பக்கங்கள்

ஆத்திசூடி வெண்பா-42

இதழ் - 44                                                                                          இதழ் -
நாள் : 26-02-2023                                                                           நாள் : -0௨-௨௦௨௩
 
ஆத்திசூடி (ஔவை)

” கோதாட்டு ஒழி ”

உரை
    குற்றச் செயல்களை ஒழித்துவிடு.

ஆத்திசூடிவெண்பா (இராமபாரதி)

பாடல்–42
    நம்பனுக்காஞ் செவ்வந்தி நன்மலர்வே சிக்களித்த
    செம்பியனு மண்மழையாற் சீரழிந்தான் – அம்புவியில்
    எவ்வாறும் புன்னைவன மென்னுமுகி லேநீதிக்
    கொவ்வாத கோதாட் டொழி

உரை
    புன்னைவன நாதன் என்னும் வள்ளலே! சிவபெருமானுக்கான செவ்வந்தி மலரை சோழ மன்னன் தனது விருப்பமாதுவிற்கு அளித்ததால் அவன் நாட்டில் மண்மழைபெய்து நாடும் அவனும் அழிந்துபோயினர். இந்த உலகத்தில் என்ன நேர்ந்தாலும் அறத்திற்கு ஒவ்வாத குற்றச் செயல்களில் ஈடுபடாதே.
 
விளக்கம்
    நம்பன் – சிவபெருமான். “நம்பனே எங்கள் கோவே” என்பது தேவாரம். செம்பியன் – சோழன். சீரழிந்தான் – பெருமையிழந்தான். அம்புவி – அழகான உலகம். “அம்மே அழகு” என்பது தொல்காப்பியம். கோதாட்டு – குற்றச் செயல்.

செம்பியன் கதை
    சாரமாமுனிவர் என்பவர் திரிசிராமலையை அடைந்து சிவபூசை செய்துவரும் நாளில் ஒருநாள் அங்கே நாக்ன்னிகைகள் கொண்டுவந்து பூசித்த நறுமணமிக்க செவ்வந்தி மலரைக் கண்டு தாமும் அம்மலர்களாற் பூசிக்க விரும்பி அக்கன்னிகைகளோடு பாதாளத்தில் உள்ள நாகலோகம் சென்றார். அங்கிருந்து செவ்வந்திச் செடிகளைக் கொண்டுவந்து அங்கே உண்டாக்கி அம்மலராற் பூசித்து வந்தார். 
 
    அக்காலத்தில் உறையூரிலிருந்து அரசாண்டுவந்த பராந்தகன் என்னும் சோழ மன்னன் அம்மலர்களைப் பறித்துத் தனது விருப்பப்படி மங்கையர்களுக்கு அளித்து மகிழ்ந்தான். அதனை அறிந்த அம்முனிவர் சிவபெருமானுடைய சந்நிதியை அடைந்து முறையிடச் சிவபெருமான் அவனுடைய உறையூரிலே மண்மாரி பெய்யச் செய்தார். மண்மாரி பெய்து நகரமழிதலைக்கண்ட அவன் மனைவியையும் அழைத்துக்கொண்டு தன்னகரை விட்டு ஓடினான். ஓடியும் சிவபூசைக்குரிய மலரைக் கவர்ந்த குற்றத்தினாலே நகரோடழிந்து நரகமெய்தினான்.
(இக்கதை இலங்கைப் பதிப்பிற் கண்டவாறு)

கருத்து
    அறமற்ற, குற்றச்செயல்களில் ஈடுபடாதே என்பது பாடலின் மையக்கருத்தாகும்.

தொடர்ந்து சிந்திப்போம் . . .

முனைவர் இரா. கோகுல்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 641020

No comments:

Post a Comment