பக்கங்கள்

ஆத்திசூடி வெண்பா - 32

இதழ் - 34                                                                 இதழ் -
நாள் : 18-12-2022                                                     நாள் : - - ௨௦௨௨


ஆத்திசூடி (ஔவை)

                 ” கடிவது மற ”
 
உரை
     சான்றோரும் நூல்களும் விலக்குக என்று கூறியவற்றை நெஞ்சினும் நினையாதொழிக.

ஆத்திசூடி வெண்பா (இராமபாரதி)
பாடல் – 32

        இரணியனும் ஆங்காரத்து எண்ணாது உரைத்து
        நரகரியால் இற்றான் முன்னாளிற் – சுரதருவைப்
        போலே கொடுக்கின்ற புன்னை வனநாதா
        மாலே கடிவது மற

உரை
     தேவமரமாகிய கற்பக மரம்போல கேட்டதனைக் கொடுக்கின்ற புன்னைவனநாதனே! இரணியன் தனது ஆங்காரத்தினால் நல்லது தீயதை ஆராய்ந்து பாராமல் தானே கடவுள் என்றும் தன்னையே உலகத்து உயிர்கள் வணங்கவேண்டும் என்றும் உரைத்து நரசிம்மப் பெருமானால் முன்னாளில் அழிக்கப்பட்டான். ஆதலால் நீ மயக்கத்தைப் பயப்பன என்று விலக்கப்பட்டவற்றை மறந்து கைவிடுக.
 
விளக்கம்
  • நரகரி – நரசிம்மப்பெருமான்
  • நரன் – மனிதன்
  • அரி – சிம்மம்
  • ஆங்காரம் – அகங்காரம் - தானே பெரியவன் என்னும் தலைச்செருக்கு. 
  • எண்ணாது – நல்லது தீயது என்பதைப் பகுத்தாராயாது. 
  • இற்றான் – அழிந்துபோனான். துணி இற்றது, மரம் அற்றது என்பதுபோல. 
  • சுரர் – தேவர்
  • தரு – தாவரம், மரம். 
  • சுரதரு – தேவ மரமாகிய கற்பக மரம். பாற்கடலில் தோன்றிய கற்பகமரம் கேட்டதைக் கொடுப்பது என்பது புராணக் கருத்து. 
  • மால் – மயக்கம். மயக்கத்தைத் தரக்கூடயது என்பவற்றை மற என்பதை “மாலே கடிவது மற” என்றார்.

இரணியன் கதை
    இரணியன் தவஞ்செய்து பிரம்மதேவரிடத்தில் வரம்பெற்று மூவுலகங்களுக்கும் அரசனாய் ‘இரணியனேநம’ என யாவரும் தன்னையே வணங்கும்படிக் கட்டளையிட்டான். அவன் மகனாகிய பிரகலாதன் அதனை மறுத்து ‘ஓம்நமோநாராயணாய’ என்று சொல்லி வாதாடினான். அவனை நோக்கி “உனது நாராயணன் இத்தூணிலும் இருப்பானோ” என்று சொல்லி இரணியன் அத்தூணிலே தன்கையால் அடித்தான். அப்பொழுது திருமால் அத்தூணிலிருந்து நரசிம்மமாகத் தோன்றி அவனைக் கொன்றார்.
(இக்கதை இலங்கைப் பதிப்பிற் கண்டவாறு)

கருத்து
   இவை கூடாது என்று சான்றோரும் அறநூல்களும் விலக்கியவற்றை நினைவாலும் நினையாதொழிக என்பது பாடலின் மையக்கருத்தாகும்.
 

தொடர்ந்து சிந்திப்போம் . . .

முனைவர் இரா. கோகுல்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 641020

No comments:

Post a Comment