பக்கங்கள்

ஆத்திசூடி வெண்பா - 33

 
 
இதழ் - 35                                        இதழ் -
நாள் : 25-12-2022                            நாள் : - - ௨௦௨
 


ஆத்திசூடி (ஔவை)

”  காப்பது விரதம்
 
உரை
     செய்ய வேண்டிய நோன்புகளையெல்லாம் தவறாமல் மேற்கொள்க.

ஆத்திசூடி வெண்பா (இராமபாரதி)
 
பாடல் – 33
     துய்ய சிலாதன்சேய் துங்கவிர தங்களெலாம்
     செய்யநந்தி யாகச் சிறப்புற்றான் – பொய்யலவே
     தேன்காண்சொற் புன்னைவன தீரனே ஐம்பொறியைத்
     தான்காப் பதுவிர தம்
 
உரை
     தேன் போன்ற சொற்களைச் சொல்லும் புன்னைவன நாதன் என்னும் தீரனே! தூய்மையாளனான சிலாதன் என்னும் முனிவனின் மகன் பெருமையுடைய நோன்புகளைளெல்லாம் செய்த காரணத்தினால் நந்தி என்னும் பெயர்பெற்றுச் சிறப்புற்றான். இது பொய்யல்ல. எனவே மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐம்பொறிகளைத் தன் கட்டுப்பாட்டுள் நிற்குமாறு செய்தலே விரதம் என்பதை உணர்.
 
விளக்கம்
     துய்ய – தூய்மையான. துய்ய சிலாதன் – எண்ணம், சொல், செயல்களால் தூய்மையான முனிவனான சிலாதன். துங்க – பெருமை, உயர்வு. “துங்கக் கரிமுகத்துத் தூமணியே” என்று ஔவையார் தனது நல்வழி நூலில் விநாயகப் பெருமானைக் குறிப்பிடுவார். துங்கவிரதங்கள் – பெருமையுடைய விரதங்கள். இறைவழிபாடு, உயிர்க்கொலை தவிர்த்தல், பசித்தோருக்கு உணவிடல் போன்ற உயர்விரதங்கள். இனிமையான சொற்களைப் பேசுபவன் என்பதை “தேன்காண் சொல்” என்றார். 
 
     ஐம்பொறி – மனிதர்களுக்கு அனுபவமளிக்கும் மெய், வாய், கண், மூக்கு, செவி என்பன. ஐம்பொறிகள் அனுபவமும் அறிவும் அளித்தாலும் அவை உலகியலுக்காகவை, மயக்கத்தை அளிப்பவை. அவற்றை வெல்ல வேண்டும் என்பது இந்திய மெய்யியல் மரபுகள் பலவற்றின் கூற்று.
      “ பார்ப்பான் அகத்திலே பாற்பசு ஐந்துண்டு
       மேய்ப்பாரு மின்றி வெறித்துத் திரிவன
       மேய்ப்பாரும் உண்டாய் வெறியும் அடங்கினால்
       பார்ப்பான் பசுஐந்தும் பாலாய்ப் பொழியுமே ”
என்று திருமூலரும் இக்கருத்தை வலியுறுத்கிறார். 
 
     எனவே ஐம்பொறிகளைத் தன் கட்டுப்பாட்டுள் மனிதன் வைத்திருத்தல் வேண்டும் என்பதை “ஐம்பொறியைத் தான் காப்பது விரதம்” என்றார்.

சிலாதன் கதை

     முன்னொரு காலத்திலே திருமறைக்காட்டில் இருந்த ஒரு பிராமணச் சிறுவன் தம் வீட்டிலே பிச்சைக்குவத்த மற்றொரு பிராமணனுடைய பிச்சை அன்னத்துக்குள்ளே ஒரு சிறுகல்லையிட்டு விட்டார். அந்தப் பிராமணன் அவ்வன்னத்தை அக்கல்லோடு கொண்டுபோய் உண்டான். பின்னர் அச்சிறுவன் வளர்த்து சாத்திரங்கள் படித்துத் தவம்பல செய்து ‘கோரதவசி’ எனப் பெயரும் பெற்று அட்டசித்திகளிலும் வல்லராய் ஆனான். 
 
