இதழ் - 47 இதழ் - ௪௭
நாள் : 19-03-2023 நாள் : ௧௯-0௩-௨௦௨௩ ஆத்திசூடி (ஔவை)
” சித்திரம் பேசேல் ”
உரை
பாதகிமூக்கு அன்றிழந்த பங்கம்பார் – ஆதலினால்
தாரணிக்குட் புன்னைவனத் தாளாளா தன்னையெண்ணாச்
சேரலர்க்குச் சித்திரம் பேசேல்
பொய்மொழிகளை மெய்போலப் பேசாதே.
ஆத்திசூடிவெண்பா (இராமபாரதி)
பாடல் – 45
சீதைபண்பு இராவணற்குச் செப்பிக் குலங்கெடுத்தபாதகிமூக்கு அன்றிழந்த பங்கம்பார் – ஆதலினால்
தாரணிக்குட் புன்னைவனத் தாளாளா தன்னையெண்ணாச்
சேரலர்க்குச் சித்திரம் பேசேல்
உரை விளக்கம் :
புன்னைவனத் தாளாளா! சீதையின் அழகுநலன்களைத் தனது தமையன் இராவணனுக்குச் சொல்லி அதனால் இராவண குலமே அழியக் காரணமாயிருந்த பாதகியாகிய சூர்ப்பணகை இலக்குவனால் அன்று மூக்கு அறுக்கப்பட்டதைப் பார்ப்பாயாக. ஆதலினால் உலகத்துள் தன்னை எண்ணாத பகைவர்களுக்குப் பொய்மொழிகளைக் கூறாதே.
விளக்கம் :
சீதைபண்பு இராவணனுக்குச் செப்பிக் குலங்கெடுத்த பாதகி – சூர்ப்பணகை. இராவணனின் தங்கை. பாதகி – கொடுமையை ஏற்படுத்துபவள். இராவணன் குலம் அழிவதற்கு அவன் தங்கை சூர்ப்பணகை சொன்ன சொற்களே காரணமாக அமைந்ததால் அவளைக் குலங்கெடுத்த பாதகி என்றார். பங்கம் – குற்றம். தாரணி – உலகம். சேரலர் – பகைவர். சூர்ப்பணகை, சூர்ப்பநகி என்று எழுதும் வழக்கம் காணப்படுகிறது. கம்பராமாணயனம் சூர்ப்பணகைப் படலம் என்று குறிப்பிடுகிறது. ஆத்திசூடி வெண்பா கதைக் குறிப்புகளில் சூர்ப்பநகி என்றுள்ளது.
சூர்ப்பநகி கதை
சுமாலி என்பவனுடைய மகளாகிய கைகசி என்பவளிடத்திலே விச்சிரவா என்னும் முனிவனுக்கு இராவணன் முதலிய புத்திரர்களும் சூர்ப்பநகை என்பவளும் பிறந்தார்கள். இந்தச் சூரப்பநகி தண்டகாரணத்திலே இராமலக்குமணர்களையும் சீதாப்பிராட்டியையுங் கண்டபோது இராமலக்குவரை விரும்பியும் தன் கருத்துச் சித்தியாகாது சீதாப்பிராட்டியைக் கவர்ந்துசெல்ல முயன்று இலக்குமணராலே மூக்குவெட்டப்பட்டாள். பின்னர் இராவணனிடம்போய்ச் சீதாப்பிராட்டியுடைய அழுகு முதலியவைற்றை அறிவித்தாள். இராவணன் வந்து சீதாப்பிராட்டியைக் கவர்ந்துபோனான். பின்னர் இராமசுவாமிபோய் இராவணன் முதலியோரைக் கொன்றார். ஆதலால் தன்குலம் கெடுதற்குச் சூர்ப்பநகியே காரணமாயினாள்.
(இக்கதை இலங்கைப் பதிப்பிற் கண்டவாறு)
கருத்து
பொய்ச் சொற்களை உண்மைபோலச் சொல்லுதல் கூடாது என்பது பாடலின் மையக்கருத்தாகும்.
தொடர்ந்து சிந்திப்போம் . . .
முனைவர் இரா. கோகுல்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 641020
No comments:
Post a Comment