பக்கங்கள்

தேவார மொழி - 2 விடையேறி - 8

இதழ் - 198                                                                                   இதழ் - ௧
நாள்  :  19 / 04 / 2026                                                               நாள்   :   / 0 / ௨௦௨




தேவார மொழி - 2

விடையேறி - 8

    ஞாயிறு எழுவதற்கான குறிகுணங்கள் தோன்றலாயின. அருணன் கீழ்த்திசை வானில் செம்மையைப் பூசத் தொடங்கியிருந்தான். புள்ளினங்கள் ஒலியெழுப்பி தங்கள் கூடுகளிலிருந்து இரைநாடி விசைகொண்டு புறப்பட்டன. வளைகோல் கைக்கொண்டு கோவலர் ஆநிரைகளை ஓட்டிச் சென்றனர். இளங்கன்றுகள் தாய்ப்பசுகள் செல்வதைக் கண்டு ‘மா’ என்று கூவியழைத்தன. முதிய பசுக்கள் தங்கள் வளைந்த கழுத்தை ஆட்டிக் கொண்டு அமர்ந்திருந்தன. ‘உஸ் உஸ்’ என்ற அவற்றின் மூச்சொலி கடந்த கால மேய்ச்சல் நினைவுகளின் ஏக்கமோ என்று நினைத்துக்கொண்டு மூதன்னையர் சிலர் அங்கு அமர்ந்திருந்தனர். 

    காவிரிக்கரை கல்மண்டபங்களில் வேதம் பயிலும் சிறார் குழுக்கள் அரைவட்டமாக அமர்ந்துகொண்டு முந்தைய நாள் தாங்கள் கற்ற வேத மந்திரங்களை ஓதிக் கொண்டிருந்தன. சிவதீட்சை பெற்ற அடியார்கள் விதிப்படி அனுட்டானமும் சிவபூசையும் செய்து கொண்டிருந்தனர். அவர்கள் நெற்றியில் திருநீறு திரிபுண்டரமாக ஒளிவீசிக் கொண்டிருந்தது. ஆகம மந்திர ஒலி அங்கு நிறைந்திருந்தது. வேதாகம ஒலிக்கலவை ஓர் இறைமை வட்டத்தை தோற்றுவித்திருந்தது. அங்கு வரும் யாரையும் அவ்வட்டத்தின் விசை சென்று தொட்டது. அவர்கள் உடலிலும் உள்ளத்திலும் நல்விளைவை உணர்ந்தனர். அவ்வட்டத்தினுள் சென்றதனால் விளைந்தது அது என்று அறியாமலே அவர்கள் அம்மாற்றங்களை உணர்ந்து இன்புற்றனர். அவ்வொலியதிர்வுகளைத் தாங்கிச் சென்ற காவிரியில் நீராடியவர்களும் அதனை உணர்ந்தனர். மற்றவர்களையும் அதிகாலை சென்று காவிரியில் நீராட வற்புறுத்தினர். அதனை மரபொழுக்கமாக விதித்தனர்.

    கரையோரக் கானலில் இருந்த குருகுலங்களில் காலைப் பாடம் நடந்து கொண்டிருந்தது. மூத்த மாணவர்கள் இளையோருக்கு பாடம் நடத்திக் கொண்டிருந்தனர். ஆசிரியர்கள் ஓலைச்சுவடிகளில் மூழ்கியிருந்தனர். மரவுரியை இடையில் இறுகக் கட்டிக் கொண்டு மாணவர்கள் சிலர் யோகப் பயிற்சிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். உடல், உயிர் ஓம்பும் ஆசனங்களையும் மூச்சை ஒழுங்குபடுத்தி உளங்குவிக்கும் பயிற்சிகளையும் அவர்கள் கவனத்துடன் செய்தனர். ஞாயிறு, திங்களின் இயக்க ஒழுங்கு போல அவர்களின் பயிற்சியிலும் ஓர் ஒழுங்கு அமைந்திருந்தது. மூத்தோர் அருகில் நின்று அவர்களை நெறிப்படுத்தினர்.

