பக்கங்கள்

தேவார மொழி - 2 விடையேறி - 11

இதழ் - 201                                                                                       இதழ் - 0
நாள்  :  31 / 05 / 2026                                                                   நாள்   :   / 0 / ௨௦௨



தேவார மொழி - 2

விடையேறி - 11

“சைலாதி, நான் கூறுவதை மனத்தில் பதித்துக் கொள். தவம் செய்வதற்குத் தவிப்பு தேவை. இன்னும் செறிவாகச் சொல்ல வேண்டுமானால் தவித்து இருத்தலே தவம் எனக் கொள்க. தவத்தின் விளைவு ஞானம். ஞானத்தின் வழியன்றி விடுதலை இல்லை. இதை உணர அனைத்தையும் படைத்து, அளித்து, ஒடுக்கி, எங்கும் நிறைந்து நிற்கும் பெருங்கருணைப் பொருளான பதியின் அருள் வேண்டும். விளங்குகிறதா?” துர்வாசர் கேட்டார்.

“ஆம் ஐயா, ஆனால் முதலில் பதியென்ற பெருகருணைப் பொருள் ஒன்று உண்டு என்றும் அதுவே அனைத்தையும் படைத்து, அளித்து, ஒடுக்குகிறது என்றும் எப்படி உறுதி செய்வது? மேலும் அது ஒரு பொருள்தான் என்பதற்கும் என்ன சான்று? பலவாக இருக்கக் கூடாதா?” என்று தனக்குள் எழுந்த ஐயத்தை சைலாதி வெளிப்படுத்தினான்.

தத்துவத்துக்குள் நுழைபவனின் முதல் ஐயம் சைலாதிக்குள்ளிருந்தும் வெளிப்பட்டதில் துர்வாசர் மகிழ்ந்தார். அவரது புன்சிரிப்பில் கருணை மலர்ந்திருந்தது.

“சைலாதி, உனக்குள் இவ்வினா எழுந்ததில் என் அகம் மகிழ்கிறது. ஏனென்று நீ அறியாய். உன்னை நான் ஆசிர்வதிக்கிறேன் குழந்தை. நீ யாரும் பெறற்கரிய செல்வத்தைப் பெற்று புகழடைவாய்.”

கண்கள் பனிக்க சைலாதி கரங்குவித்து அமர்ந்திருந்தான். துர்வாசர் தொடர்ந்தார்.
“சைலாதி நீ உன் அறிவால் அராய்ந்து பார், நாம் காணும் இந்த உலகத்தை அவன், அவள், அது என்று மூன்று பகுப்புகளாகப் பிரிக்க முடியும். வேறு சொற்களில் கூற வேண்டுமானால் ஒருவன், ஒருத்தி, ஒன்று என்று கூறலாம். இதிலிருந்து என்ன விளங்குகிறது?”

“உலகம் பகுதி பகுதியாய் இருக்கிறது என்று புரிந்து கொள்கிறேன் ஐயா”

“ஆம், சரியாகக் கண்டு கொண்டாய். இங்ஙனம் பகுதி பகுதியாக இருப்பனவெல்லாம் தோன்றி, நின்று, அழியும் தன்மையன. ஆம் தானே”

“ஆம் ஐயா”

“பகுதி பகுதியாய் இருப்பதனால் மட்டுமல்ல சைலாதி, வேறொரு கருத்தாலும் இதனை நீ உறுதிபடுத்தலாம். நீ எவற்றையெல்லாம் சுட்டி அறிகிறாயோ அவையாவும் முத்தொழில்படும். அதாவது உன் அறிவினால் சுட்டி அறியப்படும் பொருள்கள் யாவும் தோன்றி, நின்று, அழியும். அது மரம், இது பறவை, இவர் ஆண், அவர் பெண், அது மலை என்று நீ எதைச் சுட்டிக்காட்டினாலும் அது இத்தன்மையுடையதே என்பதை எளிதில் ஊகிக்கலாம்.”

"ஆம் ஐயா”

“இக்கருத்து விளங்கிற்று என்றால் இன்று நிலைபெற்றுள்ள உலகப் பொருட்களைக் கொண்டே அவை என்றோ ஒருநாள் தோன்றியிருக்க வேண்டும், என்றோ ஒருநாள் அழிவுக்கும் உள்ளாகும் என்பதை விளங்கிக் கொள்ளலாம். அழிவு என்று நாம் இங்கு சொல்வது ஒரு பொருளின் அழிவு என்று கொள்ளத் தேவையில்லை. முற்றழிவு என்று கொள். அதே போல தோற்றத்தையும் மீளத் தோன்றுதல் என்று கொள்க.”

“நல்லது ஐயா. முற்றழிவுக்கும் மீளத்தோன்றுதலுக்கும் உரியது இவ்வுலகங்கள் என்பதை தங்கள் சொற்களால் விளங்கிக் கொண்டேன். ஆனால் ஒடுங்கின உலகம் ஏன் மீளத் தோன்ற வேண்டும்? முற்றும் ஒடுங்கிய பிறகு எங்கிருந்து மீளத் தோன்றும்?”

