இதழ் - 41 இதழ் - ௪௧
நாள் : 05-02-2023 நாள் : 0௫-0௨-௨௦௨௩
ஆத்திசூடி (ஔவை)
கேள்வி முயல்
உரை :
கற்றவர்கள் சொல்லும் நூற்பொருளைக் கேட்க முயற்சி செய்.
ஆத்திசூடிவெண்பா (இராமபாரதி)
பாடல் – 39:
முன்பகவற் கீதை முனியுரைக்கக் கன்னிமரந்
தன்படியே கேட்டு லகிற்றார் வேந்தர் – அன்புறல் போல்
மாதவனே புன்னை வனநாதா நன்மையுற
மூதறிவோர் கேள்வி முயல்.
உரை :
மாதவனான புன்னை வனநாதனே! முன் பொருநாள் முனிவனான கண்ண பெருமான் பகவத்கீதையை உரைக்க பச்சைமரத்தில் ஆணி பதிந்ததைப்போல் உலகிலுள்ள அரசர் கேட்டு மனதிற் கொண்டு அன்புற்றதைப் போல நன்மையுற வேண்டுமெனில் நீயும் முதிர்ந்த அறிவுடைய சான்றோர்கள் சொல்லும் நூற்பொருளைக் கேட்க முயற்சி செய்வாயாக.
விளக்கம் :
பகவத்கீதை – குருச்சேத்திரப் போர்க்களத்தில் கண்ணபெருமான் அர்ச்சுனனுக்கு உரைத்த அறிவுரைகளின் நூற்தொகுப்பு. முனி – கண்ணபெருமான். “முனியே நான்முகனே முக்கண்ணப்பா” என்பார் நம்மாழ்வார். கன்னிமரம் – இளமையான மரம், பச்சை மரம் என்பது வழக்கு.
பச்சை மரத்தில் ஆணி உறுதியாகப் பதிவதுபோல கண்ண பெருமான் உரைத்த பகவத்கீதை கேட்ட அரசர் உள்ளத்தில் ஆழப்பதிந்தது. தார்வேந்தர் – உலைகையாளும் அரசர். மாதவன் – திருமால்; அரசரைத் திருமால் என்றழைப்பது வழக்கம். மூதறிவோர் – முதிர்ந்தஅறிவுடையோர். நன்கு கல்வி கற்றார். கேள்வி – மூதறிவோர் சொல்லும் நூற்பொருள், கேட்க முயல் என்கிறார். “செல்வத்துள் செல்வம் செவிச் செல்வம்” என்றும் எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும் ஆன்ற பெருமை தரும்” என்றும் வள்ளுவர் சொல்வது நோக்கத்தக்கது.
கருத்து :
கல்வியறிவுடையோர் சொல்லும் நூற்பொருளைக் கேட்டு உள்ளத்தில் பதிக என்பது பாடலின் மையக்கருத்தாகும்.
தொடர்ந்து சிந்திப்போம் . . .
முனைவர் இரா. கோகுல்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 641020
No comments:
Post a Comment