பக்கங்கள்

ஆத்திசூடி வெண்பா-48

 

இதழ் -  50                                                                                         இதழ் - 0

நாள் : 09-04-2023                                                                           நாள் : 0-0-௨௦௨௩
 
 
ஆத்திசூடி (ஔவை)
” சூது விரும்பேல் ”
உரை
    எக்காரணத்திற்காகவும் சூதாடாதே.
 
ஆத்திசூடிவெண்பா (இராமபாரதி)
 
பாடல் – 48
    தோராத நூற்றுவரும் தோற்றபஞ்ச பாண்டவரும்
    பாரே யகன்றுபட்ட பாரதம்பார் – பேராண்மை
    வற்றாத புன்னைவன மாகடலே – மிக்கசெல்வம்
    பெற்றலுஞ் சூதுவிரும் பேல்

உரை விளக்கம் :
    பேராண்மை குன்றாத புன்னைவன மாகடலே! கௌரவர்கள் நூற்றுவரும் பாண்டவர்கள் ஐவரும் உலகியலை அகன்று பாரதப் போருக்கு வழிவகுத்தது காண். எவ்வளவு செல்வம் பெற்றாலும் சூதாட்டத்தை மட்டும் விரும்பிவிடாதே.
 
விளக்கம் : 
     நூற்றுவர் – கௌரவர்கள், திருதராட்டிரன், காந்தாரியின் மக்கள். பஞ்சபாண்டவர் – பாண்டு, குந்தி, மாத்ரியின் மக்கள் ஐவர். பேராண்மை – பேராளுமை.

பாரதக் கதை
    பாரத வீரர்களாகிய நூற்றுவர் ஐவர் என்னும் இருபாலருள்ளே தருமன் முதலிய ஐவரும் துரியோதனன் முதலிய நூற்றுவரோடுஞ் சூதாடி இராச்சியமும் இழந்து காட்டை அடைந்தார்கள். நூற்றுவரும் இராச்சியம் பெறவந்த ஐவரோடும் போராடி இறந்தார்கள்.
(இக்கதை இலங்கைப் பதிப்பிற் கண்டவாறு)

கருத்து
     எதற்காகவும் சூதினை விரும்பாதே என்பது பாடலின் மையக்கருத்தாகும்.
 

தொடர்ந்து சிந்திப்போம் . . .

முனைவர் இரா. கோகுல்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 641020

No comments:

Post a Comment