“உன் கேள்வியிலிருந்தே மற்றொரு கருத்தையும் எடுத்துரைக்க வேண்டும் சைலாதி. உலகம் தோன்றுதலுக்கும் நிலைபெறுதலுக்கும் அழிவுக்கும் ஆளாகின்றன என்றால் அத்தொழில்களைச் செய்பவன் ஒருவன் இருந்தாக வேண்டுமல்லவா?”

“ஆம் ஐயா”

“அப்படியென்றால் முத்தொழில்களைச் செய்வன் ஒருவன் இருக்கிறான் என்பதை உய்த்துணர முடிகிறதுதானே”

”ஆம் ஐயா. ஏற்றுக்கொள்ள முடிகிறது.”

“நல்லது, படைத்தவன் ஒருவன் இருக்கிறான் என்று அறிவால் முதலில் விளங்கிக் கொள்வது தவத்திற்குள் செல்பவனுக்கு நற்றுணையாகும். இப்பொழுது உனது வினாக்களுக்கு விடை சொல்கிறேன் கேள். உயிர்கள் மலத்தால் கட்டுண்டு கிடக்கிறது என்று முன்னர் சொன்னது உனக்கு நினைவிருக்கும். அறிவை முற்றிலும் மறைக்கும் ஆணவமலத்தால் உயிர்கள் கட்டுண்டு நிற்பதால் அவற்றை அக்கட்டிலிருந்து விடுவிக்க இறைவன் ஒடுங்கிய உலகத்தை மீண்டும் தோற்றுவிப்பான். உனது அடுத்த ஐயம் மிக முக்கியமானது, ஒடுங்கிய உலகம் எங்கிருந்து மீளத் தோன்றும் என்பது.”

“ஆம் ஐயா”

“சரி இங்ஙனம் எண்ணிப் பார். நீ உனது அக்கமணியை மட்கலயத்தினுள் போட்டு வைத்திருக்கிறாய் என்று வைத்துக் கொள்வோம். மீண்டும் அந்த அக்கமணியை எங்கிருந்து எடுப்பாய்?”

“அதே மட்கலயத்திலிருந்துதான் ஐயா”

“உன் ஐயத்திற்கும் அதுதான் பதில். உலகம் எங்கு சென்று ஒடுங்கியதோ அல்லது யாரிடத்தில் சென்று ஒடுங்கியதோ அங்கிருந்துதானே மீளவும் தோன்ற முடியும்”

“ஆம் ஐயா”

“அப்படியென்றால் மூன்று தொழில்களைச் செய்வதற்கு ஒரு தலைவன் வேண்டும், அவனாலேயே உலகங்கள் யாவும் தோன்றி நின்று அழிகின்றன என்று கொண்டால் யார் அந்தத் தலைவன்? அதாவது யார் அந்த இறைவன். தோற்றத்திற்குரிய பிரம்மனா, காத்தலுக்குரிய மாயோனா, அழித்தலுக்குரிய சிவனா? யார் அந்தத் தலைவன்?”

“நீங்கள் கூறியதை வைத்துப் பார்க்கும்பொழுது சிவனே அத்தலைவன் என்று நினைக்கிறேன் ஐயா”

“எப்படி!!!?”

“முற்றழிப்பு என்று சொல்லிய பிறகு படைத்தலுக்குரிய பிரம்மனும் காத்தலுக்குரிய மாயோனும் சேர்ந்துதானே ஒடுங்கிப் போவர். அப்படியென்றால் அழித்தலுக்குரிய சிவனிடத்தில்தான் அனைத்தும் சென்று ஒடுங்கியாக வேண்டும். மீளத் தோன்றுவதென்றாலும் தங்கள் சொற்படி ஒடுக்கத்திற்குக் காரணமான சிவனிடத்திலிருந்துதான் தோன்ற வேண்டும். எனவே அந்தத்திற்குக் காரணமாகிய சிவனே ஆதியாகவும் இருக்கிறான் என்பது என் புரிதல் ஐயா.”

துர்வாசர் விழிகளில் நீர் பெருகிவழிந்து அவரது வெண்தாடியில் புரண்டோடியது. சைலாதியை அருகழைத்து அவனை உச்சி முகர்ந்து மகிழ்ந்தார். சைலாதி உடல் சிலிர்த்து நின்றான். “துர்வாசரே இனி உனக்கு எல்லாம்” என்று தந்தை கூறிய சொற்கள் ஏனோ அவன் உள்ளத்தில் எழுந்து வந்தது. அரசமர இலைகளை மீண்டும் காற்று அசைத்து ஒலியெழுப்பியது.

( தேவார மொழி தொடரும் . . .  )

முனைவர் இரா. கோகுல்
உதவிப் பேராசிரியர்
தமிழ்த்துறை
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி (தன்னாட்சி)
கோயம்புத்தூர் – 641020.

No comments:

Post a Comment