இதழ் - 45 இதழ் - ௪௫
நாள் : 05-03-2023 நாள் : 0௫-0௩-௨௦௨௩ உரை
அரசனது ஆணை (அல்லது) அரச அறத்தின் வழி நில்.
ஆத்திசூடிவெண்பா (இராமபாரதி)
பாடல் – 43
மண்டலத்திற் செங்கோல் வழியிற் செலுத்தாமற்
தண்டகனென் னும்ஒருவன் தான்மடியக் – கண்டதனால்
வேள்புரையும் புன்னைவன வித்தகா வெந்நாளும்
நீழ்சக் கரநெறி நில்
மண்டலத்திற் செங்கோல் வழியிற் செலுத்தாமற்
தண்டகனென் னும்ஒருவன் தான்மடியக் – கண்டதனால்
வேள்புரையும் புன்னைவன வித்தகா வெந்நாளும்
நீழ்சக் கரநெறி நில்
உரை
மதனவேள் போன்ற புன்னைவன வித்தகனே! தனது ஆட்சிநிலத்தினை செங்கோல் வழியில் ஆளாமல் தண்டகன் என்னும் அரசன் ஒருவன் அழிந்துபோனான். அதனால் நீ எந்நாளும் அனைவருக்கும் இன்பமளிக்கும் அரச அறத்தின் வழியாக நின்று ஆட்சிசெய்.
விளக்கம்
மண்டலம் – நிலப்பகுதி. செங்கோல் – நீதிவழுவா ஆட்சியின் அடையாளம். வேள் – மன்மதன். புரைய – போன்ற. நீழ் – நிழல். அரசனது ஆணை மக்களுக்கு நிழல் போல இன்பமளிக்க வேண்டும் என்பதை நீழ் சக்கரம் என்றார். சக்கரம் – அறத்தின் இயக்கம், அரசஆணை. அறவாழி என்பார் திருவள்ளுவர்.
தண்டகன் கதை
மனுமரபிலே தோன்றிய தண்டகன் என்பவன் தன்னாட்டினைத் தரும்மும் தயையுமின்றி அரசுசெய்துவரு நாளில் குருவாகிய சுக்கிரன் தவஞ்செய்யும் காட்டிலே போய்ச் சுக்கிரன் மகளைக் கண்டு மனமயங்கி அவளை வன்முறையால் அடைந்தான். அவளும் துக்கத்தோடு சென்று தன் தந்தையிடம் முறையிட்டாள். அவர் மிக்க சினங்கொண்டு “என் மகளுக்குத் தீரா இடும்பை செய்த தண்டகனும் அவனொடும் கிளையும் பிறவும் வெந்து பொடியாகுக” என்று சாபம் சொன்னான். அச்சாபத்தின்படியே அவனுடைய நாடும் காடாகித் தண்டகாரணியம் என்னும் பெயராயிற்று.
(இக்கதை இலங்கைப் பதிப்பிற் கண்டவாறு)
கருத்து
அரசன் அறத்தின்வழி நிற்க வேண்டும் என்பது பாடலின் மையக்கருத்தாகும்.
தொடர்ந்து சிந்திப்போம் . . .
முனைவர் இரா. கோகுல்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 641020
No comments:
Post a Comment