பக்கங்கள்

ஆத்திசூடி வெண்பா-38

இதழ் - 40                                                                                           இதழ் - ௪0
நாள் : 29-01-2023                                                                             நாள் : -0-௨௦௨
 
  
 
ஆத்திசூடி (ஔவை)
கெடுப்பது ஒழி
உரை
    பிறருக்குக் கேடு தரும் செயல்களைச் செய்யாதே.

ஆத்திசூடி வெண்பா (இராமபாரதி)
பாடல் – 38

    வாலிகெட ராமனொரு வாளிதொட்ட வெம்பழியை
    மேலொருசென் மத்திலன்னோன் மீண்டுகொன்றான் – ஞாலமதில்
    வல்லவனே புன்னை வனநாதா யாரெனினும்
    ஒல்லை கெடுப்பது ஒழி.

உரை
    உலகத்தில் ஆற்றலுடையவனான புன்னைவன நாதனே! வாலி என்னும் வானரனை அழிக்க இராமன் மறைந்திருந்து அம்புதொடுத்த கொடும் பழியை, இராமன் அடுத்த பிறவியில் கண்ணனாகப் பிறந்தபொழுது அவன் கொன்று தீர்த்தான். எனவே யாராயிருந்தாலும் அவர்களுக்குக் கெடுதி செய்வதை விடு.

விளக்கம்
    வாலி – இராமாயணத்தில் வருபவன். கிட்கிந்தையின் அரசன். சுக்கிரீவனின் அண்ணன். எதிர்த்து நிற்பவரின் வலிமையில் பாதி தனக்கு வந்துசேருமாறு வரம் பெற்றவன். வாளி – அம்பு. வெம் – வெம்மை, கொடுமை. மேலொரு சென்மம் – அடுத்து வரும் பிறவி, இராமனது அடுத்த பிறவியான கண்ணன். ஞாலம் – உலகு. ஒல்லை – கடுமை, கேடு.

இராமன் கதை
    விட்டுணுவின் அவதாரமாகிய ஸ்ரீராமச்சந்திரன் கிட்கிந்தை மலையிலே குரங்குகளுக்குத் தலைவனாயிருந்த வாலியென்பவனை அவன் தம்பியாகிய சுக்கிரீவன் பொருட்டு மறைந்துநின்று அம்பெய்து கொன்றான். அவ்வாறு கொல்லப்பட்ட வாலி பின்னர் உலுப்தகன் என்னும் வேடனாகப் பிறந்து விட்டுணுவின் மற்றோர் அவதாரமாகிய கண்ணபிரானை ஒரு காட்டிலே படுத்திருக்கும்போது உள்ளங்காலிலே அம்பெய்து கொன்றான்.
(இக்கதை இலங்கைப் பதிப்பிற் கண்டவாறு)

கருத்து
    மற்றவர்களுக்குக் கெடுதி ஏற்படும் செயல்களைச் செய்யக் கூடாது என்பது பாடலின் மையக்கருத்தாகும்.
 
தொடர்ந்து சிந்திப்போம் . . .

முனைவர் இரா. கோகுல்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 641020 

No comments:

Post a Comment