பக்கங்கள்

தேவார மொழி - 2 விடையேறி - 7

இதழ் - 197                                                                          இதழ் - ௧
நாள்  :  12 / 04 / 2026                                                      நாள்   :   / 0 / ௨௦௨




தேவார மொழி - 2

விடையேறி - 7

    துர்வாசர் தனது குடிலில் விழிமூடி ஊழ்கத்தில் ஒன்றியிருந்தார். எதிரில் சிலாதரும் சாருலட்சணையும் மழைக்கு காத்திருக்கும் உழவர்கள் போல துர்வாசரின் பதிலுக்காகக் காத்திருந்தனர். சைலாதி குடிலின் முற்றத்தில் மற்ற சிறுவர்களோடு விளையாடிக் கொண்டிருந்தான். அவ்வப்பொழுது சாருலட்சணையின் விழிகள் சைலாதியை நோட்டமிட்டுக் கொண்டிருந்தன. துர்வாசர் விழிதிறந்தார். மெல்லிய புன்னகை அவரது இதழ்கடையில் அரும்பியிருந்தது.

    “சிலாதரே! எத்தனை தவம் செய்திருந்தாலும் மகன் தங்களை உலகில் கட்டிப்போட்டு விடுகிறான் அல்லவா?” துர்வாசர் புன்னகை மலரக் கேட்டார்.

    “ஆம் ஐயனே! நரகத்திற்கு அஞ்சி நான் செய்த தவம் எனக்கு ஒரு மகவாக வந்தமைந்தது. அதற்கு ஓர் ஊறு நிகழவுள்ளது என்று அறிந்த பின்னர் இயல்பாய் இருப்பது எப்படி இயலும்?”

    “சரிதான். நான் அன்றே சொன்னேனே சிலாதரே, அவன் தங்களை மட்டுமல்ல உலகையும் காக்க வந்தவன் என்று. அவன் தனது கடமை முடியாமல் எங்ஙனம் விடைபெறுவான். சிவன் அவனையும் உங்களையும் வைத்து ஆடுகிறான். ஆட்டத்தை சிவனிடமே விட்டுவிடுங்கள்.” 

    “விட இயலவில்லை ஐயா. உழுக என்ற ஆணைவழி நடந்த எனக்குக் கிடைத்தவன் அவன். அவனை நீங்கள் தான் காக்க வேண்டும்” என்று குறையிரந்து நின்றார் சிலாதர்.

    சாருலட்சணையைப் பார்த்தார் துர்வாசர். கண்களில் நீர் வழிய அமர்ந்திருந்தார். குடிலின் வாயிலில் சைலாதி வந்து நின்று துர்வாசரைப் பார்த்துப் புன்னகைத்தான். செவ்வான ஒளியின் பின்புலத்தில் அவன் நின்று புன்னகைத்ததைக் கண்ட துர்சாவர் உடல் சிலிர்த்துப் போனார். அவரது உள்ளத்தில் ‘செய்க தவம்’ என்ற ஆணை உதித்தது. அதையே சிலாதருக்கும் சொன்னார்.

“சிலாதரே! தவமே வழி.” 

    “என் மகனைக் காக்க எத்தனை கடுமையான தவத்திற்கும் நான் தயாராகவே இருக்கிறேன் ஐயா”

    துர்சாவர் தோளில் புரண்டிருந்த சடைக்கற்றையை பின்புறமாகத் தூக்கிப் போட்டுக்கொண்டே “தவம் செய்ய வேண்டியது சைலாதி. நீங்கள் அல்ல” என்றார். 

    சிலாதரும் சாருலட்சணையும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர். தைரியத்தை வரவழைத்துக் கொண்ட சிலாதர் “அவன் சிறுவன் ஐயா. தவத்தைத் தாங்குவானா? தந்தை நான் இருக்க என் மகன் தவித்திருப்பதா” என்று வெடித்தழுதார். 

    “கல்லைக் கரைத்துண்டு தவத்தின் எல்லை கண்ட சிலாதரின் மகனுக்கு தவம் கடினமா? அவன் தவத்திற்கு அஞ்சுவானா?”

   அழுது அழுது கழுவப்பட்டிருந்த சாருலட்சணையின் உள்ளம் துர்வாசரின் சொற்களைப் பற்றிக் கொண்டது. மெழுக்கிட்ட அறையில் ஏற்றப்பட்ட விளக்கு அறைக்கு தெய்வீகத்தை அளிப்பதைப் போல அவரது உள்ளம் சட்டென்று ஒளி கொண்டது. துர்வாசரிடம் ஏதோ சொல்ல வாயெடுத்த சிலாதரை சாருலட்சணை கரந்தொட்டு நிறுத்தினார். 

    “தவத்திற்கு ஆணையிடுங்கள் ஐயா” என்று துர்வாசரை நோக்கிக் கரங்குவித்தார் சாருலட்சணை.

    “சாரு… நம் மகன்…”

    “நம் மகன் மரணத்தை வென்று வருவான்”

   சொல்லிழந்து நின்றார் சிலாதர். சாருலட்சணையின் கண்களில் ஒளி ஏறியிருந்தது. அவ்வொளி சிலாதரையும் ழுழுக்காட்டியது.


(தேவார மொழி தொடரும்…)


முனைவர் இரா. கோகுல்
உதவிப் பேராசிரியர், 
தமிழ்த்துறை, 
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி (தன்னாட்சி),
கோயம்புத்தூர் – 641020

No comments:

Post a Comment