பக்கங்கள்

ஆத்திசூடி வெண்பா-35

இதழ் - 37                                                                                        இதழ் -
நாள் : 08-01-2023                                                                          நாள் : 0அ - 0 - ௨௦௨
 
  

ஆத்திசூடி (ஔவை)

கீழ்மை அகற்று
உரை
     இழிவான குணஞ்செயல்களை நீக்குக.
 
ஆத்திசூடி வெண்பா (இராமபாரதி)
 
பாடல் – 35
     பெண்கேட்ட வேந்தனுக்குப் பெண்ணாயைப் பந்தரிலே
     கண்காண நின்குலத்தார் கட்டிவைத்த – பண்பதுபார்
     நன்பாகைப் புன்னைவன நாதனே யப்படிப்போல்
     அன்பான கீழ்மை யகற்று
 
உரை
   நல்ல பாகை என்னும் ஊரில் வாழும் புன்னைவன நாதனே! திருமணத்திற்குப் பெண்கேட்டு வந்த அரசன் ஒருவனுக்கு உன் குலத்தார் பெண் நாயைப் பந்தரிலே கட்டிவைத்து காட்டினர். அந்தப் பண்பைப் பார்ப்பாயாக. அப்படியான இழிவான செயல்களை உன் வாழ்விலிருந்து அகற்றிவிடு.
 
விளக்கம்
     பண்பு – குணம். இவ்விடத்தில் இழிகுணம் என்று ஏளனப்பொருளில் வந்தது. நல்ல வளம்கொழிக்கும் பாகை என்பதை றன்பாகை என்றார். புன்னைவன நாதனது முன்னார் பெண்கேட்டு வந்த யாரோ அரசன் ஒருவனுக்குப் பெண்ணாயைக் காட்டி இழிவுபடுத்தியுள்ளனர். அவ்வரலாறு விரிவாக ஏதென்று அறியக்கூடவில்லை.
 
கருத்து 
     இழிவான குணஞ் செயல்களை நம்மிடத்திலிருந்து நீக்கிவிடுதல் வேண்டும் என்பது பாடலின் மையக்கருத்தாகும்.

 
தொடர்ந்து சிந்திப்போம் . . .

முனைவர் இரா. கோகுல்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 641020
 

No comments:

Post a Comment