பக்கங்கள்

தமிழக ஊர்களின் இன்றைய பெயரும் அன்றைய பெயரும்

இதழ்–3                                                                                          இதழ் - ௩
நாள் : 15-5-2022                                                                            நாள் :
௧௫-ரு-௨உஉ 


ஈரோடு – ஈரோடை

 

 
     பெரும்பள்ளம் ஓடை மற்றும் பிச்சைக்காரன்பள்ளம் ஓடை ஆகிய இரண்டு ஓடைகளுக்கு நடுவே இவ்வூர் அமைந்துள்ளதால், ஈரோடை (இரண்டு ஓடை) என்னும் பெயரால் அழைக்கின்றனர். 
 
     இங்கு எழுந்தருளியுள்ள கடவுள் கபாலீசுவரர்  ஆவார். அவர் கையில் ஏந்தியுள்ள ஈர ஓடு  என்னும் பெயர் நாளடைவில் மருவி ஈரோடு என்று மாறியதாகவும் கூறப்படுகிறது.


தஞ்சாவூர் – தஞ்சை

 
     தஞ்சை என்பதற்கு "குளிர்ந்த வயல்கள் நிறைந்த பகுதி" என்று பொருள். தஞ்சாவூர் எட்டாம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட ஒரு நகராகும். அப்போது இப்பகுதியினை வளமையோடு ஆண்டு வந்தவர் தனஞ்சய முத்தரையர் ஆவார். அவர் பெயரைக் கொண்டு தனஞ்சய ஊர் என்று இந்நகரம் பெயராகப் பெற்றது. பின்னாளில் அப்பெயர் மருவி தஞ்சாவூர் என்று நிலைபெற்றது என்றும் கூறப்படுகிறது. 
 
     முற்காலத்தில் தஞ்சன் என்னும் அசுரன் இவ்விடத்தில் மக்களைத் துன்புறுத்தி வந்தான். சிவபெருமான் மக்களைக் காக்க அவனை வதம் செய்த இடமாதலால் தஞ்சாவூர் என்ற அழைக்கப்படுகிறது. சிவபெருமான் இவ்வூரில் தஞ்சபுரீசுவரர் என்ற திருப்பெயருடன் கோயில் கொண்டுள்ளார். இத்திருக்கோயில் தஞ்சாவூரிலிருந்து கும்பகோணம் செல்லும் சாலையில், பள்ளியக்கிரகாரத்திற்கு அருகிலுள்ளது. 
 

தருமபுரி – தகடூர்

 

     ருமபுரி, சங்க காலத்தில் தகடூர் என்ற பெயரில் அழைக்கப்பட்டது. தகடூர் என்ற பெயர் தகடு + ஊர் என்ற இரண்டு தமிழ் சொற்களிலிருந்து உருவானது, "தகடு", அதாவது இரும்பு (இரும்பு தாது) என்று பொருள், "ஊர்" என்பது "இடம்" என்று பொருள்படும். தகடூர் என்ற பெயர் சங்க காலத்திற்குப் பிறகு தருமபுரி என மாற்றப்பட்டது. மேலும், தரும் + புரி என்பது மருவி தருமபுரி என உருவானது.


ாமக்கல் – நாமகிரி


      "நாமகிரி" என்று அழைக்கப்படும் ஒற்றைப் பாறை 65 மீட்டர் உயரத்துடன் நகரின் நடுவில் உள்ளது. அதனால் இவ்வூர் நாமகிரி என்று அழைக்கப்பட்டது. நாமகிரி என்ற பெயரே பின்னாளில் நாமக்கல் என்று உருவானது. 
 
     இப்பாறையின் ஒரு புறம் அரங்கநாத பெருமாள் குகைக்கோயில் உள்ளது. மறுபுறம் நரசிம்ம பெருமாள் குகைக்கோயில் உள்ளது. இக்கோயில்கள் கி.பி 784இல் அதியமான் மரபைச் சேர்ந்த குணசீலன் கட்டியதாக கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. 
 

புதுக்கோட்டை – புதுகை

 
     ன்னர் இரகுநாதராயத் தொண்டைமான் (1686-1730) இங்கு புதிதாக ஓர் அரண்மனை கட்டியதால், இவ்விடத்திற்குப் புதுக்கோட்டை என்ற பெயர் வழங்கப்பட்டது.

 

( தொடர்ந்து அறிவோம் . . . ) 

 

முனைவர் இரா. ஆனந்த் 

உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 641020.

 

No comments:

Post a Comment