பக்கங்கள்

ஆத்திசூடி வெண்பா-44

இதழ் - 46                                                                                   இதழ் -  
நாள் : 12-03-2023                                                                     நாள் : ௧௨-0-௨௦௨௩
 
ஆத்திசூடி (ஔவை)

” சான்றோரினத்து இரு ”
 
 
உரை
    அறிவும் ஒழுக்கமும் நிறைந்த பெருமக்கள் கூட்டத்தில் எந்நாளும் இரு.
 
ஆத்திசூடிவெண்பா (இராமபாரதி)
 
பாடல் – 44
    ஈசனுமை மணத்திலே வடதிக்கு ஆழ்ந்ததெனக்
    காசினி சீராக்கக் கலசமுனி – வாசமுற்றச்
    செய்ததுபார் புன்னைவன தீரனே அப்படிச்சீர்
    எய்துஞ்சான் றோரினத் திரு.
 
உரை விளக்கம் :
     புன்னைவன தீரனே! சிவபெருமானுக்கும் உமையம்மைக்கும் இமயமலைத்தொடரில் திருமணம் நிகழ அங்கு தேவர்களும் பல்லுலகத்து உயிரிகளும் கூடியதால் வடதிசை தாழ்ந்தது. உலகத்தைச் சீராக்க கலசத்திற் பிறந்த முனிவராகிய அகத்தியர் தென்திசை நோக்கி வந்தார். உலகம் சீரானது. அப்படிப்பட்ட பெருமை வாய்ந்த சான்றோருடன் என்றும் இணக்கமாக இரு.
 
விளக்கம் :
     ஈசன் – சிவபெருமான். வடதிக்கு – வடதிசை. காசினி – உலகம். கலசமுனி – அகத்தியர். கலசத்திற் பிறந்ததால் அகத்தியர் கலசமுனி என்று அழைக்கப்படுகிறார். பெரிது பெரிது எனத்தொடங்கு ஔவையாரின் தனிப்பாடல் “குறுமுனியோ கலசத்திற் பிறந்தோன்” என்று கூறுகிறது. சீர் – ஒழுங்கு, பெருமை.  
 
அகத்தியர் கதை
    இமயமலையிலே சிவபிரானுக்கும் உமாதேவிக்கும் நடந்த கல்யாணத்தைத் தரிசிக்குமாறு பலரும் போய்ச் சேர்ந்தபோது பாரம்மிகுந்து பூமியின் வடபக்கம் தாழத் தென்பக்கம் உயர்ந்தது.  உலகம் முழுவதும் நிலை குலைந்தது. தேவரும் பிறரும் வருந்திச் சிவனேயென்றிரங்கினர். யாவரும் இரங்குதலைச் சிவபெருமான் உணர்ந்து பூமியைச் சமப்படுத்தக் கருதி அகத்திய முனிவரை அழைத்துத் தெற்கேயுள்ள பொதியமலையிலே போயிருக்கும்படி கட்டளையிட்டார். அப்படியே அகத்தியரும் பொதியமலையிலே போயிருந்து பூமியைச் சமமாக்கினார்.
(இக்கதை இலங்கைப் பதிப்பிற் கண்டவாறு)
 
கருத்து
     சான்றோர்களின் தொடர்பில் எந்நாளும் இருக்க வேண்டும் என்பது பாடலின் மையக்கருத்தாகும்.
 
தொடர்ந்து சிந்திப்போம் . . .

முனைவர் இரா. கோகுல்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 641020

No comments:

Post a Comment