இதழ் - 43 இதழ் - ௪௩
நாள் : 19-02-2023 நாள் : ௧௯-0௨-௨௦௨௩ ஆத்திசூடி (ஔவை)
கொள்ளை விரும்பேல்
உரை
மிகுதியான பொருள் கொள்ளுதலை விரும்பாதே. பிறர்பொருளைக் கொள்ளை கொள்ளுதலை விரும்பாதே என்றும் பொருள் கொள்ளப்படுகிறது.
ஆத்திசூடிவெண்பா (இராமபாரதி)
பாடல்–41
கொட்டமிட்டே யுத்தரத்திற் கோக்கொள்ளை யாடவந்ததுட்டனர வக்கொடியோன் தோற்றிடுக்கண் – பட்டதனால்
நீதிபரா புன்னைவன நேயனே யேதெனினும்
பேதைமையாக் கொள்ளைவிரும் பேல்
உரை
நீதியின் பாதுகாவலனான புன்னைவன நேயனே! மிகுந்த ஆரவாரத்துடனும் இறுமாப்புடனும் விராடநாட்டில் ஆநிரைகளைக் கவர்ந்துசெல்ல வந்த துட்டனான பாம்புக்கொடியுடைய துரியோதனன் அதில் தோற்றதோடு பல துன்பங்களுக்கும் ஆளானான். ஆதலால் என்னாவானாலும் அறிவற்று பிறர்பொள்ளைக் கொள்ளையாட விரும்பாதே.
விளக்கம்
கொட்டம் – இறுமாப்பு, ஆரவாரம். உத்தரம் – மேல், இவண் விராட நாட்டைக் குறித்தது. கோ – பசு, ஆநிரை. கோக்கொள்ளை – ஆநிரைகளைக் கொள்ளையடித்துச் செல்லுதல். போருக்கான ஆயத்தச்செயல்பாடு. தமிழ் இலக்கியங்கள் இதனை ‘வெட்சி’ என்று பாடுகின்றன. துட்டன் – கொடியவன், துஷ்டன் என்பதன் தமிழ்ழெழுத்து வடிவம். அரவம் – பாம்பு, அரவக்கொடியோன் – பாம்புக்கொடியுடைய துரியோதனன். இடுக்கன் – துன்பம் – விராட நாட்டில் ஆநிரைகளைக் கவரப் போய் அங்கு மறைந்து வாழ்ந்துகொண்டிருந்த பாண்டவர்களில் ஒருவனான அருச்சுனனால் தாக்கப்பட்டு பெருந்துன்பத்திற்கு ஆளான செயலை இவண் ஆசிரியர் சுட்டுகிறார். நேயன் – நேசன், அன்புடையவன். பேதைமையா – அறிவற்றவனாக. பிறர் பொருளைக் கவர்தல் நமக்கு நாமே தீங்கு செய்துகொள்ளும் அறிவற்ற செயல் என்பதை பேதைமையாக் கொள்ளை விரும்பேல் என்றார்.
துரியோதனன் கதை
பாண்டவர்கள் விராடபுரத்திலே வசிக்கும்பொழுது விராடனுடைய பசுக்களைக் கவரவந்த துரியோதனன் பக்கத்தார்க்கும் விராடன் பக்கத்தார்க்கும் யுத்தம் நடந்தது. அப்பொழது துரியோதனனும் வந்து பேடிவடிவத்தோடும் அங்கே இருந்த அருச்சுனனாலே முடியும் பங்கப்பட்டு தோல்வியும் பெற்றுத் துயரமடைந்தான்.
(இக்கதை இலங்கைப் பதிப்பிற் கண்டவாறு)
கருத்து
பிறர் பொருளைக் கொள்ளை கொள்ளாதே என்பது பாடலின் மையக்கருத்தாகும்.
தொடர்ந்து சிந்திப்போம் . . .
முனைவர் இரா. கோகுல்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 641020
No comments:
Post a Comment