பக்கங்கள்

ஆத்திசூடி வெண்பா - 13

இதழ் - 15                                                                 இதழ் -
நாள் : 07-08-2022                                                   நாள் :
௦௭-௦-௨௦௨௨

 

ஆத்திசூடி வெண்பா - 13

ஆத்திசூடி (ஔவை)

அஃகஞ் சுருக்கேல்

உரை மிகுந்த வருவாய்க்கு ஆசைப்பட்டு தானியங்களைக் குறைத்து விற்காதே.

ஆத்திசூடி வெண்பா (இராமபாரதி)

பாடல் - 13

     மைக்கடல்கொண் முட்டைதனை வாங்குவோ மென்றுசிட்டுப்
     புக்கதனை வென்றதுதன் புத்தியினால் - அக்கதைபோல்
     வேளாளா புன்னைவன மேகமே யுண்மையெனக்
     கேளாயஃ கஞ்சுருக் கேல்

 
உரை
     வள்ளலே! புன்னைவனநாதனெனும் மேகமே! கருமைநிறக் கடல் கொண்டுசென்ற தனது முட்டையை மீண்டும் பெறுவதற்காகச் சென்ற சிட்டுக்குருவி, தனது அறிவுக்கூர்மையினால் அக்கருங்கடலை வென்றது. அந்தக் கதையைப் போல் நான் சொல்வதை உண்மையெனக் கேட்பாயாக! தானியங்களைக் குறைத்து விற்காதே.
 
சிட்டுக்குருவி கதை
     ஒரு கடற்கரையில் சேவலும் பேடுமாக (ஆண், பெண்) இரண்டு சிட்டுக்குருவிகள் வாழ்ந்து வந்தன. பேடு தன் முட்டைகளையெல்லாம் கடல்வந்து கவர்ந்துகொண்டு போவதைக் கண்டு வருந்தி தன் இணையிடம் முறையிட்டது. சேவல் மற்ற பறவைகளையும் அழைத்துக்கொண்டு போய் பறவையரசனாகிய கருடனிடம் முறையிட்டது. கருடன் திருமாலிடம் சென்று முறையிட்டது. திருமால் கடலை அழைத்துக் கண்டித்து முட்டைகளைச் சிட்டுக்குருவிகளிடம் ஒப்படைக்கச் செய்தார். 
(இக்கதை இலங்கைப் பதிப்பிற் கண்டவாறு). 
 

விளக்கம்

     மை - கருமை; மைக்கடல் - கருங்கடல். நிலத்தை வளமாக்கும் மழைமேகம் போல மக்களின் வாழ்வை வளப்படுத்தும் வள்ளல் புன்னைவனநாதன் என்பதால் “வேளாளா” என்றும் “புன்னைவன மேகமே” என்றும் அழைத்தார். வேளாளன் - ஈகைக்குணம் உடையவன். வேளாளன் என்பான் விருந்திருக்க உண்ணாதான்” (திரிகடுகம், பா.12) என்கிறது தமிழ் அறநூல். மழைமேகத்தின் கொடையை வேளாள குணத்தின்மீது ஏற்றிச் சொன்னார்.  இச்சிட்டுக்குருவி கதைக்கும் அஃகஞ் சுருக்கேல் ஆத்திசூடி அடிக்கும் இருக்கும் தொடர்பு புலப்படவில்லை. 'அஃகம்என்பதைத் 'தானியம்' என்று கொள்ளாமல் 'முறைமை' எனப் பொருள்கொண்டு முறைமை தவறாதே” என்றும் கூறலாம். சிட்டுக்குருவி பெரிய கடலை வென்றது போல முறைமை தவறினால் சிறிய தவறும் பெரும் இன்னல்களை உருவாக்கும். எனவே “அஃகஞ் சுருக்கேல்” என்றார். 
 
கருத்து
     தானியங்களைக் குறைத்து விற்காதே. கொண்ட தொகைக்கேற்ப பொருட்களைக் கொடு. எப்பொழுதும் முறைமை தவறி நடக்காதே என்பது பாடலின் மையக்கருத்தாகும்.


( தொடர்ந்து சிந்திப்போம் . . . )

முனைவர் இரா. கோகுல்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 641020
 

No comments:

Post a Comment