி)
பாடல் - 11

     மச்சகந்தி தன்வயிற்றில் வந்துதித்து மோதலினால்
     விச்சைபெற்ற வேத வியாசனைப் பார் - நிச்சயமே
     பன்னுதமிழ்ப் புன்னைவனப் பார்த்திவனே யுன்மைநூ
     லின்னோ துவதொழி யேல்.


உரை
     புன்னைவனநாதனெனும் அரசனே! மச்சகந்தி என்னும் மீனவப் பெண்ணின் வயிற்றில் பிறந்திருந்தாலும் கற்றலெனும் செயலினால் அறிவுவிளக்கம் பெற்ற வேத வியாசனைக் காண்பாயாக. எனவே ஆராய்ந்து தமிழில் எழுதப்பட்டுள்ள அறிவுநூல்களை என்றும் படிப்பதை விட்டுவிடாதே.

வியாசர் கதை
     முன்னொரு காலத்தில் பராசரமுனிவர் என்பவர் பல சிவத்தலங்களை வழிபட்டும், புனிதநீராடியும் யாத்திரை செய்து கொண்டிருந்தார். அப்பொழுது அவர் கௌதமை (கங்கை என்பாருமுளர்) என்னும் ஆற்றிலும் புனித நீராடினார். நீராடிய பின்னர் கௌதமையாற்றைக் கடக்க எண்ணினார். ஆனால் ஓடம்விடுவார் யாருமில்லை. எனவே அங்கிருந்த மச்சகந்தி என்னும் மீனவப் பெண்ணிடம் தன்னை அக்கரை கொண்டு சேர்க்க இயலுமா என்று கேட்டார். மச்சகந்தி ஆயிரம் பேருடைய எடையின்றி இந்த ஓடத்தைச் செலுத்த இயலாது என்றாள். ஆயிரம் பேருடைய எடையையும் தானே அமைப்பதாகக் கூறி அவளைச் சம்மதிக்கச் செய்து ஓடமேறிச் சென்றார். செல்லும்பொழுது மச்சகந்தியிடம் அவருக்கு விருப்பம் உண்டாயிற்று. பனியினால் சூரியனை மறைத்து, அவளுடம்பில் எழும் மீன் நாற்றத்தை மாற்றி நறுமணம் கமழச் செய்து அவளுடன் ஓடத்திலேயே புணர்ந்தார். அதனால் அவளிடத்து வியாசமுனிவர் தோன்றினார். மீனவப் பெண்ணிடம் பிறந்தும் வியாசமுனிவர் தன் கல்வி வேள்விகளால் அறிவுவிளக்கம் பெற்று உலகத்தோரால் வணங்கப்படுகிறார்.
(இக்கதை இலங்கைப் பதிப்பிற் கண்டவாறு)

விளக்கம்
     மச்சகந்தி - மீன்நாற்றம் உடையவள். மகாபாரதத்தில் சத்தியவதி என்னும் பெயருடன் சந்தனு மன்னனின் மனைவியாக வருபவள்; வியாசரின் தாய். மீனவர் குலத்தில் தோன்றிடினும் கற்றல் செயலால் அறிவு பெற்றார் வியாசர் என்பதை “மச்சகந்தி தன்வயிற்றில் வந்துதித்தும் ஓதலினால் விச்சைபெற்ற வேத வியாசனைப் பார்” என்று 'உம்' கொடுத்துரைத்தார். “வேற்றுமை தெரிந்த நாற்பா லுள்ளும் கீழ்ப்பா லொருவன் கற்பின் மேற்பா லொருவனும் அவன்கட் படுமே” (புறம், 183) என்பது புறநானூறு. அறிவு பெறுவதற்குப் பிறந்த குலம் ஒருபொருட்டல்ல. விச்சை - அறிவு. வேதங்களைத் தொகுத்து வழங்கிய காரணத்தினால் வியாசர், வேத வியாசர் என்றழைக்கப்படுகிறார். பன்னுதல் - ஆராய்தல்; பன்னுதமிழ் - ஆராய்ந்து சொல்லப்பட்ட தமிழ்.

கருத்து
     அறிவு பயக்கும் நூல்களைப் படிப்பதை என்றும் விட்டுவிடாதே என்பது இப்பாடலின் மையக்கருத்து.
 

( தொடர்ந்து சிந்திப்போம் . . . )

முனைவர் இரா. கோகுல்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 641020
 

No comments:

Post a Comment