பக்கங்கள்

தேவார மொழி - 2 விடையேறி - 9

இதழ் - 199                                                                              இதழ் - ௧
நாள்  :  03 / 05 / 2026                                                        நாள்   :  0 / 0 / ௨௦௨



தேவார மொழி - 2

விடையேறி - 9

    காவிரிக் கரையோரமாக இத்தனை அடர்ந்த காடு இருப்பதை சைலாதி இதுவரை அறிந்திருக்கவில்லை. காட்டுள் நுழைந்ததிலிருந்து அவன் முகம் வியப்புக்குறியை வெளிப்படுத்திக்கொண்டே இருந்தது. அவன் கால்கள் துர்வாசரைப் பின்பற்றி நடக்கவேண்டும் என்று ஆணையிடப்பட்டது போல அவரைப் பின்தொடர்ந்து கொண்டிருந்தன. ஒற்றையடிப்பாதை காட்டுக்குள் வளைந்து வளைந்து சென்றன. துர்வாசர் பலகாலம் அதனுள் பயணித்தவர் போல சென்றுகொண்டிருந்தார். சில இடங்களில் காடு மரங்களால் அடர்ந்து இருள்கொண்டிருந்தது. அங்கும் அவருக்கு எப்படி வழிதெரிகிறது என்று தனக்குள் கேட்டுக்கொண்டான். நாவுதிராக் கேள்வியாக அது அவனுக்குள் மறைந்துகொண்டது. ‘துர்வாசரைப் பின்தொடர்’ என்ற தந்தையின் ஆணை அவனைச் செலுத்திக் கொண்டிருந்தது.

    காவிரியின் சலசலத்த ஓசை கேட்டு ஆற்றின் ஓரமாகவேதான் சென்று கொண்டிருக்கிறோம் என்று மென்மையாக சைலாதி சொல்லிக் கொண்டான். துர்வாசருக்குக் கேட்டிருக்குமோ என்று நினைத்து உதட்டைக் கடித்துக் கொண்டான். துர்வாசர் எதையும் கவனம்கொள்ளாமல் காட்டின் இருளுள் தன்னைக் கரைத்துக் கொள்ள முயல்பவர் போல சென்றுகொண்டே இருந்தார். சற்று தள்ளி ஞாயிற்றின் ஒளிக்கோடுகள் காட்டின் கூரையைப் பிளந்துகொண்டு பாய்ந்துகொண்டிருப்பது தென்பட்டன. அதை நெருங்கும்முன் இடப்பக்க வளைவில் துர்வாசர் திரும்பினார். சைலாதி அதைப் பார்த்துவிட்டான். ஒருகணம் நின்று திகைத்துவிட்டுதான் அடுத்த அடியை அவன் எடுத்துவைக்க முடிந்தது. குளிர்ந்த காற்று அவன் உடலைத் தீண்டியபொழுதுதான் தன் உடல் வியர்வையில் நனைந்திருப்பதை உணர்ந்தான். அவன் அகம் மெல்ல மெல்ல அமைதியடைந்த பிறகுதான் துர்வாசர் எப்படி இக்காட்டுக்குள் இயல்பாகச் செல்கிறார் என்று அறிந்தான். நாகமொன்று அவருக்கு முன்னர் விசைகொண்டு ஊர்ந்துகொண்டிருந்தது. அதைப் பின்பற்றித்தான் துர்வாசர் சென்றுகொண்டிருந்தார்.

    நாகம் விசைகுறைத்து ஊர்ந்தது. துர்வாசரும் தனது நடைவேகத்தைக் குறைத்துக் கொண்டு திரும்பிப் பார்த்தார். சைலாதி களைத்துப்போய் பின்தொடர்வதைக் கொண்டு மென்னகை புரிந்தார். நில் எனச் சைகைகாட்டி அவரும் நின்றார். நாகம் உஸ் என்று ஒலி எழுப்பிவிட்டு சருகுக்குவியலுக்குள் புகுந்து மறைந்தது. தாங்கள் அடைய வேண்டிய இடத்தை அடைந்துவிட்டதை துர்வாசரின் முகக்குறிப்பால் சைலாதி உணர்ந்துகொண்டு நின்றான். மெல்லிய ஒளி அக்காட்டை ஆட்கொண்டிருந்தது. துரவாசர் நின்றிருந்த இடத்திற்கு முன் ஓர் அரசமரம் கிளைபரப்பி தழைத்து நின்றது. அதைச்சுற்றி செடி கொடிகளோ சருகுகளோ அதிகம் இல்லை. மரத்தைச் சுற்றி சிலர் குடிசையிட்டு வாழும் அளவுக்கு அகலமான வெளியில் கற்பாறைகள் இருக்கை வடிவுகொண்டிருந்தன. துர்வாசர் கரங்குவித்து அம்மரத்தை வணங்கிவிட்டு அங்கிருந்த பாறை ஒன்றின் மீது அமர்ந்தார். சைலாதியும் அவரைப் பின்பற்றி மரத்தோடு துர்வாசரையும் வணங்கிவிட்டு அவர்முன்பு கரங்குவித்து நின்றான். 

    சைலாதியின் முகக்குறிப்பைக் கண்ட துர்வாசர் புன்னகையுடன் “வா மகனே! அப்பாறைமீது அமர்ந்துகொள்” என்று அருகிருந்த சிறுபாறையைச் சுட்டிக் காட்டினார். 

“களைப்பாக இருக்கிறதா?” 

    “இல்லை ஐயனே” என்று சொல்லும்பொழுதுதான் சைலாதி காட்டுக்குள் வரும்பொழுது இருந்த களைப்பு அரசமர வளைத்திற்குள் வந்ததும் அகன்றிருப்பதை உணர்ந்தான்.   

