இதழ் - 200 இதழ் - ௨00
நாள் : 24 / 05 / 2026 நாள் : ௨௪ / 0௫ / ௨௦௨௬
“சைலாதி நான் சொல்வதைக் கவனமாகக் கேள். இடையில் ஏதேனும் ஐயம் எழுந்தால் நான் சொல்லி நிறுத்தியதும் நீ கேட்கலாம்”
“ஆணை ஐயா” என்று கரங்குவித்தான்.
“சைலாதி தவஞ்செய்வதற்கு முன் ஏன் தவம் செய்ய வேண்டும், அதனால் விளையும் பயன் யாது, தவத்தின் பயனை நுகர்பவன் யார், அப்பயனை அளிப்பவன் யார், பயன்கொள்பவனுக்கும் பயனளிப்பவனுக்குமான தொடர்பு யாது என்று தெரிந்து கொள்வது இன்றியமையாதது. எனவே அதனை முதலில் உனக்கு சொல்கிறேன். உள்ளத்தைத் திறந்து வாங்கிக் கொள்.”
“ஆணை ஐயா”
“அடிப்படையில் மூன்று பொருள்கள் என்றும் உள்ளன சைலாதி. ஒன்று இறை, இரண்டு உயிர், இறுதியாக தளை. இதனை பதி, பசு, பாசம் என்பர். பதியாகிய இறையே அனைத்திற்கும் முதல். அதுவே முடிவும் என்றுணர்க.”
எப்படி ஒரே பொருள் முதலும் முடிவுமாக இருக்கும் என்ற வினா எழுந்தாலும் துர்வாசரின் ஆணை கருதி சொல்லுதிர்க்காமல் அமர்ந்திருந்தான் சைலாதி.
“பசு என்றழைக்கப்படுவது உயிர். அது பாசத்தினால் கட்டப்பட்டிருப்பதால் அதனைப் பசு என்று அழைக்கின்றனர். எதனால் கட்டப்பட்டுள்ளது என்று உனக்குள் கேள்வி எழலாம்” என்று துர்வாசர் சைலாதியின் கண்களை உற்று நோக்கினார்.
“ஆம் ஐயா” என்றவன் கண்களின் கருவிழியில் எந்த சலனமும் இல்லை. தாய்க்கோழியைப் பின்பற்றிச் செல்லும் கோழிக்குஞ்சு போல அவனது உள்ளம் தனது சொற்களைப் பிடித்துக்கொண்டு பயணிப்பதை துர்வாசர் கண்டு ஆனந்தித்தார்.
“பசு பாசத்தால் கட்டப்பட்டுள்ளது. பாசம் என்பது கயிறுபோல. உயிரை அதன் இலக்கை அடையவிடாமல் கட்டிவைத்திருக்கும் கயிறு. பாசம் மூன்று சைலாதி. ஆணவம், கன்மம் மாயை என்று அவற்றிற்குப் பெயர். இந்த மூன்றுள் கன்மமும் மாயையும் இடையில் வந்தது.”
“அப்படியென்றால் ஆணவம்…” என்று அவன் நெஞ்சுதிர்த்த சொற்களுக்கு விடை சொல்வது போல அமைந்திருந்தது துர்வாசரின் நாவுதிர்த்த தொடர் சொற்கள்.
“ஆணவம் அப்படியல்ல. உயிர் என்றிருந்து இருக்கிறதோ அன்றிலிருந்து ஆணவமும் உள்ளது. ஆணவம்தான் கன்மமும் மாயையும் உயிரை வந்தடைவதற்கான மூலக்காரணம். எனவே மூலமலம் என்று ஆணவத்தைச் சொல்வார்கள். ஆணவத்தின் வலிமையைக் குன்றச் செய்து உயிரை மாயா கன்ம மலங்களிலிருந்து விடுவித்து தன் திருவடிகளில் சேர்த்துக் கொள்வது பதியின் அருள்.”
காற்று சலசலத்து. அரசமர இலைகள் அசைந்து ஒலியெலுப்பின. துர்வாசரின் சொற்கள் வேகங்கொண்டன. ஆனால் சைலாதியின் உள்ளங்கொள்ளும் வகையில் சுருக்கமாகவும் தெளிவாகவும் அமைந்திருந்தன.
“பதியும் பசுவும் அறிவுடைய பொருள்கள் சைலாதி. பாசம் அறிவற்ற பொருள். இம்மூன்றுக்கும் உள்ள தொடர்பை முதலில் நீ விளங்கிக் கொள்ள வேண்டும். பதி, பசு, பாசம் மூன்றும் யாராலும் படைக்கப்பட்டதல்ல. பதியாகிய இறை எப்படி ஆதி அந்தமற்று என்றும் இருக்கிறதோ அப்படியேதான் பசுவாகிய உயிரும் பாசமாகிய மலங்களும் என்றும் உள்ளன. விளங்குகிறதா?”
“ஆம் ஐயா. விளங்குகிறது. ஆனால் நீங்கள் சொல்வது விளங்கும்பொழுதெல்லாம் அறிவில் ஐயங்கள் எழுந்துகொண்டே இருக்கின்றன” என்று கரங்குவித்தான் சைலாதி.
புன்னகை பூத்த துர்வாசர் “ஐயங்கள் நல்லன சைலாதி. அவை நீ சிந்திக்கிறாய், தெளிவை நோக்கிச் செல்கிறாய் என்பதற்கான குறி. அவற்றை சேர்த்துவை. உறங்கும் குழந்தையின் கையிலிருக்கும் பாவைபோல நீயறிமலேயே அவை உன்னை விட்டகலும்” என்றார்.
“நல்லது ஐயா” என்று அவன் வணங்கியதும் துர்வாசர் பதியின் இருப்பை அனுபவத்தில் உள்ள உலகைக் கொண்டு நிறுவத் தொடங்கினார். காற்று அரச இலைகளை மீண்டும் அசைத்தது. கிளையுடன் ஒட்டியிருந்த பழுத்த இலையொன்று காற்றில் மிதந்துவந்து சைலாதி அமர்ந்திருந்த பாறையின் அருகு விழுந்தது. அவன் அதை அறியவே இல்லை.
(தேவார மொழி தொடரும்…)
முனைவர் இரா. கோகுல்
உதவிப் பேராசிரியர்,
தமிழ்த்துறை,
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி (தன்னாட்சி),
கோயம்புத்தூர் – 641020

No comments:
Post a Comment