பக்கங்கள்

ஆத்திசூடி வெண்பா - 34

இதழ் - 36                                                                                  இதழ் - ௩௬
நாள் : 01-01-2023                                                                      நாள் : 0 - 0 - ௨௦௨
 

ஆத்திசூடி (ஔவை)

கிழமைப்பட வாழ்
 
உரை
    உடலாலும் பொருளாலும் மற்றவர்களுக்குப் பயன்படும்படி வாழ்.

ஆத்திசூடி வெண்பா (இராமபாரதி)
 
பாடல் – 34
      தண்டமிழ்க்காக் கம்பருக்குத் தாமடிமை யென்றுதொண்டை

      மண்டலத்தார் ஏட்டில் வரைந்ததுபோல் – எண்டிசைக்கும்

      பொன்னான புன்னைவன பூபாலா தென்பாகை

      மன்னா கிழமைப்பட வாழ்.

உரை
     எட்டுத்திசையிலும் வாழும் உயிர்களுக்கு செல்வம்போல விளங்கும் புன்னைவனத் தலைவனே!  தென்பாகை என்னும் ஊரின் மன்னவனே! இன்பம் பயக்கும் தமிழ்மொழியில் கம்பர் இயற்றிய ஏர்எழுபது என்னும் நூலுக்காக தொண்டை மண்டல வேளாளர்கள் “நாங்கள் கம்பருக்கு அடிமை” என்று ஏட்டில் உரிமைச் சீட்டு எழுதிக் கொடுத்துப் புகழ் எய்தினர். அதுபோல நீயும் மற்றர்களுக்கு உரிமையுடைய வாழ்க்கையை வாழ்வாயாக.

விளக்கம்
     தண் – குளிர்ச்சி, தண்டமிழ் – குளிர்ச்சியான, இதமான தமிழ்மொழி. கம்பர் செய்த தண்டமிழ் என்பது தொண்டை மண்டல வேளாண்மக்களையும் வேளாண்மையையும் சிறப்பித்து அவர் இயற்றிய ‘ஏர்எழுபது’ என்னும் நூலைக் குறிக்கும். அந்த நூலுக்காக தொண்டை மண்டல வேளாளர்கள் தங்களையே அடிமையாக கம்பருக்கு உரிமைச் சீட்டு எழுதிக் கொடுத்தார்கள் என்பதை ‘தொண்டை மண்டலத்தார் ஏட்டில் வரைந்தது’ என்றார். தென்பாகை – புன்னைவன நாதனின் ஊர். அனைத்து உயிர்களையும் பொன்போல் பாதுகாப்பவன் என்பதால் ‘எண்டிசைக்கும் பொன்னான’ என்றார். கிழமை – உரிமை, உறவு.

கம்பர் கதை
     கவிச்சக்கரவர்த்தியாகிய கம்பநாட்டாழ்வார் ஏரெழுபதென்னும் பிரபந்தம் பாடியபோது தொண்டை மண்டலத்துள்ள வேளாளர் யாவரும் பெருமகிழ்ச்சியுற்று இதற்கு எங்களாலே தரத்தக்க வேறுபரிசு யாதொன்றுமில்லை எங்களை அடிமையாக உமக்குத் தருவதே பரிசாகும் என்று சொல்லிக் கம்பருக்கு அடிமையோலை எழுதிக் கொடுத்தார்கள்.
(இக்கதை இலங்கைப் பதிப்பிற் கண்டவாறு)
 
கருத்து
     பிறருக்கு உரிமையுடைய பயனான வாழ்வை வாழ வேண்டும் என்பது பாடலின் மையக்கருத்தாகும்.


தொடர்ந்து சிந்திப்போம் . . .

முனைவர் இரா. கோகுல்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 641020

No comments:

Post a Comment