பக்கங்கள்

ஆத்திசூடி வெண்பா - 1

இதழ்–3                                                                                          இதழ் - ௩
நாள் : 15-5-2022                                                                            நாள் :
௧௫-ரு-௨உஉ

       



ஆத்திசூடி (ஔவை)

 

குறிப்பு :

     அகரம் அனைத்து எழுத்துகளுக்கும் முதலாக இருப்பது போல மானுட வாழ்க்கைக்கு அறமே முதன்மையானது என்பதைக் கருத்திற் கொண்டு தனது ஆத்திசூடியில் முதற்செய்தியாக ஔவை அறச்செயல்களில் ஈடுபடுவதை முன்வைக்கிறார்.

 பாடல் – 1

அறஞ்செய விரும்பு

 உரை :   தருமத்தைச் செய்வதற்கு நீ விருப்பம் கொள்.

 

ஆத்திசூடி வெண்பா

 

குறிப்பு :

     ஆத்திசூடி வெண்பா புன்னைவனநாதன் என்பவருக்கு அறமுணர்த்த இராமபாரதியால் இயற்றப்பட்டது. அதனால் வெண்பாக்கள் யாவும் புன்னைவனநாதனை விளித்துச் சொல்வதுபோல அமைந்துள்ளது கருத்திற்கொள்ளத்தக்கது.

 பாடல் – 1

அருளார் கபிலை யறமே செயமென்

றிருளகல வேங்கைக் கியம்பும் - பெருமையினான்

மாவளரும் புன்னை வனநாத மெய்த்துணையா

மேவியறஞ் செய விரும்பு

  

உரை :

     பெருமையினால் நாளும் புகழ்வளர்க்கும் புன்னைவனநாதனே! அருளுடைய கபிலைப்பசு அறச்செயல் புரிதலே உண்மையான வெற்றி என்றுரைத்து வேங்கையின் அறியாமையை நீக்கியது. எனவே நீயும் அறத்தினையே உண்மையான துணையாகக் நினைந்து அதனைச் செய்ய விரும்புக.

 

கபிலைப்பசு அறமுரைத்த கதை


     உத்தரபூமியிலே குடிதாங்கினான் என்னும் பெயருடைய இடையனாலே மேய்க்கப்பட்ட பசுக்களுள்ளே கபிலைப்பசு ஒன்று தனியே மேயும்படி ஒருநாள் காட்டிற்குப் போயிற்று. அதனை ஒரு புலிகண்டு தனக்கு நல்லுணவு கிடைத்ததென்று தடுத்துக் கொல்ல முயன்றது. அப்போது கபிலை அப்புலியை நோக்கிப் பல தருமங்களையும் போதித்து விலகிக் கொண்டது. (பசு உரைத்த அறம் யாது என்பது புலப்படவில்லை. உயிர்கொலையினால் இம்மை, மறுமையில் நேரும் தீங்கு குறித்து எடுத்துரைத்திருக்கும் என்பதைக் கதைப் போக்கினால் உய்த்தறிய முடிகிறது.)

 ( இக்கதை இலங்கைப் பதிப்பில் கண்டவாறு )

 விளக்கம்:


     கபிலைப்பசு அருள் நிறைந்தது என்பதனை 'அருளார் கபிலை' என்று அடைகொடுத்துக் கூறினார். அருள் என்றது “தொடர்பு பற்றாது எல்லா உயிர்கள் மேலும் செல்வதாகிய கருணை” என்பார் பரிமேலழகர். கபிலைப் பசு வேங்கையின் மீது கொண்ட கருணையினால் அறமுரைத்து அதன் தீவினையைத் தடுத்தது என்ற கதைப்பாங்கோடு அருளார் கயிலை என்பதை இணைத்துக் காண்க. அறம் மட்டுமே நிலையான  வெற்றியைத் தரும் என்னும் கருத்தில் 'அறமே செயம்' என்று அறத்திற்கு 'ஏகாரம்' கொடுத்துரைத்தார். ஏகாரம் தேற்றப்பொருளில் வந்தது. செயம் என்றால் வெற்றி என்று பொருள். 
 
     இருளகல என்பது 'அறியாமை நீங்க' என்னும் பொருண்மையது. இருள் – அறியாமை. “இருள்சேர் இருவினையுஞ் சேரா இறைவன் பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு” (குறள், 5) என்பது திருக்குறள் கடவுள் வாழ்த்து அதிகாரக் குறள். இதில்வரும் இருள் என்பதற்கு ‘மயக்கம்’ என்று பரிமேலழகர் உரை வழங்குகிறார். 
 
     மயக்கம் என்றால் இதுவோ அதுவோ என்ற தெளிவற்ற நிலை. வை.மு. கோபாலகிருஷ்ணமாச்சாரியார் “மயக்கமாவது மறுபிறப்பும் இருவினைப்பயனும் கடவுளும் இல்லை எனவும், மற்றும் இத்தன்மையனவும் சொல்லும் பொய்ந்நூல் வழக்குகளை மெய்ந்நூல் வழக்கென்று துணிதல்; குற்றியை மகனென்றும் இப்பியை வெள்ளியென்றும் இவ்வாறே ஒன்றைப் பிறிதொன்றாகத் துணிதலும், அது. மருள், இருள் என்பன ஒருபொருட் சொற்கள்” (திருக்குறள், பரிமேலழகர் உரையும் வை.மு. கோபாலகிருஷ்ணமாச்சாரியார் ஆராய்ச்சிக் குறிப்புரையும், ப. 47) என்று விளக்கம் தருகிறார். 
 
     சைவ சித்தாந்த சாத்திரங்கள் பதினான்கனுள் ஒன்றான உமாபதிசிவம் இயற்றிய திருவருட்பயன் என்னும் நூலில் ஆணவமலத்தின் தன்மைகளைப் பேசும் அதிகாரம் இருள்மலநிலை என்று தலைப்பு பெற்றுள்ளது. இருள்மலநிலை என்பதற்கு “அறியாமையே வடிவாகிய ஆணவ மலத்தினது தன்மை” என்று அறிஞர் பொருளுரைப்பர். அவ்வண்ணம் இராமபாரதி இங்கு இருளகல என்றது அறியாமை நீங்க என்ற பொருளிலாகும். 
 
     அறம் மட்டுமே வாழும் காலத்தும் இறப்பிற்குப் பிறகும் உண்மையான துணையாக வருவது என்பதனை “மெய்த்துணையா மேவியறஞ் செய்ய விரும்பு” என்றார். அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது பொன்றுங்கால் பொன்றாத் துணை” (குறள்-36)  என்று திருக்குறளும் அறத்துணையை வலியுறுத்துவது நினையத்தக்கது,


கருத்து :


      மானுடர் யாவரும் அறச்செயல்களில் ஈடுபடுவதற்கு விருப்பம் கொள்க என்பது இப்பாடலின் மையக்கருத்தாகும்.


( தொடர்ந்து சிந்திப்போம் . . . )

முனைவர் இரா. கோகுல்

உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 641020.

No comments:

Post a Comment