பக்கங்கள்

தேவார மொழி - 2 விடையேறி - 12

இதழ் - 202                                          இதழ் - 0
நாள்  :  07 / 06 / 2026                      நாள்   :  0 / 0/ ௨௦௨



தேவார மொழி - 2

விடையேறி - 12

       காவிரியில் நீராடி மாலை வழிபாட்டுக்காக ஐயாற்றப்பர் கோயிலுக்குச் சென்று கொண்டிருந்தார் சிலாதர். உடலின் பதினாறு இடங்களில் பூசப்பட்டிருந்த திருநீறு அவர் ஆத்மவழிபாட்டை நிறைவு செய்து விட்டதைக் காட்டியது. காவிரிக்கரை வில்வவனத்திலிருந்து பறித்து வந்திருந்த வில்வதளிர்கள் அவர் தோளில் தொங்கிக் கொண்டிருந்த குடலையில் நிறைந்திருந்தது. ஈரச்சடையை முடிந்துகட்டாமல் தோளில் பரப்பிவிட்டிருந்தார். மாலையின் குளிர்காற்றில் சில்லென்று  நீர்த்திவலைகள் தெறிக்க அது பறந்துகொண்டிருந்தது. ஐயாற்றப்பர் கோயில் வாயிலில் நின்றிருந்த பசுவின் நெற்றியைத் தடவிக் கொடுத்துவிட்டு உட்சென்றார். 

       இல்லத்தில் வழிபாட்டை நிறைவுசெய்துவிட்டு சாருலட்சணையும் கோயிலுக்கு வந்து கணவரின் வருகைக்காகக் காத்திருந்தார். சிலாதர் வந்தவுடன் அவரைப் பின்தொடர்ந்து ஐயாற்றப்பரை வழிபடச் சென்றார். மூலிகைச் சாறு கலந்து கட்டப்பட்ட செங்கல் சுவருக்கு நடுவில் இலிங்கத் திருமேனி மலர்களால் அணிசெய்யப்பட்டு விளக்கொளியில் மின்னிக் கொண்டிருந்தது. சிவாச்சாரியார் எக்காரணம்கொண்டோ இன்று கூடுதலாக விளக்குகளை ஏற்றியிருந்தார். கருவறையில் ஒளிகூடியிருந்தது. சிலாதரும் சாருலட்சணையும் கருவறைமுன் நின்று கரங்கூப்பினர். தனித்த ஒளிப்பொருளாய்க் காட்சியளித்த ஐயாற்றப்பரின் முன் வில்வக்குடலையை வைத்து கைநிறைய வில்வத்தை அள்ளி ‘நமசிவாய’ என்று ஓர்மையுடன் சொல்லி இலிங்கத் திருமேனியின் மீது தூவினார். விளக்குச்சுடர் அசைந்து நிதானித்தது. 

    விழி மூடி சற்றுநேரம் நின்றிருந்த சிலாதர் வெளியேறுவதற்காகத் திரும்பினார். சாரு லட்சணையின் கன்னங்களில் தீக்குழம்பு வழிந்துகொண்டிருந்தது. கண்டதும் திகைத்துபோனார் சிலாதர். கண்களை மூடித் திறந்தார். தீக்குழம்பு நீராகி வழிந்து கொண்டிருந்தது. விளக்கொளி தந்த திரிபு என்று புரிந்ததும் புன்முறுவல் கொண்டார். சாருலட்சணை தன் மகனைப் பிரிந்து வருந்துகிறாள் என்று நினைத்து “சாரு” என்றார். கண்திறந்த சாருலட்சணை கணவரைக் கண்டதும் விழிநீரைப் புடவைத் தலைப்பால் துடைத்துக்கொண்டார்.

    “சாரு செல்வோமா?” 

    “செல்வோம்”

    வெளியில் வந்த சிலாதர் நேராக இல்லம் நோக்கிச் சென்றார். எப்பொழுதும் ஏதாவது உரையாடிக் கொண்டே வரும் இயல்புடைய சிலாதர் இயல்புக்கு மாறாக மௌனமாய் வந்துகொண்டிருந்தார். 

    “தாங்கள் ஒன்றும் பேசாமல் வருகிறீர்களே. சைலாதியைப் பற்றிய நினைப்பா?”

    “அதுவும்தான்”

    “அப்படியென்றால் வேறு எதைப் பற்றிய சிந்தனை?”

    “உன்னைப் பற்றி”

    “என்னைப் பற்றியா”

    “ஆம் சாரு… உன்னைப்பற்றித்தான்”

    “என்னைப் பற்றி என்ன சிந்தனை?”