     அத்தவசி ஒருமுறை இயமபுரத்திற்குப் போய் அங்கே செய்யும் தண்டனைகளைப் பார்த்து வருகையிலே அங்கே ஒரு பெரிய மலையைக் கண்டு இம்மலை யாதென்று வினாவ, அப்போது அங்கேயிருந்த சிலர் அவரை நோக்கிப் "பூமியிலே கோரதபசி என்றொரு பாவி பிச்சைக்குவந்த ஒரு பிராமணனுடைய அன்னத்திலே ஒருகல்லையிட அக்கல்லோடு பிராமணன் அவ்வன்னத்தை உண்டான். அக்கல்லே அக்கோரதபசி இறந்தபின் உண்டற்கு இங்கே மலையாக வளர்கின்றது" என்றனர். அதனைக் கேட்ட கோரதபசி அஞ்சி “அதுசெய்தான் இதினின்று தப்பிக்கொள்ளும் வகையுளதோ?” என்று வினாவினார். “பூமியிலே இவ்வளவோர் மலையைக் கரைத்துண்டானபின் இம்மலையும் தானாக இங்கே கரைந்துவிடும்" என்றார்கள். கோரதபசி உடனே பூமியிலேவந்து தன்னூரை அடைந்து ஒரு மலையை உண்டாக்கிச் சிறிதுசிறிதாக நாடோறும் இடித்துப் பொடியாக்கி நீரிற்கரைத்து உண்டுவந்தார். அம்மலை உண்டொழிய இயமபுரத்திலுள்ள மலையுங் கரைந்தொழிந்தது. அக்கோரதபசி மலையைக் கரைத்துண்ட காரணத்தாற் சிலாதர் என்னும் பெயர் பெற்றார்.

     சிலாதர் புத்திரப்பேற்றினை விரும்பித் திருவையாற்றிலே பஞ்சாக்கினி நடுவினின்று பல ஆண்டுகளாகத் தவஞ்செய்தார். அத்தவத்திற்கு இரங்கிச் சிவபெருமானும் வெளிப்பட்டு “முனிவனே! உனக்கு வேண்டும் வரம் யாது?” என்று வினாவ சிலாதமுனிவர் “ஒரு அறிவுடை மகனைத் தந்தருளவேண்டும்” என்றார். சிவபெருமான் "சகல குணங்களும் நிறைந்த அறிவுடைய பதினாறு வயதுமட்டுமே வாழ்நாள் கொண்ட மகன் நீ செய்யும் யாகபூமியிலே உழுபடைச்சாலிலே தோன்றுவான்'' எனச் சொல்லி மறைந்தார். பின்னர் யாகசாலையை உழுதபோது ஒரு மாணிக்கப்பெட்டி தோன்றிற்று, சிலாதமுனிவர் அப்பெட்டியைத் திறந்தார். 
 
     பெட்டிக்குள்ளே நெற்றிக்கண்ணுஞ் நிலவும் சடைமுடியும், நாற்தோளுமாக விளங்குஞ் சிவமூர்த்தம் இருக்கக்கண்டு துதித்து நின்றார். அப்போது “முனிவனே! பெட்டியை மூடித்திற" என்றோர் அசரீரி தோன்றிற்று. பின்னர் அந்த அசரீரிப்படி மூடித்திறந்தார். அப்பொழுது பெருமான் ஒரு குழந்தையாக அழுதார். சிலாதமுனிவர் அக்குழந்தையை எடுத்துக்கொண்டுபோய்ப் செப்பீசுவரர் எனப் பெயரிட்டு வளர்த்தார். 
 
     வளர்த்துவருங்காலத்திலே பதினாறாம் அகவை வந்தது. பதினாறு அகவையென்னும் நியமத்தைக் குறித்துத் தந்தை தாயார் வருந்தினர். மகன் அவர்களைப் பயப்படவேண்டாம் என்று சொல்லி அயனரிதீர்த்தத்தின் நடுவினின்று சிவமந்திரம் ஓதி அருந்தவஞ் செய்தார். அப்போது சிவபிரான் வெளிப்பட்டு நித்தியமாகிய சாரூப்பியம் (தன்வடிவு) கொடுத்து நமது பெயராகிய நந்தி என்னும் பெயரைச் சூட்டி சுகேசி என்னும் பெண்ணையும் மணம் புணர்வித்துக் கணத்தலைமையும் கொடுத்துத் தனது கோயில் வாயிலிலே காவல்செய்யும்படி சுரிகையும் பிரம்பும் கொடுத்து முடிகுட்டி வைத்தார்.
(இக்கதை இலங்கைப் பதிப்பிற் கண்டவாறு)
 
கருத்து
     ஐம்பொறிகளை வெல்லும் பெருமையுடைய நோன்புகளைத் தவறாமல் மேற்கொள்ள வேண்டும் என்பது பாடலின் மையக்கருத்தாகும்.
 

தொடர்ந்து சிந்திப்போம் . . .

முனைவர் இரா. கோகுல்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 641020
 
 

No comments:

Post a Comment