இதழ் - 203 இதழ் - உ௰௩
நாள் : 18 / 10 / 2026 நாள் : க௮ / ௰ / ௨௰உ௬
பழமொழி அறிவோம்
பழமொழி – 203
' ஓர்த்தது இசைக்கும் பறை '
விளக்கம்
ஒருவர் பறை இசைக்கும் போது அவரவர் கருத்தை ஒட்டியே அப்பறை ஒலிக்கும். அதுபோலவே, மனமும் அவரவர் கொண்ட கருத்துப்படியே போய்க் கொண்டிருக்கும். அதனைப் பிறர் தம் கருத்துப் போல மாற்றுதல் எளிதன்று என்பது இப்பழமொழியின் பொருளாகும்.
உண்மை விளக்கம்
நீர்த்தன்று ஒருவர் நெறியன்றிக் கொண்டக்கால்
பேர்த்துத் தெருட்டல் பெரியார்க்கும் ஆகாதே,
கூர்த்தநுண் கேள்வி அறிவுடையார்க்(கு) ஆயினும்
'ஓர்த்தது இசைக்கும் பறை'.
நுண்ணிய அறிவுடைய ஒருவர் தான் கற்ற அறிவு எத்தகையதாயினும் மனதளவில் நேர்மையற்றவறாக, குணமற்றவறாக இருந்தால் அவரின் அறிவைத் தெளிவிக்க பெருஞ்சான்றோர்களாலும் இயலாது. அது அவரின் தீய மனநிலையைக் காண்பித்து விடும்.
அறிவார்ந்தவர்களானாலும் அவர் எண்ணங்களில் உள்ளதே அவர்தம் பறைதனில் ஒலிக்கும் என்பதைக் குறிக்கவே 'ஓர்த்தது இசைக்கும் பறை' என்று இப்பழமொழி பொருள் உணர்த்துகிறது.
இத்தகைய பழமொழிகளின் பொருள்திறத்தினைத் தொடர்ந்து அறிவோம்…
முனைவர் தே. ராஜகுமார்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர்-641020

No comments:
Post a Comment