பக்கங்கள்

ஆத்திசூடி வெண்பா - 12

இதழ் - 14                                                                இதழ் - ௧௪
நாள் : 31-07-2022                                                   நாள் : ௩௧-௦௭-௨௦௨௨

 

ஆத்திசூடி (ஒளவை)

" ஔவியம் பேசேல் "

உரை :  யாரிடத்தும் பொறாமை கொண்டு பேசாதே.
 
ஆத்திசூடி வெண்பா (இராமபாரதி)
 
பாடல் - 12 :
     மாதர்முன்னே யுத்தரனு மாபெலவான் போலுரைத்துக்
     காதமரி லர்ச்சுனனாற் கட்டுண்டான் - ஆதலினால்
     வன்மைபெறு புன்னைவன நாதா சீருடைய
     திண்மையுன்னி யொவியம்பே சேல்
 
உரை :
      வலிமையிற் சிறந்த புன்னைவனநாதனே! பெண்களின் முன்னிலையில் உத்தரன் என்பான் தான் மாபெரும் வலியவன் என்று பல உரைத்தும் கொலைத் தொழிலுக்கிடமான போரில் அர்ச்சுனனால் கட்டப்பட்டான். எனவே நீ உன் வலிமையை ஆராய்ந்து யாரிடத்தும் பொறாமையினால் சொல்லாடாதே.
 
உத்தரன் கதை :
     பாண்டவர்களும் திரௌபதியும் விராட மன்னனுடைய மச்சநாட்டில் கரந்துறை வாழ்க்கை (அஞ்ஞாதவாசம்) வாழ்ந்து வந்தனர். அப்பொழுது கௌரவர் படை விராட நாட்டிலுள்ள பசுக்களைக் கவர்ந்து சென்றது. (இது போருக்கான அழைப்பு - வெட்சித்திணை என்று தமிழில் வழங்குவர்). விராடனின் மகன் உத்தரன் பசுக்களைக் கவர்ந்து சென்றோரை இமைப்பொழுதில் வீழ்த்தி வெல்வேன் என்று தாய் முதலிய பெண்களிடம் சொல்லிவிட்டுக் கௌரவரை எதிர்க்கச் சென்றான். ஆனால் கௌரவப் படையைக் கண்டவுடன் அஞ்சி நடுங்கித் தேர்விட்டு ஓடினான். அவனது தேரோட்டியாயிருந்த திருநங்கை வடிவிலிருந்த அர்ச்சுனன் அவனைப் பிடித்துக் கட்டினான்.
(இக்கதை இலங்கைப் பதிப்பிற் கண்டவாறு).
 
விளக்கம் :
      பெலவான் - வலிமையானவன். காது - கொலை. அமர் - போர். காதமர் என்பது இவண் ஆநிரை கவர்தல். ஆநிரை கவர்தல் என்பது நாட்டிலுள்ள பசுக்களைக் கவர்ந்து செல்லுதல். இதனைப் போருக்கான அழைப்பாகக் கொள்வர். சங்க இலக்கியத்தில் வெட்சித்திணை ஆநிரை கவர்தலுக்குரியது. திண்மை - உறுதி, வலிமை. உன்னி - ஆராய்ந்து.
 
கருத்து :
     பொறாமை கொண்டு யாரிடத்தும் சொல்லாட வேண்டாம் என்பது பாடலின் மையக்கருத்தாகும்.

 

( தொடர்ந்து சிந்திப்போம் . . . )

முனைவர் இரா. கோகுல்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 641020

 

No comments:

Post a Comment