பக்கங்கள்

ஆத்திசூடி வெண்பா - 28

இதழ் - 30                                                                 இதழ் -
நாள் : 20-11-2022                                                     நாள் : ௨௦ - ௧௧ - ௨௦௨௨
 

 

ஆத்திசூடி (ஔவை)
அழகலாதன செய்யேல்

உரை
     பிறர் விரும்பும் தன்மையல்லாத செயல்களைச் செய்யாதே.

ஆத்திசூடி வெண்பா (இராமபாரதி)

பாடல் – 28
     வாணன் சிவனை வணங்கிவசஞ் செய்துலகோர்
     காணநின்று தன்வாயில் காக்கவைத்தும் – பாணியெலாம்
     போனதனாற் புன்னைவன பூபாலா யாரிடத்துந்
     தான் அழகலாதன செயேல்


உரை
     வாணாசுரன் என்பவன் சிவதாண்டவத்தில் தனது ஆயிரம் கைகளால் மத்தளம்கொட்டி சிவபெருமானை மகிழ்வித்து அவரைத் தன் இடத்தில் என்றும் இருக்கும்படி வரம்பெற்றான். உலகத்து மக்கள் யாவரும் காணும்படி அவரைத் தன் மாளிகை வாயிலைக் காவல்காக்கச் செய்தான். சிவபெருமானே தன் வாயிலைக் காவல் காத்தும்கூட அவன் பிறர் துன்புறும்படியான செய்களைச் செய்து தனது கைகளையெல்லாம் இழந்தான். ஆதனால் புன்னைவன நாதன் என்னும் தலைவனே! பிறர் விரும்பும் தன்மையல்லாத செயல்களைச் செய்யாதே.

விளக்கம்
     வசம் – மயக்குதல். தன் கட்டுப்பாட்டில் வைத்தல். சிவதாண்டவத்தில் தனது ஆயிரம் கைகளால் மத்தளம்கொட்டி சிவபெருமானை மகிழ்வித்து வாணாசுரன் என்பவன் அவரைத் தனது அரண்மனையில் என்றும் இருக்கும்படி வரம்பெற்றான் என்பதை “வாணன் சிவனை வணங்கி வசஞ்செய்து“ என்றார். உலகோர் என்றது உலகத்து மக்களை. பாணி – கை. (சிவபெருமான் சூலபாணி – திரிசூலத்தைக் கைகளில் கொண்டவர்). 
 
     வாணாசுரன் தன் மகள் உசை கிருஷ்ணரின் பேரனான அனிருத்தனை மயக்கி, தனது சோணிதபுர மாளிகைக்குக் கடத்தி வந்தாள். தனது பேரனை மீட்பதற்காக கிருஷ்ணர் அங்கு வர, வாணாசுரனுடன் போர் நடக்கிறது. வாணாசுரனின் ஆயிரம் கைகளில் இரண்டை மட்டும் விடுத்து மற்றவற்றை கிருஷ்ணர் வெட்டி வீழ்த்தினார். அதனை பாணியெல்லாம் போனதனால் என்றார். “மாயப் பொருபடை வாணனை ஆயிரந் தோளும் பொழிகுருதி பாயச் சுழற்றிய ஆழிவல்லானுக்குப் பல்லாண்டு கூறுதுமே” என்ற பெரியாழ்வார் பாசுரமும் நோக்கத்தக்கது.

வாணாசுரன் கதை
     காசிப முனிவருக்குத் திதி என்பவளிடத்திலே இரணியகசிபு, இரணியாக்கன் என்னும் இருவரும் பிறந்தார்கள். இரணியகசிபுவுடைய பிள்ளைகள் பிரகிலாதன், அநுகிலாதன் முதலிய நால்வர். பிரகிலாதன் பிள்ளைகள் ஆயுண்மான், விரோசனன் முதலிய நால்வர். விரோசனனுடைய பிள்ளை மாவலி. மாவலிக்குப் பிள்ளைகள் நூறுபேர். அவருள்ளே வாணன் என்பவனும் ஒருவன். இந்த வாணன் என்பவன் சிவபக்தனாக விளங்கினான். 
 
     அவன் திருக்கைலாய மலையிற்சென்று சிவபெருமானுடைய திருநடனத்திற்குத் தனது ஆயிரம் கைகளால் மத்தளம் அடித்துச் சிவபெருமானை மகிழ்வித்துத் தான் என்றும் கண்டு வணங்கும்படி தன்னுடைய சோணிதபுரவாயிலிலே வந்து வீற்றிருக்கும்படி செய்தான். அவ்வாறு செய்தும் அழகலாதவைகளைச் செய்து பலரோடும் போராடி இறுதியிலே கிருஷ்ணரால் கைகளெல்லாம் இழக்கப்பெற்றான்.
(இக்கதை இலங்கைப் பதிப்பிற் கண்டவாறு)

     வாணாசுரனின் மகள் உசை. அவள் கிருஷ்ணரின் பேரன் அனிருத்தனின் அழகிலே மயங்கினாள். அவனைத் தனது மாயத்தால் மயக்கி சோணிதபுர அரண்மனையில் சிறை வைத்தாள். தனது பேரனை மீட்பதற்காக கிருஷ்ணர் அங்கு வந்தார். ஆனால் வாணாசுரன் அவரை எதிர்த்தான். அவன் தனது ஆயிரம் கைளாலும் கிருஷ்ணரைத் தாக்க முயன்றான். இருவருக்கும் போர் மூன்டது. சிவபெருமான் கிருஷ்ணரிடம் கேட்டுக் கொண்டதற்கு இணங்க அவர் வாணாசுரனின் ஆயிரம் கைகளில் இரண்டை மட்டும் விடுத்து மற்றவற்றை வெட்டி வீழ்த்தினார். பின்னர் அனைவரின் ஒப்புதலுடன் அனிருத்தனுக்கும் உசைக்கும் திருமணம் நடைபெற்றது.
(இது பாகவத புராணம் கூறும் கதை)

கருத்து
     பிறர் விரும்பும் தன்மையல்லாத செயல்களைச் செய்ய வேண்டாம் என்பது பாடலின் மையக்கருத்தாகும்.
 
தொடர்ந்து சிந்திப்போம் . . .
 
முனைவர் இரா. கோகுல்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 641020
 

No comments:

Post a Comment