“இத்தனை தொலைவு எதற்கு வந்தோம் என்று யோசிக்கிறாய் அல்லவா?”

“இல்லை ஐயா, தங்கள் ஆணையே என் வாழ்வு”

    “சைலாதி, உன்னை இத்தனை தொலைவு அழைத்துவந்ததற்கு ஒரு காரணமுண்டு. இவ்விடத்திற்கு நம்மை அழைத்துவந்த நாகத்தை நீ பார்த்திருப்பாய்.”

    “ஆம் ஐயா”

    “இவ்விடம் எளிய மனிதர்களால் அடையக்கூடியதல்ல. ஏன் பல்லாண்டுகள் கடுந்தவம் புரிந்தவர்களுக்கும் அடைய அரிதானது.” துர்வாசர் சைலாதியின் முகத்தையே உற்றுப்பார்த்தார். “அப்படியிருக்க உன்னை இங்கு அழைத்தவந்ததன் காரணம் என்னவென்று யோசிக்கிறாய். அப்படித்தானே?”

    “ஆம் ஐயா, ஆனால் தங்கள் அருள்பெற்றால் எதுவும் அடையக்கூடியதே என்று என் தந்தை பலரும் சொல்லி நான் கேட்டிருக்கிறேன். தங்களைப் பின்தொடரும் எனக்கு அடைய முடியாதது என்று எதுவும் இருப்பதாக நான் நினைக்கவில்லை.” சைலாதி சொன்னதைக் கேட்டு துர்வாசர் வெடித்துச் சிரித்தார். சிலாதரின் குருபக்தியும் சைலாதியின் நம்பிக்கையும் அவரை மகிழ்வித்தன.

    “ஐயா, தவச்சீலர்களுக்கும் அடைய அரியதான இவ்விடத்தினை நான் அடையக் காரணம் என்ன என்று மட்டும் எனக்கு விளங்கவில்லை.”

    “மகனே! உன் பிறப்பே ஓர் அற்புதம். நீ சிலாதருக்கு மகனாக வாய்த்தது அவரது வினைப்பயன். ஆனால் இங்கு வந்திருப்பது உலகோர் வினைக்கழிவுக்காக.” துர்வாசரின்  சொற்களின் உட்பொருள் சைலாதிக்குப் புரியவில்லை. 

    “சைலாதி, நீ தவஞ்செய்ய வேண்டும். உனக்காக மட்டுமல்ல. மரணமில்லாப் பெருவாழ்வை உலகோர் எய்த நீ தவஞ்செய்ய வேண்டும்.” துர்வாசரின் முகமும் சொற்களும் தீவிரமடைந்தன. அதனை உணர்ந்துகொண்ட சைலாதி மிகக் கவனமாக அவர் சொற்களை எதிர்கொண்டான்.

    “நான் தவமறியாதவன் ஐயா”

    “அறியச் செய்யவே இங்கு வந்தோம் சைலாதி”

    உடல் சிலர்க்க, அகம் குவியத் தொடங்கியிருந்தது. சைலாதியின் உடலும் உள்ளமும் தயாராக இருப்பதைக் கண்டுகொண்ட துர்வாசர் தனக்கான பணி தொடங்கிட்டதை உணர்ந்தார்.

    “சைலாதி, நீ தவஞ்செய்ய வேண்டும் என்பது இறையாணை. அதற்கான அனைத்தும் உனக்குள்ளிருந்து வெளிப்படத்தொடங்கும். அது தொடங்க வேண்டிய இடம் இது. தொடங்கி வைக்க வேண்டிய சிறு கருவி நான். அவ்வளவுதான். உயிருக்கு உயிராக உனக்குள்ளிருந்து இறைவனே அனைத்தையும் உணர்த்துவான்.”

    துர்வாசர் விழிகளில் அன்புநீர் வழிந்தோடியது. அவரது அகம் குளிர்ந்திருந்தது. சிலாதருக்கும் தவவழி காட்டியவர் துர்வாசர்தான். ஆனால் சிலாதரைப் போலல்ல சைலாதி. சிலாதர் தனக்கான ஆன்ம விடுதலைக்கு உரியவர். அவரது மகனோ உலக விடுதலைக்கு உரியவன் என்ற எண்ணம் மீண்டும் மீண்டும் அவருள் எழுந்துகொண்டே இருந்தது. அதற்கேற்பவே சைலாதியின் அகமும் பக்குவப்பட்டு நின்றிருந்தது. துர்வாசர் வழிதிறந்து அன்பொழுக சைலாதியைப் பார்த்தார். அவனும் துர்வாசரைப் பணிந்து கரங்குவித்து அமர்ந்திருந்தான். 

    சைவத்தின் மெய்ப்பொருளை முழுதுணரும் கொள்கலம் தயாராகித் தன்முன் அமர்ந்ருப்பதைக் கண்டார் துர்வாசர். அக்கலம் குறையாக் கலமாக இருந்து உரியவர்களுக்கு மெய்ப்பொருளைப் பகிர்ந்து பரப்பும் என்பதையும் உணர்ந்தார். அவர் உதடுகள் சைவத்தின் மெய்ப்பொருளை உதிர்க்கத் தொடங்கின. ஏற்கும் கலமானான் சைலாதி.

(தேவார மொழி தொடரும்…)

முனைவர் இரா. கோகுல்
உதவிப் பேராசிரியர், 
தமிழ்த்துறை, 
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி (தன்னாட்சி),
கோயம்புத்தூர் – 641020

No comments:

Post a Comment