பக்கங்கள்

ஆத்திசூடி வெண்பா-40

இதழ் - 42                                                                                           இதழ் - ௪
நாள் : 12-02-2023                                                                            நாள் : ௧௨-0௨-௨௦௨௩

 
ஆத்திசூடி (ஔவை)

கைவினை கரவேல்

உரை : 
     உனக்குத் தெரிந்த கைத்தொழிலை ஒளியாதே.

ஆத்திசூடிவெண்பா (இராமபாரதி)

பாடல்–40

            இந்திரன்வாள் வைக்க எடுத்துமுன் முற்கலனார்
            தந்தருமம் விட்டுத் தவமிழந்தார் – சந்ததமும்
            பாகையில்வாழ் புன்னைவன பார்த்திவா வாகையினா
            லேகை வினைகர வேல்

உரை
     பாகையில் வாழும் புன்னைவன நாதனே! இந்திரன் தனது வாளை எடுத்து தவஞ்செய்துகொண்டிருந்த முற்கல முனிவர் முன்வைக்க அவர் தவஞ்செய்யும் தன்செயலைவிடுத்து கொலைத்தொழிலை மேற்கொண்டு தவ விளைவை இழந்தார். ஆகையினால் எப்பொழுதும் உனது தொழிலை ஒளியாமல் செய்.

விளக்கம்
     முற்கலனார் – முற்கலமுனிவர். பிரம்மனுடைய மனத்திற் பிறந்த முனிவரான அங்கிரர் என்பவரின் கணங்களுள் ஒருவர். தவம் செய்பவரான முற்கலமுனிவர் அந்தத் தருமத்தை விடுத்து கொலை செய்ததால் தனது தவத்தின் ஆற்றலை இழந்தார். தவமிழந்தார் – தவத்தினால் பெற்ற பயனை இழந்தார் என்க. சந்ததமும் – எப்பொழுதும். தனது செயலான தவத்தை விடுத்து கொலைத்தொழிலைச் செய்ததால் முற்கலமுனிவர் தவமிழந்தார். எனவே நீயும் உனது செயலை ஒளியாமற் செய் என்பது ஆசிரியர் கருத்து.

     பிரம்மதேவருடைய மனத்திலே பிறந்த முனிவர் பதின்மர். அவர் மநு, மரீசி, புலத்தியன், தக்கன், புயகன், அங்கிரர், வசிட்டன், பிருகு, அந்திரி, கிருது என்போர். அவருள்ளே அங்கிரர் என்னும் முனிவர் கணத்தோர் முப்பத்துமூவர். அவர் அங்கிரசு, மாந்தாதா, புருகுச்சன், முற்கலன் முதலியோர். அவருள்ளே முற்கலமுனிவர் தவஞ்செய்யுங் காலத்திலே அத்தவத்தைக் கெடுக்க நினைத்த இந்திரன் வாட்படையைக் கொண்டுபோய் அம்முனிவருக்கு முன்வைத்தான். அம்முற்கலமுனிவர் அவ்வாட்படையை எடுத்து மரங்களையன்றிப் பலமிருகங்களையும் வெட்டிக் கொன்றார். வாளெடுத்து வெட்டிய காரணத்தினாலே தம்முடைய தருமமுந் தவமுமிழந்து நரகயாதனையும் பெற்றார்.
(இக்கதை இலங்கைப் பதிப்பிற் கண்டவாறு)

கருத்து
     உனக்குத் தெரிந்த கைத்தொழிலை ஒளியாமல் செய்க என்பது பாடலின் மையக்கருத்தாகும். 



தொடர்ந்து சிந்திப்போம் . . .

முனைவர் இரா. கோகுல்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 641020
 
 
 
 

No comments:

Post a Comment