பக்கங்கள்

ஆத்திசூடி வெண்பா-36

இதழ் - 38                                                                                         இதழ் -
நாள் : 15-01-2023                                                                            நாள் : -0-௨௦௨
 
ஆத்திசூடி (ஔவை)
     குணமது கைவிடேல் 
உரை
     நன்மை தருவதென்று கண்டறிந்தவற்றைக் கைவிடாதே.
 
ஆத்திசூடி வெண்பா (இராமபாரதி)
 
பாடல் – 36
 
    நீர்கலந்த பாலையன்ன நீர்பிரித்துக் கொள்வதுபோற்
    சீர்கலந்தார் நற்குணமே சேர்ந்துகொள்வார் – ஏர்கொள்
    புகழாளா புன்னைவன பூபால னேமிக்
    ககுண மதுகை விடேல்
 
உரை
 
     நாளும் வளரும் புகழைக் கொண்டுள்ள புன்னைவன பூபாளனே! நீர் கலந்த பாலை அன்னப்பறவை பிரித்துக் கொள்வதுபோல சிறப்புடைய பெரியோர் நற்குணங்களை மட்டுமே தங்களுக்குரியதாகக் கொள்வர். எனவே மேன்மைமிக்க குணங்களை நீ என்றும் கைவிட்டுவிடாதே.
 
விளக்கம்
     முந்தைய பாடலில் கீழ்மையகற்று என்று இழிகுணங்களைக் கைவிடக் கூறியவர் இப்பாடலில் நற்குணங்களை கைக்கொள்ள வலியுறுத்துகிறார்.
 
     பாலொடு கலந்த நீரை அன்னப்பறவை பிரித்துண்ணும் என்பது தொன்றுதொட்டு வரும் நம்பிக்கை. சீர் – பெருமை, சிறப்பு. சீர்கலந்தார் – சான்னோர், பெரியோர். 
 
     இழிகுணங்கள் பல இடங்களிலும் இருந்தாலும் பெரியோர்கள் நற்குணங்களை மட்டுமே தங்களுக்குரியதாக்கிக் கொள்வர் என்பதை “சீர் கலந்தார் நற்குணமே சேர்ந்துகொள்வர்” என்றார். 
 
     ஏர் – எழுச்சி. நாளும் வளரும் புகழையுடையவன் எனபதை ஏர்கொள் புகழாளா” என்றார். மிக்க குணம் என்றது மேன்மைக்குணங்களையாம்.
 
கருத்து
     எச்சூழலிலும் நன்மைதரும் குணங்களை கைவிடுதல் கூடாது என்பது பாடலின் மையக்கருத்தாகும்.
 
 
தொடர்ந்து சிந்திப்போம் . . .

முனைவர் இரா. கோகுல்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 641020 
 

No comments:

Post a Comment