பக்கங்கள்

இதழ்-2 ஆத்திச்சூடி வெண்பா - கடவுள் வாழ்த்து

இதழ்–2                                                                                            இதழ் - உ
நாள் : 8-5-2022                                                                              நாள் : அ-ரு-௨௰உஉ

 

    இராமபாரதி எழுதிய ஆத்திசூடி வெண்பா ஔவையார் எழுதிய ஆத்திசூடிக்கு விளக்கம் போல அமைந்த நூலாகும். எனவே ஆத்திசூடியை ஒட்டியே ஆத்திசூடி வெண்பா நூலையும் நாம் சிந்திக்க வேண்டும். கடவுள் வாழ்த்து சொல்லித் தொடங்கும் மரபின்படி ஔவையாரும் தான் எழுதிய ஆத்திசூடியை கடவுள் வாழ்த்து சொல்லித் தொடங்குகிறார்.  

ஆத்திசூடி (ஔவை)

குறிப்பு : ஔவையார் இயற்றிய ஆத்திசூடி நூலுக்கு நாம் இங்கு சிந்திக்கும் விளக்கம் ந.மு. வேங்கடசாமி நாட்டாரின் ஆத்திசூடி உரையைத் தழுவியது ஆகும்.

கடவுள் வாழ்த்து :

ஆத்தி சூடி அமர்ந்த தேவனை
ஏத்தி ஏத்தித் தொழுவோம் யாமே

உரை :

   ஆத்தி மலர் மாலையைச் சூடியுள்ள சிவபெருமான் விரும்பிய விநாயகப் பெருமானை நாம் வாழ்த்தி வணங்குவோம்.

    ஔவையாரின் ஆத்திசூடி அடியையொட்டி இராமபாரதியும் ஆத்தி மலரைச் சூடிய சிவபெருமானை வணங்கித் தனது ஆத்திசூடி வெண்பா நூலைத் தொடங்குகிறார்.

ஆத்திசூடி வெண்பா (இராமபாரதி)

    ஆத்திசூடி வெண்பா நூல் நன்முறையில் நிறைவடையவும் மக்கள் பயன்பெறவும் இராமபாரதி சிவபெருமானை இப்பாடலில் வணங்குகிறார். ஆனால் சிவபெருமானைப் போற்றுவதோடு அல்லாமல் இந்த நூல் யாருக்காகப் பாடப்பட்டது என்ற குறிப்பையும் தருகிறார். அதன் மூலம் இந்த நூல் தோன்றிய வரலாற்றுக் குறிப்பையும் நாம் அறிந்துகொள்ள முடிகிறது.

கடவுள் வாழ்த்து :

உலகம்புகழ் பாகை யோங்குதொண்டை நாட்டில்
திலகன் கணபதிமால் செல்வன் - நலமிகுந்த
வாழ்வாகும் புன்னை வனநாதன் நற்றமிழ்க்குச்
சூழாத்தி சூடி துணை

உரை :

    சிறப்புமிக்க தொண்டை நாட்டிலுள்ள 'பாகை' என்னும் ஊர் உலகத்தோரால் புகழப்படுந்தன்மையுடையது. அங்கு வாழும் தலைமைச் சிறப்புடைய கணபதி என்பவரின் மகன் 'புன்னைவன நாதன்'. அவனுக்கு உரைக்கப்படும் இத்தமிழ்நூல் (ஆத்திசூடி வெண்பா) நன்கு நிறைவுபெற ஆத்தி மலரைச் சூடியவராகிய சிவபெருமானே துணையாக நிற்க வேண்டும்.

விளக்கம் : 

   தொண்டைநாடு சான்றோருடைத்து”  என்பது முன்னோர் வாக்கு. சான்றோர் இருக்குமிடத்தில் அறம், பொருள், இன்பம் நிறைந்திருக்கும். தொண்டைநாட்டை மற்ற நாட்டினின்று வேறுபடுத்திக்காட்ட 'ஓங்கு தொண்டை நாடு' என்றார். (சேரநாடு, சோழநாடு, பாண்டியநாடு, தொண்டை நாடு, கொங்குநாடு - வியன் தமிழ்நாடு ஐந்து” என்கிறது தண்டியலங்காரம், “வியன் தமிழ்மண்டலம் ஐந்து” என்கிறது திருமந்திரம்). எட்டுத்தொகை நூல்களைப் பட்டியலிட்டுக் காட்டும் பழம்பாடல் ஒன்று பரிபாடலின் சிறப்பை உணர்த்த ‘ஓங்கு பரிபாடல்’ என்று குறிப்பிடுவதும் நோக்கத்தக்கது. அத்தகைய ஓங்கு தொண்டை நாட்டில் அமைந்துள்ள ஊர்களுள் 'பாகை' சிறப்புடையது என்பதனை “உலகம்புகழ் பாகை” என்றார்.

 பாகை ஊரில் பலரிருக்க, கணபதி என்பவர் மிக்க புகழுடையராய் விளங்கியது கருதி அவரைத் 'திலகன்' என்றார். திலகன் என்றால் ‘சிறந்தவன்’ என்று பொருள். இந்திய நாட்டின் தெற்குப் பகுதியிலுள்ள திராவிட நன்னாடுகளுள் திலகம் போன்றது தமிழ்நாடு என்னும் பொருளில் “நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும், சீராரும் வதனமெனத் திகழ்பரதக் கண்டமதில், தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடர்நல் திருநாடும், தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறுந் திலகமுமேஎன்று மனோண்மணீயம் பெ. சுந்தரனார் சொல்வதும் இத்தன்மைத்து.

 புன்னைவனநாதன் 'பல வேடிக்கை மனிதரைப்' போல வாழாமல் மற்றவர்க்குப் பயன்படும் வாழ்வை வாழ்த்திருக்கிறார் என்பதனை நலமிகுந்த வாழ்வாகும் புன்னைவனநாதன்” என்றார்.

கருத்து :

புன்னைவனநாதனுக்கு உரைக்கப்படும் ஆத்திசூடி வெண்பா என்னும் இந்நூல் முழுமையடைய சிவபெருமானே துணைநிற்க வேண்டும் என்பது இப்பாடலின் மையக்கருத்தாகும்.

 

( தொடர்ந்து சிந்திப்போம் . . . )



No comments:

Post a Comment