    துர்வாசரின் குடிலுக்கு அந்நேரத்தில் சிலாதரும் சாருலட்சணையும் தங்கள் மகன் சைலாதியை அழைத்துக் கொண்டு வந்தனர். தவமே வழி என்று முந்தைய நாள் துர்வாசரிட்ட ஆணையை ஏற்றுக் கொண்டு அவரது வழிகாட்டுதலுக்காக மகனை அழைத்து வந்திருந்தனர். பன்னிரு வயது சிறுவன் தவத்தின் கடுமையை எங்ஙனம் தாங்குவான் என்று இரவெல்லாம் பாசத்தில் துடித்த சிலாதருக்கு சாருலட்சணைதான் துணைநின்றார். தங்களுக்கு சைலாதி கிடைத்த அற்புதத்தையும் துர்வாசரின் கருணையையும் மகன் மரணத்தை வென்றுவர வேண்டிய தேவையையும் எடுத்துச் சொல்லி ஆற்றுப்படுத்தினார். வைகறையில் காவிரியில் நீராடி திருவையாற்று இறைவனை வணங்கிக் கொண்டு துர்வாசரை அணுகி வணங்கி நின்றனர்.

    சிலாதரைக் கண்ட துர்வாசர் மெல்லிய புன்னகையுடன் “மகனை தவத்திற்கு அளிக்க துணிவு பிறந்து விட்டது அல்லவா சிலாதரே” என்றார்.

    "ஆம் ஐயா” என்று வணங்கி எழுந்த சிலாதர் “என் மகன் மரணத்தை வென்று வருவான். குருவருளால் என் மயக்கம் களைந்தது. இனி அவன் உங்கள் பொறுப்பு” என்று கரங்குவித்தார். சிலாதரின் இத்தெளிவிற்கு சாருலட்சணையும் காரணம் என்று அறிந்த துர்வாசர் அவரை ஆசிர்வதித்தார். இவர்கள் பேசுவதை கேட்டுக் கொண்டே சைலாதி நின்றிருந்தான். முந்தைய நாள் தாய்தந்தை தனக்கு அளித்த அறிவுரைகளையும் வாழ்த்துகளையும் பொறுப்பையும் நினைந்து பார்த்து தான் மேற்கொள்ளவிருக்கும் செயலின் அருமைக்கு நேற்று இரவே தன்னைத் தயார் செய்து கொண்டான். இப்பொழுது துர்வாசரின் முன் நிற்கும்பொழுது தன்னை அவருக்கு முழுமையாக அளிக்கும் தெளிவுடன்தான் நின்று கொண்டிருந்தான்.

    சிலாதருக்கும் சாருலட்சணைக்கும் விடையளித்து அனுப்பிவிட்டு துர்வாசர் எழுந்து குடிலுக்கு வெளியே வந்தார். சைலாதி அவரைப் பின்தொடர்ந்தான். எதிரில் காவிரி மந்திர முழக்கங்களை எழுப்பிக் கொண்டு ஓடிக் கொண்டிருந்தது. ஞாயிற்றின் ஒளி நன்கு ஏறியிருந்தது காவிரியில் பிரதிபலித்தது. சற்று நேரம் காவிரியின் ஓட்டத்தையே பார்த்துகொண்டு நின்றிருந்தார் துர்வாசர். சட்டெனத் திரும்பி சைலாதியை அழைத்துக் கொண்டு அருகிருந்த அரசவனத்திற்குள் நுழைந்தார்.

(தேவார மொழி தொடரும்…)

முனைவர் இரா. கோகுல்
உதவிப் பேராசிரியர், 
தமிழ்த்துறை, 
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி (தன்னாட்சி),
கோயம்புத்தூர் – 641020

No comments:

Post a Comment