பக்கங்கள்

ஆத்திசூடி வெண்பா - 29

இதழ் - 31                                                                இதழ் -
நாள் : 27-11-2022                                                   நாள் : ௨௭ - ௧௧ - ௨௦௨௨
 

 
ஆத்திசூடி வெண்பா – 29

ஆத்திசூடி (ஔவை)

                 இளமையிற் கல்

உரை
     இளவயதில் கல்வியைக் கற்றுக் கொள்க.

ஆத்திசூடி வெண்பா (இராமபாரதி)
பாடல் – 29

     கல்வியிள மைக்குளிலாக் காளிதாசன் மனையாள்
     வல்வசையாற் பொல்லா மரணமுற்றுச் – செல்வதனான்
     நற்றமா புன்னைவன நாதா இதையறிந்து.
     கற்றால் இளமையிற் கல்.


உரை
     நல்ல ஒழுக்கத்தையுடைய பெரியவனான புன்னைவனநாதனே! இளமைக் காலத்தில் முறைப்படி கல்விபெறாத காளிதாசன் அவன் தங்கியிருந்த மனையாளின் வஞ்சகத்தால் பொல்லாத மரணத்தைப் பெற்றான். ஆதனால் இதனை அறிந்து கற்க முயன்றால் இளமையிலேயே கல்வியைப் பெற்றுவிடு.

விளக்கம்
     காளிதாசன் இளமையில் முட்டாளாய் ஆடுமேய்த்துக்கொண்டு கல்வி கற்காதவனாய் இருந்தார் என்பதால் ‘கல்வி இளமைக்குள் இல்லாக் காளிதாசன்’ என்றார். மனையாள் – மனைக்கு உரியவள். நற்றமா – நல்லமா என்ற விரிந்து நல்ல ஒழுக்கத்தையுடைய பெரியோன் என்றுபொருள்படும். மா – பெரிய. கல்வி எந்த வயதிலும் பெறக்கூடியதே. ஆனாலும் இளமையிற் பெறக்கூடிய கல்வி பலவகையிலும் சிறப்புடையது என்பதை ‘கற்றால் இளமையிற் கல்’ என்றார். “ஓதுவது ஒழியேல்“ (பாடல்-11) என்று முன்னர் சொன்னதற்கும் இதற்குமான வேறுகாடு என்னவெனின், எக்காலத்தும் ஓதுதலை வலியுறுத்திய பின்பு எப்பொழுது ஓதுதலைத் தொடங்க வேண்டும் (இளமையில்) என்று இவண் வலியுறுத்துதல் பொருட்டாகும்.

காளிதாசன் கதை
     அரிகரபுரத்திலுள்ள அனந்தநாராயணன் அந்தணனுக்கு அரிகரன் என்னும் பெயருடைய மகனிருந்தான். அவன் அதிக மூடனாய் ஆடு மேய்க்க நியமிக்கப்பட்டு மேய்க்கும் நாள்களிலே ஒருநாள் ஆடுகள் உண்ணும்  குழைக்காக ஒரு மரத்திலேறி நுனிக்கொம்பிலிருந்து அடிக்கொம்பைத் தரித்தான்.

     கல்வியிலே வாதுசெய்து தன்னை வெல்பவனையே திருமணம் செய்ய முடிவுசெய்திருந்த ஓர் அரசகுமாரியோடு வாதுசெய்து தோல்வியுற்ற கற்றார் சிலர், இவனை மரத்தினின்று இறக்கிக் கொண்டுபோய் அந்நரசகுமாரிக்குக் அறிஞன் எனக்காட்டி ஏற்கச் செய்தனர். அவள் கற்றவர்கள் செய்த அமடுகளெல்லாம் அறிந்து காளிதேவியிடம் சென்று வரம்பெறும்படி அவனை அனுப்பினாள். அப்படியே அவன் காளிதேவியிடம்போய் வரம்பெற்று அறிஞனாய்க் காளிதாசன் என்னும் பெயரும்பெற்று புசராசன் என்னும் மன்னனின் அவையில் புலவர்களுக்குத் தலைவனாய் விளங்கினான்.

     இப்படி போசராசனுடைய அவையில் பலநாளிருந்து பின் யாதோ ஒரு காரணத்தால் அவனை வெறுத்துத் தாசிவீட்டிலே மறைந்திருந்தான். அப்பொழுது போசராசன் காளிதாசனை வெளிப்படுத்தக் கருதி ஒரு பாடலில் பாதியை முடித்து மீதிப்பாதியை முடிப்பவர்களுக்குத் தன்னரசாட்சியில் பாதி கொடுக்கப்படும் என்று அறிவித்தான். இதனை அறிந்த அந்தத் தாசி காளதாசனைக்கொண்டு மற்றைப் பாதியை முடிப்பித்து அரசாட்சியின் பாதியைத் தானே பெறக்கருதிக் காளிதாசனை வெட்டிக்கொன்றுவிட்டுச் பாடலின் பாதியைக் கொண்டுபோய்ப் போசராசனுக்குக் காட்டினாள்.
(இக்கதை இலங்கைப் பதிப்பிற் கண்டவாறு)

கருத்து
     கல்வி கற்கும் செயலை இளமையிலேயே தொடங்குக என்பது பாடலின் மையக்கருத்தாகும்.
 
 
தொடர்ந்து சிந்திப்போம் . . .
 
முனைவர் இரா. கோகுல்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 641020 

No comments:

Post a Comment