பக்கங்கள்

ஆத்திசூடி வெண்பா - 14

இதழ் - 16                                                              இதழ் -  
நாள் : 14-8-2022                                                   நாள் : --௨௦௨௨

  
ஆத்திசூடி (ஔவை)
கண்டொன்று சொல்லேல்

உரை
     கண்ணால் கண்டதற்கு வேறாகச் சொல்லக் கூடாது. (பொய்யுரை கூடாது).

ஆத்திசூடி வெண்பா (இராமபாரதி)
பாடல் - 14

     கள்ளற் குரைத்தான் கனசத் தியவிரதன்
     உள்ளபடி வேதியர்சொல் லோர்வழியைத் - தெள்ளியசீர்
     மாதனதா புன்னைவன வள்ளலே மேலெண்ணா
     தேதெனினுங் கண்டனசொல் லேல்


உரை
     தெளிந்த புகழைத் தருதற்குரிய செல்வத்தையுடைய புன்னைவனநாதனெனும் வள்ளலே! செல்வனான சத்தியவிரதன் என்பவன் வேதியர் சொல்லொன்றைக் கள்வர்களுக்கு உரைத்தான். (அதன் விளைவை அனுபவித்தான்). எனவே எதுவாயினும் நன்கு ஆராயாமல் எல்லாவற்றையும் வெளியில் சொல்லாதே.

சத்தியவிரதன் கதை
     சத்தியவிரதனைப் பற்றிய இரண்டு கதைகள் தெரியவருகின்றன. ஒன்று திருமால் மச்சாவதாரம் கொண்டபொழுது அம்மீனை எடுத்த வளர்த்த சத்தியவிரதன் பற்றியது. மற்றொன்று இராமாயணத்தில் வரும் திரிசங்குவின் கதை. அவரின் இயற்பெயர் சத்தியவிரதன் என்பது. இவ்விருவர் கதைகளில் இவ்வெண்பா குறிப்பிடும் கதை எதுவெனப் புலப்படவில்லை. இலங்கைப் பதிப்பிலும் கதை பற்றிய குறிப்பில்லை.

விளக்கம்
     கள்ளர் - திருடர். புன்னைவனநாதன் பெரும் செல்வனாகவும் வள்ளலாகவும் விளங்கிய திறத்தை “மாதனதா புன்னைவன வள்ளலே” என்றார். மா - பெரிய. நன்முறையில் ஈட்டப்பட்ட செல்வம் புகழ்தரக் கூடியது. புன்னைவனநாதனின் செல்வம் அத்தன்மையது என்பதை “தெள்ளியசீர் மாதனதா” என்றார். சீர் - புகழ், சிறப்பு.

     ஔவை எழுதிய ஆத்திசூடி “கண்டொன்று சொல்லேல்” என்றும் இராமபாரதி எழுதிய ஆத்திசூடி வெண்பா “கண்டன சொல்லேல்” என்றும் சொல்கிறன்றன.

கருத்து
     கண்ணால் கண்டவற்றை மறைக்காமல் மாற்றாமல் சொல்க. பொய்யுரைக்க வேண்டாம். ஆராயாமல் எதையும் சொல்ல வேண்டாம் என்பது பாடலின் மையக்கருத்தாகும்.

 
( தொடர்ந்து சிந்திப்போம் . . . )

முனைவர் இரா. கோகுல்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 641020
 

No comments:

Post a Comment