பக்கங்கள்

ஆத்திசூடி வெண்பா - 31

இதழ் - 33                                                          இதழ் -  
நாள் : 11-12-2022                                              நாள் : - - ௨௦௨௨


ஆத்திசூடி (ஔவை)

அனந்தலாடேல்

உரை
     
வேளை தவறிய மிகுதியான உறக்கம் கொள்ள வேண்டாம்.

ஆத்திசூடி வெண்பா (இராமபாரதி)

பாடல் – 31
     காலைதுயில் சீலம்போங் கண்டபக லாக்கம்போம்
     மாலை துயி னோயாம் வகையறிந்து – ஞாலமதிற்
     புண்ணியகா லந்தெரிந்து புன்னைவன பூபாலா
     எண்ணி யனந்தலா டேல்

உரை
     புன்னைவன நாதன் என்னும் தலைவனே! காலையில் உறக்கம் கொண்டால் ஒழுக்கம் போகும். நண்பகல் உறக்கம் செயலாக்கத்தைப் போக்கும். மாலை உறக்கம் நோய் பயக்கும். எனவே உலவகத்தில் உறக்கம் கொள்ளும் காலநிலைகளையறிந்து எண்ணி உறக்கம் கொள்க.

விளக்கம்
    துயில் – உறக்கம். சீலம் – ஒழுக்கம். ஆக்கம் – செயலாக்கம். புண்ணியகாலந் தெரிந்து – உறக்கம் கொள்வதற்கு உரிய பொழுதை அறிந்து. அனந்தல் – உறக்கம். மிகுதியான உறக்கத்தில் மகிழ்ச்சி கொள்ளாதே என்பது நேர்ப்பொருள் எனினும் அளவான உறக்கம்தான் உண்மையின்பம் பயக்கும். உடல் நலத்திற்கும் ஏற்றது என்பது வலியுறுத்தப்படுகிறது. 
 
     “நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும் 
      கெடுநீரார் காமக் கலன் ”           - குறள், 605
   என்னும் திருக்குறளும் இவண் நோக்கத்தக்கது. கெடுதலில் விருப்பமுடையோரின் செயல்களாக வள்ளுவர் துயில் என்பதையும் ஒன்றாகக் குறிப்பிடுகிறார். இவ்விடத்தில் வள்ளுவர் மிகுதுயிலைக் குறிப்பிடுகிறார்.

கருத்து 

   மிகுதியான உறக்கம் கொள்ள வேண்டாம் என்பது பாடலின் மையக்கருத்தாகும்.

 

தொடர்ந்து சிந்திப்போம் . . .

முனைவர் இரா. கோகுல்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 641020

No comments:

Post a Comment