  சிலாதர் நின்று சாருலட்சணையைப் பார்த்தார். “இப்பொழுது கோயிலில் ஐயாற்றப்பர் முன்னிலையில் உன்னைக் கண்டேன். நீ வழிமூடி நின்றிருந்தாய். உன் விழிகளில் நீர் வழிந்து கொண்டிருந்தது. சிவந்து ஓடும் அக்னி நதிபோல் அது வழிந்து சென்றது. உள்ளம் சட்டென்று ஒருநொடி நின்று விட்டது சாரு. அப்பொழுதிலிருந்து உன்னைப் பற்றிய சிந்தனையேதான்” 

    “இறைவன் திருமுன்னர் சைலாதியை நினைத்தவுடன் விழிநீர் பெருகிவிட்டது. வேறு ஒன்றுமில்லை. தாங்கள் உள்ளம் கலங்க வேண்டாம்.”

    “இல்லை சாரு. அது அக்னிநதியாய்க் காட்சியளித்ததுதான் என்னைச் சற்று கலங்க வைத்துவிட்டது. உன் உள்ளத்தில் ஏதாவது குறையுண்டா சாரு. சொல்.”

    “என்ன சொல்கிறீர்கள். தங்களை மணந்துகொண்ட எனக்கு எப்படிக் குறைநேரிடும். தாங்கள் கலங்காதீர்கள்.”

    சிலாதர் மௌனமாய் நின்றிருந்தார். நிலவொளி குளிர்ச்சியாய்க் கொட்டிக் கொண்டிருந்தது. 

    “சைலாதியை துர்வாசரிடம் அல்லவா ஒப்படைத்திருக்கிறோம். அவர் பார்த்துக்கொள்வார்” என்று சிலாதரின் கரம்தொட்டார் சாருலட்டசணை.

    “உன் கண்ணீர்…”

    “தவமுனிவரின் மனைவியாகவே இருந்தாலும் நானும் தாயல்லவா… மகனைப் பிரிந்த வருத்தம்… இதற்கெல்லாம் தாங்கள் உள்ளம் வருந்தலாமா?”

    “சைலாதியைப் பற்றிய வருத்தமல்ல சாரு. அவன் என் குருவின் அருள் வளையத்திற்குள் இருக்கிறான். உன் கண்ணீர்தான் என்னைக் கலங்கச் செய்துவிட்டது.” சிலாதர் மீண்டும் நடக்கத் தொடங்கினார்.

     “அதுதான் சொன்னேனே…”

   இல்லை. உன் கண்ணீர் இறைவன் முன்னிலையில் ஒருநொடி அக்னியாய்த் தோன்றியதே. அதுதான் சிந்தனையாய் இருக்கிறது.”

      “நம் மகன் அக்னி நதியைக் கடந்து வருவான்” 

    சொல்கேட்ட சிலாதர் சட்டெனத் திரும்பி சாருலட்சணையைப் பார்த்தார். நிலவின் ஒளியில் விழிநீர் வெண்மையாய் ஒளிர சாருலட்சணை நின்றிருப்பதைப் பார்த்தார். “அங்கு அக்னியை வழியச் செய்த கண்கள் இங்கு பனியைப் பொழிகிறதே” என்று சாருவின் கரம்பிடித்து சொல்லுதிர்த்தார்.

    “ஆம். இதுதான் சாரு. நம் மகன் தவத்தால் மரணமென்ற நதியைக் கடந்து வருவான். உன் விழிநீர் அக்னியல்ல. இறைவன் அருள். அது நம் மகனின் மரணவிதியை மாற்றியமைக்கும். இதோ இப்பொழுது உன் வழி பனியைப் பொழிகிறதே. அது அவனால் உலக உயிர்கள் கொள்ளப் போகும் ஆனந்தவாரிதி. கலக்கம் தெளிந்துவிட்டது சாரு” 

    சிலாரின் மகிழ்ச்சியைக் கண்டு அமைதிகொண்ட சாருலட்சணை, “சரி. வாருங்கள் இல்லம் செல்வோம். நம் மகன் விரைவில் நம்மை வந்தடைவான்” என்றார்.

    ‘நம்மகன் நமக்கானவனாக மட்டும் வரமாட்டான் சாரு’ என்று தனக்குள் எழுந்த எண்ணத்தை சிலாதர் சாருலட்சணையிடம் வெளிப்படுத்தாமலே இல்லம் நோக்கி நடந்தார்.

( தேவார மொழி தொடரும் . . .  )

முனைவர் இரா. கோகுல்
உதவிப் பேராசிரியர்
தமிழ்த்துறை
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி (தன்னாட்சி)
கோயம்புத்தூர் – 641020.

No comments:

Post a Comment