பக்கங்கள்

ஆத்திசூடி வெண்பா-37

இதழ் - 39                                                                                          இதழ் -
நாள் : 22-01-2023                                                                            நாள் : -0-௨௦௨
 
 
 
ஆத்திசூடி (ஔவை)
கூடிப் பிரியேல்

உரை
     நன்மக்களோடு நட்புகொண்டு பின்னர் அவரை விட்டு நீங்காதே.
 
 
ஆத்திசூடி வெண்பா (இராமபாரதி)
 
பாடல் – 37
    அர்ச்சுனன்மால் சார்பிழந்த வன்றே கருதலர்முன்
    கைச்சிலைவெற் பாக்கனத்துக் கைதளர்ந்தான் – நிச்சயமே
    மன்றலர்சூழ் புன்னை வனநாதா தக்கோரை
    என்றுங் கூடிப்பிரி யேல்
 
உரை
    சான்றோர்களை உடன் கொண்டிருக்கும் புன்னைவனநாதனே! அர்ச்சுனன் கண்ணனின் துணையை நீங்கித் தனியாக இருந்தபொழுது பகைவர்கள் தங்கள் விற்படையால் தாக்க அவர்களை வெல்ல இயலாது கை தளர்ந்தான். அதனால் உறுதியாக நன்மக்களோடு நீ கொண்டுள்ள நட்பை என்றும் கைவிட்டுப் பரிந்துவிடாதே.
 
விளக்கம்
    மால் – திருமால். இவ்விடத்து கண்ணனைக் குறித்தது. சிலை – வில். கைச்சிலை - என்றும் கையில் தாங்கியிருக்கும் வில். கை தளர்தல் – தோற்றல். தக்கார் – உரியவர்கள், நட்பு பூண்டவர்கள். எப்பொழுதும் நன்மக்களை நீங்கக் கூடாது என்பதை என்றும் என்று அடை கொடுத்துப் பின் கூடிப்பிரியேல் என்றார்.
அர்ச்சுனன் கதை
    பாண்டவர்கள் அத்தினாபுரியிலிருக்கும்பொழுது ஒரு தூதன்வந்து யாதவ குமாரர் யாவரும் கடல்விழாக்கொண்டாடிக் கள்ளுக்குடித்துத் தம்முள்ளே பகைத்துப் போராடி இறந்தார்கள் என்றும், கண்ணபிரானும் பலதேவனும் தவம் புரியுமாறு காட்டிற் புகுந்தார்கள் என்றுஞ் சொன்னான். அதுகேட்ட பாண்டவரும் பெண்களும் பெருந்துயரடைந்து புலம்பினார்கள். அவருள்ளே அருச்கனன் மிகு விரைவாகத் துவாரகைக்குப் போய் வசுதேவனையும் பெண்களையும் கண்டு அவர்களுக்கு ஆறுதல்கூறிப் பின் காட்டிற்புகுந்து கண்ணபிரானையும் பலதேவரையும் தேடியபோது அவர்களுடைய உடம்பு கண்மாத்திராருக்கக் கண்டு விழுந்து புரண்டழுது கண்ணபிரானுடைய பேரனாகிய வச்சிரதேவனைக் கொண்டு அந்திய கர்மங்களைச் செய்வித்தான். செய்வித்தபின் எழுநாளுள்ளே துவாரகை கடலாற் கொள்ளப்படும் என்று முன்னரே கண்ணபிரான் சொன்னபடி நடக்கும் என்றஞ்சி அங்கே இருக்கவிடாமல் கண்ணன் மனைவியரையும் நகரத்தாரையும் அழைத்துக்கொண்டு துவாரகையை நீங்கிப் பஞ்சவடம் என்னும் இடத்திலே வரப் பொழுதும்பட்டது. அப்போது அவர்கள் துவாரகையிலேயிருந்து கொண்டு வந்த திரவியங்களையும் பெண்களின் ஆபரணங்களையும் கண்டு சில வேடர்கள் அங்கே வந்து பறித்தார்கள். அப்போது தடுத்து வில்லிலே அம்புபூட்டி, அர்ச்சுனன் பிரயோகஞ் செய்தும் கண்ணன் சார்பிழந்தமையாற் பயன்படவில்லை.
 
கருத்து
    நல்லவர்களோடு கொண்டிருக்கும் நட்பைக் கைவிட்டு என்றும் பிரியக் கூடாது என்பது பாடலின் மையக்கருத்தாகும்.
 
தொடர்ந்து சிந்திப்போம் . . .

முனைவர் இரா. கோகுல்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 641020

No comments:

Post a Comment