பக்கங்கள்

ஆத்திசூடி வெண்பா - 30

இதழ் - 32                                                               இதழ் -
நாள் : 04-12-2022                                                  நாள் : 0 - - ௨௦௨௨

 
ஆத்திசூடி (ஔவை)
              அறனை மறவேல்

உரை

     அறக்கடவுளின் உண்மையை மறக்க வேண்டாம்.

ஆத்திசூடி வெண்பா (இராமபாரதி)

பாடல் – 30
     பத்திரகிரி ராசன் பகர்சனகன் மெய்விதுரன்
     சித்தபரி சுத்தஞ் செலுத்துதலால் – இத்தரையில்
     மன்னன் என்னும் புன்னை வனநாதா யாவுறினும்
     என்ன அறனை மறவேல்


உரை
     உலகத்தில் மன்னன் என்னும் நிலையில் விளங்கும் புன்னைவன நாதனே! பத்திரகிரி அரசன், புகழுடைய சனகன், உண்மைவிளம்பியான விதுரன் யாவரையும் அவர்களின் தூய்மையான சித்தம் வழிநடத்துததால் எந்நிலை வாய்த்தாலும் நீ அறக்கடவுளை மறவாதே.

விளக்கம்
     இத்தரை – நிலவுலகம். உலகமெலாம் புகழ்ந்துபேசும் சனகன் என்பதை பகர் சனகன் என்றார். மெய் – உண்மை. உண்மையே வடிவான விதுரன். சித்தம் – பகுத்தறியும் உள்ளம். சைவ சித்தாந்தம் உள்ளத்தினின்று வேறுபட்டு உற்றது நிச்சயிக்கும் தன்மையது சித்தம் என்கிறது. அறன் என்றது அறத்தை வழிநடத்தும் கடவுளை. பத்திரகிரியார், சனகர், விதுரர் ஆகியோரை அவர்களின் அறச்சிந்தனையே வழிநடத்தியது. அதைப்போல நீயும் நட என்றார். அறத்தை மறவேல் என்பதையே அதை நடத்தும் கடவுள் மீது ஏற்றி அறனை மறவேல் என்றார்.
 
இவ்வெண்பாவில் மூன்று ஆளுமைகள் பேசப்படுகின்றனர்.
  1. பத்திரகிரியார் – உஜ்ஜைனியை ஆண்ட அரசர், பட்டினத்தாரின் சீடர்.
  2. சனகர் – மிதிலையை ஆண்ட அரசர், சீதாதேவியின் வளர்ப்புத் தந்தை.
  3. விதுரர் – அம்பாலிகை வியாசரின் மகன். கௌரவர், பாண்டவர்களின் சிறிய தந்தை.

கருத்து
     எந்நிலையுற்றாலும் அறத்தை மறவாதே என்பது பாடலின் மையக்கருத்தாகும்.
 

தொடர்ந்து சிந்திப்போம் . . .
 
முனைவர் இரா. கோகுல்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 641020 



No comments:

Post a Comment