பக்கங்கள்

ஆத்திசூடி வெண்பா -27

இதழ் - 29                                                            இதழ் -
நாள் : 13-11-2022                                               நாள் : - ௧௧ - ௨௦௨௨

 

ஆத்திசூடி (ஔவை)

வஞ்சகம் பேசேல்
உரை

     உள்ளத்தில் ஒன்று வைத்து புறத்தில் பொய்ச்சொற்களைக் கூறாதே.

ஆத்திசூடி வெண்பா (இராமபாரதி)

பாடல் – 27
    மாயனார் தம்மக்கண் மாமுனியைக் கேட்டகர்ப்ப
    மேயவரைக் கொல்லு மிரும்புலக்கை – ஆயதனான்
    மாரனெனும் புன்னை வனநாதா வையகத்திற்
    சீருற வஞ்சகம்பே சேல்


உரை

     மாரன் என்னும் மன்மதனைப் போன்ற புன்னைவன நாதனே! மயனாராகிய கண்ணனின் மக்கள் அவரது மகன் சாம்பவனுக்குப் பெண் வேடமிட்டு முனிவர்களை அணுகி “இக்கர்ப்பத்தில் என்ன பிள்ளை பிறக்கும்?” என்று கேட்க, முனிவர்கள் சினம்கொண்டு “உங்களைக் கொல்லும் இரும்புலக்கை பிறக்கும்” என்று சாபமிட்டனர். ஆதலால் உலகத்தில் பெருமைபெற வேண்டுமெனில் உள்ளொன்று வைத்து புறமொன்று பேசாதே.

விளக்கம்
     மாயனார் – மாயவராகிய கண்ணன். மக்கண் என்றது மக்கள். முனி – முனிவர். துருவாசர், விசுவாமித்திரர், நாரதர் என்போர். மாரன் – காமன், மன்மதன். சீர் – பெருமை, சீருற - பெருமையுற.

கண்ணன்மக்கள் கதை
     துவாரகையிலே கண்ணன் தருமருக்கு வேள்விகளை முடித்துத் தன்பதம் சாருதற்கு நினைத்திருக்கும் காலத்தில் அவரைக் காண விரும்பி துருவாசர், விசுவாமித்திரர், நாரதர் முதலிய முனிவர்கள் வந்தனர். அப்பொழுது கண்ணனின் யாதவர் குலத்தினர் சிலர் சாம்பன் என்பவனை சூல்கொண்ட பெண் போல அணிசெய்து அம்முனிவர்களுக்கு முன்னே நிறுத்தி “இப்பெண் என்ன பிள்ளை பெறுவாள் என்று சொல்லுங்கள்” எனக் கேட்டனர். அம்முனிவர்கள் இவர்களின் வஞ்சகச் சொற்களை அறிந்து சினங்கொண்டு “இவளுக்கு ஓர் உலக்கைதான் பிறக்கும். அந்த உலக்கையினால் இந்த யாதவ குலமே அழிந்துபோகும்” என்று தீச்சொல் சொல்லிவிட்டு கண்ணனையும் காணாமல் வந்தவழியே திரும்பிச் சென்றுவிட்டனர். மற்றைநாள் கூற்றுவனின் தண்டம்போல ஓர் உலக்கை சாம்பன் வயிற்றிலிருந்து பிறந்தது.

     அவ்வுலக்கையைக் கண்ட யாதவர்கள் அஞ்சிநடுங்கி கண்ணனின் தந்தையாகிய வசுதேவருக்கு நடந்த காரியத்தை அறிவித்தார்கள். வசுதேவர் அவ்வுலக்கையை அரத்தால் அராவிப் பொடியாக்கி கடலில் இடும்படிச் சொன்னார். யாதவர்களும் அவ்வாறே செய்து முனிவர்களின் தீச்சொல் விளைவிலிருந்து தப்பிவிட்டோம் என்று எண்ணி மகிழ்ந்திருந்தனர்.

     பின்னர் அந்தப் பொடிகளெல்லாம் அலையினால் ஒதுக்கப்பட்டுக் கரையிலே வந்து வாட்கோரைப் புல்லாக முளைத்து வளர்ந்திருந்தன. அந்த இரும்புப் பொடிகளுள் கடலை விதையளவுடைய ஒரு துண்டு ஒரு மீனால் விழுங்கப்பட்டு உலுப்தகன் என்னும் வேடன் கையில் அகப்பட அவன் அத்துண்டினைத் தன் அம்பின் நுனியிலே பொருத்தி வைத்திருந்தான்.

     பின்னர் கண்ணனும் பலராமனும் யாதவரும் கடற்கரையிற்போய்க் கடல்நீராடிக் கடல் இறைவனுக்குப் பூசையும் விழாவும் நடத்தினார்கள். நடத்தியபின் பலராமனும் கண்ணனும் தவம் புரியுமாறு காடுநோக்கினர்.

     விழாவில் படைத்த கள்ளினை அதிகமாக உண்ட யாதவர்கள் கள்வெறியினாலே ஒருவரை ஒருவர் இகழ்ந்து பேசிக் கோபமூள இருப்புலக்கைப் பொடியினாலே அங்கே முளைத்திருந்த அவ்வாட்கோரைகளைப் பிடுங்கி ஒருவருக்கொருவர் அடிக்க எல்லாரும் இறந்தார்கள். யாதவகுலம் அழிந்தது.

     இக்கதை மகாபாரத மௌசல பருவத்திலும் சீகாழிப் புராணத்திலும் சிறிய வேறுபாட்டுடன் காணப்படுகிறது. சாபஞ்சொன்னவர் கபிலர் என்றும், துருவாசர் என்றும் சொல்வாருமுளர்.
(இக்கதை இலங்கைப் பதிப்பிற் கண்டவாறு)
 
கருத்து
     உள்ளத்திலொன்று வைத்து புறத்தில் வேறொன்று பேசுதல் துன்பம் விளைவிக்கும் என்பது பாடலின் மையக்கருத்தாகும்.
 
 
( தொடர்ந்து சிந்திப்போம் . . . )
 
முனைவர் இரா. கோகுல்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 641020
 

No comments:

Post a Comment